
ஒரு மலைப்பகுதியில், போலீஸ் இன்ஸ்பெக்டராக இருக்கிறார் நட்டி(எ)நட்ராஜ், அதே பகுதியில் பங்களா வீடு ஒன்று வாங்குவதற்காக தன் கையிலுள்ள கருப்பு பணம் சுமார் 5 கோடி ரூபாயை காரில் எடுத்து செல்கிறார் ராம்கி.
அப்போது, காரிலுள்ள பணப்பெட்டி திருடு போக, அதை கண்டு பிடிக்க களமிறங்குகிறது நட்டி போலீஸ் தலைமையிலான குழு. நண்பர்கள் மூன்று பேர் அந்த பெட்டியை திருடி செல்ல அவர்களிடமிருந்து வேறொருவர் திருடி செல்கிறார். அதன் பின் அவரிடம் இருந்து மற்றொருவர் என கிட்டத்தட்ட 6 பேரிடம் பணப்பெட்டி கை மாறி செல்கிறது.
பல பேரிடம் கை மாறி செல்லும் அப்பெட்டியை நட்டி கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பது மீதிக்கதை..
எப்போதும் போல தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து முடித்தாலும், வரிசையாக அனைத்து படத்திலும் ஒரே மாதிரியான உடல் மொழி நடிப்பை பார்த்து பார்த்து சற்று சலிப்பு ஏற்படுகிறது நட்டி சாரே… சற்று கவனம் கொள்ளவும்.
வழக்கம் போல் ஓவர் ஆக்டிங்கை ஓவராக கொடுத்து சற்று கடுப்பேத்திருக்கின்றனர் ரவி மரியாவும் மனோபாலாவும்…
நட்டியின் மனைவியாக பூனம் பஜ்வா பெரிதான காட்சிகள் இல்லை என்றாலும் கொடுக்கப்பட்ட காட்சிக்கு உயிர் கொடுத்திருக்கிறார். பணத்தை கைப்பற்ற நினைக்கும் சஞ்சனா சிங், அஸ்மிதா இருவரையும் ஒரு பாடலுக்கு நடனமாடுவதோடு நிறுத்தியிருக்கலாம் போல.. கொஞ்சமாவது நடிங்க
மொட்டை ராஜேந்திரனின் காமெடி சரவெடி ஒரு சில இடங்களில் மட்டுமே வெடித்திருக்கிறது.
ஃபிரண்ட்ஸ் டாக்கீஸ் சார்பில் சிவசலபதி சாய்சரவணன் தயாரிப்பில் இப்படம் உருவாகியிருக்கிறது.
ராம்கி கதாபாத்திரத்தில் கடைசியாக வைக்கப்பட்ட ட்விஸ்ட் காட்சிகள் பலம்.
மற்றவரின் பணத்திற்கு எப்போதும் ஆசைப்படக் கூடாது என்பதை இப்படம் உணர்த்தினாலும், திரைக்கதை துள்ளி துள்ளிச் சென்றது சற்று சோதனையை ஏற்படுத்தி விட்டது.
நிறைய காட்சிகள் “க்ரீன் மேட்” பயன்படுத்தி எடுத்திருப்பது, அப்பட்டமாக தெரிந்தது.
காமெடியில் அதிரிபுதிரி என கொண்டு சென்றிருக்க வேண்டிய படத்தை “ஏன் சார் இப்படி”.. என்று கூற வைத்துவிட்டார் இயக்குனர் பி தனசேகரன்.
சத்யதேவ் உதயசங்கர் இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ஒளிப்பதிவில் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருந்திருக்கலாம். பின்னணி இசை ஓகே ரகம்.
குருமூர்த்தி – பத்தல பத்தல…