Spotlightசினிமா

விஜயானந்த் – விமர்சனம் 3.25/5

நிஹால், சிரி பிரகலாத், ஆனந்த் நாக், வினயா பிரசாத் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் ரிஷிகா சர்மாவின் இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படம் தான் “விஜயானந்த்”.

கர்நாடகாவில் மிகப்பெரும் தொழிலதிபரான விஜய் சங்கேஸ்வரரின் வாழ்க்கை வரலாறை தழுவி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு மிகப்பெரும் லாஜிஸ்டிக் நிறுவனமான வி ஆர் எல் நிறுவனம் எப்படி உருவானது என்பதை இப்படத்தின் மூலம் அவர்கள் கூறியுள்ளனர்.

கதைப்படி,

விஜய் சங்கேஸ்வரராக நடித்திருக்கிறார் நிஹால். அவரின் மனைவியாக நடித்திருக்கிறார் சிரி பிரகலாத். இவர்களின் மகனாக நடித்திருக்கிறார் பாரத் போபனா.

விஜய் சங்கேஸ்வரரின் தந்தையான பி.ஜி. சங்கேஸ்வரருக்கு மூன்று மகன்கள். அதில் ஒருவர் தான் விஜய் சங்கேஸ்வர். பிரிண்டிங்க் பிரஸ் நடத்தி வந்த பி.ஜி. சங்கேஸ்வர், தனது மகன்களுக்கும் அதே தொழிலைக் கற்றுக் கொடுத்தார்.,

தொடர்ந்து தொழிலை நேர்த்தியாக கற்றுக் கொண்ட விஜய் சங்கேஸ்வர், தொழிலை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் சென்றார். இந்த தொழிலை மட்டும் செய்து வந்தால் பெரிதாக சாதிக்க முடியாது என்று லாரி சர்வீஸ் தொழில் செய்ய முன்வந்தார்.

ஆனால், அவரது தந்தையோ அதற்கு சம்மதம் தெரிவிக்காததால், அதையும் தாண்டி தொழிலில் இறங்கினார்.

வங்கியில் கடன் வாங்கி, ஒரு லாரியை வாங்கிக் கொண்டு தனது தொழிலை தொடங்கினார். எதிர்பார்த்த அளவிற்கு எதுவும் லாபமில்லாமல், தொடர்ந்து தோல்வியை சந்தித்தார். இருந்தாலும், நம்பிக்கையை மூலதனமாகக் கொண்டு 4 லாரிகளை வாங்கினார்.

தொடர்ந்து தொழிலில் வளர்ச்சியடைந்தார். அதன்பிறகும் என்ன மாதிரியான இன்னல்களை சந்தித்து மிகப்பெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கினார் என்பது படத்தின் மீதிக் கதை.

விஜய் சங்கேஸ்வரராக நிஹால் தனது சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். அவரின் உடல்வாகு மொழியை அப்படியே தத்ரூபமாக கொடுத்து காட்சிக்கு காட்சி உயிர் கொடுத்திருக்கிறார். இவரின் மனைவியாக நடித்த சிரி பிரகலாத்தும் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.

கதையின் பாதியிலேயே தன்னை இணைத்துக் கொள்கிறார் விஜய் சங்கேஸ்வரரின் மகனான ஆனந்த் சங்கேஸ்வர். இவரின் கதாபாத்திரமும் வலுவாக கதையில் இணைக்கப்பட்டுள்ளது.

பயோபிக் என்றாலும், அதை சொல்லும் விதத்தில் எந்த சமரசமும் இல்லாமல் மிகவும் நேர்த்தியாக கதையை கூறி படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் ரிஷிகா சர்மா. ஒவ்வொரு காட்சியையும் அவ்வளவு தெளிவாகவும் அவ்வளவு அழகாகவும் காட்சிப்படுத்தி அதை ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர்.

கதையின் ஓட்டத்தில் சற்று வேகமும், கமர்ஷியலையும் கதையோடு இணைத்திருந்தால் விஜயானந்த் இன்னமும் கொண்டாடப்பட்டிருக்கலாம்.

கோபி சுந்தரின் இசையில் பாடல்கள் ”சூப்பர்” என்று சொல்ல வைத்துவிட்டார். பின்னணி இசையும் கதையோடு சேர்ந்து ஓட்டம் எடுத்துள்ளது.

கீர்த்தன் பூஜாரியின் ஒளிப்பதிவு ஒவ்வொரு காலக்கட்டத்தையும் அவ்வளவு அழகாக காட்டியிருக்கிறது. ஒவ்வொரு காட்சிகளின் மெனக்கெடலுக்கும் பலன் கிடைத்துள்ளது.

மொத்தத்தில்

விஜயானந்த் – சாமானியன் உருவாக்கிய சாம்ராஜ்யத்தின் வரலாறு

Facebook Comments

Related Articles

Back to top button