Spotlightவிமர்சனங்கள்

உழைப்பாளர் தினம் – விமர்சனம் 3/5

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் நாயகன் சந்தோஷ் நம்பிராஜன். தனது குடும்பத்திற்காக சிங்கப்பூரில் கஷ்டப்பட்டு வேலை பார்த்து வருகிறார். வயது ஏறிக் கொண்டே செல்ல, நண்பர்கள் அனைவரும் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்துகின்றனர்.

ஆனால், ஊரில் கடை ஒன்றை கட்டி முடித்துவிட்டு தான் திருமணம் செய்து கொள்வதாக கூறி விடுகிறார் சந்தோஷ். இந்நிலையில், விடுமுறை தினத்திற்கு தனது கிராமத்திற்கு வருகிறார் சந்தோஷ்.

பெற்றோரின் வற்புறுத்தலின் பேரில் நாயகி குஷியை திருமணம் செய்து கொள்கிறார் சந்தோஷ் நம்பிராஜன். திருமணம் முடிந்த 15 நாட்களில் தனது மனைவியை பிரிந்து மீண்டும் வேலைக்காக சிங்கப்பூர் பறந்துவிடுகிறார் சந்தோஷ்.

தான் கர்ப்பமாக இருப்பதாக சந்தோஷிடம் கூறுகிறார் மனைவி குஷி. கண்டிப்பாக பிரசவம் சமயத்தில் உடன் இருக்க வேண்டும் என்றும் கூறுகிறார் குஷி. ஆனால், சூழல் காரணமாக ஊருக்கு வர இயலாமல் போய் விடுகிறது சந்தோஷிற்கு. அதன்பிறகு இவர்களது வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.

நாயகன் சந்தோஷ் நம்பிராஜன், டூ லெட் மற்றும் வட்டார வழக்கு இரண்டு படங்களிலும் மிகவும் உயிரோட்டமான நடிப்பைக் கொடுத்து கதாபாத்திரத்தோடு ஒன்றியிருந்திருப்பார். அதுபோலவே இப்படத்திலும் மிகவும் யதார்த்தமான நடிப்பைக் கொடுத்து அசத்தியிருக்கிறார் சந்தோஷ் நம்பிராஜன்.

குடும்பங்களை விட்டு வெளிநாடுகளில் வேலை பார்க்கும் மனிதர்களின் மனநிலையை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் சந்தோஷ். அதிலும், தனது மனைவி பிரசவ வலியால் கத்துவதை கேட்டு, அலறியடித்து ஓடும் காட்சியில் கண்களில் ஈரத்தை எட்டிப் பார்க்க வைக்கும்படியான நடிப்பைக் கொடுத்திருந்தார் சந்தோஷ். ஒரு சில இடங்களில் கைதட்டல் கொடுக்கும்படியான நடிப்பைக் கொடுத்து அசர வைத்துவிட்டார் சந்தோஷ்.

கணவனின் மீது மனைவி எம்மாதிரியான காதலை, அன்பை வெளிப்படுத்துவாள் என்பதை யதார்த்தமான நடிப்பின் மூலம் வெளிக்காட்டியிருக்கிறார் நாயகி குஷி.

இளைஞர்களும் குடும்பத்தார்களும் வெளிநாடுகளில் கஷ்டப்படுகிறார்கள் என்பதை மீண்டும் மீண்டும் காட்சிப்படுத்திருப்பதை தவிர்த்திருந்திருக்கலாம்.

இசை ஓகே ரகமாக கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. ஒளிப்பதிவு யதார்த்தமான சினிமாவை அடையாளப்படுத்தியிருக்கிறது.

இன்னும் சற்று உயிரோட்டமான திரைக்கதையை படைத்திருந்திருக்கலாம்.

மொத்தத்தில்,

உழைப்பாளர் தினம் – வாழ்வியல்

Facebook Comments

Related Articles

Back to top button