
அறம் என்டர்டெயின்மென்ட் , ஸ்ரீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்திருக்கும் படம் தான் “காலங்களில் அவள் வசந்தம்”.
கௌஷிக் ராம், அஞ்சலி நாயர், ஹீரோஷினி, மேத்திவ் வர்கீஸ், லொள்ளுசபா சாமிநாதன், RJ விக்னேஷிகாந்த் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “காலங்களில் அவள் வசந்தம்”.
ஹரி எஸ் ஆர் இசையமைக்க ராகவ் மிர்தாத் எழுதி இயக்கியிருக்கிறார். ஜெமினி கணேசன் நடித்து வெளிவந்த அழகான காதல் பாடலின் முதல் வரியை படத்தின் தலைப்பாக வைத்திருக்கும் போதே தெரிகிறது இப்படம் முழுக்க முழுக்க காதல் காவியத்தை பறைசாற்ற வந்திருக்கிறது என்று..
இதுவரை வந்த காதல் படங்களோடு பத்தோடு பதினொன்றாக ”காலங்களில் அவள் வசந்தம்” படம் இருக்கிறதா.? அல்லது தனித்து நிற்கிறதா.? என்பதை இந்த விமர்சனம் மூலம் பார்த்து விடலாம்.
கதைப்படி,
சினிமாவில் வரும் காதல் மற்றும் ரொமான்ஸ் காட்சிகளை நிஜ வாழ்க்கையில் நடத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கும் நாயகன் ஷாமுக்கு (கௌசிக்), அதற்கு எதிர்மறையாக யதார்த்த வாழ்க்கையையும் காதலையும் விரும்பும் ராதே(அஞ்சலி) மனைவியாகிறார். இருவருக்கும் இடையே இருக்கும் ஒரு ஒற்றுமை என்றால் அது காதல் மட்டுமே.. திருமணமான புதிதில் இவர்களின் வாழ்க்கை அழகாக நகர்கிறது.
ஒரு நாள் ராதேவுக்கு ஷாமின் டைரி கிடைக்க, அவரின் முன்னாள் காதலிகளின் பட்டியலையும் சினிமாத்தனமான காதலையும் அறிந்து கொள்கிறார் ராதே. இதன் பின் இவர்கள் இருவருக்கும் இடையில் விரிசல் ஏற்படுகிறது.
ராதே விரும்பும் யதார்த்த கணவனாக ஷாம் மாறினாரா?? இல்லை இவர்களின் திருமண வாழ்க்கை முடிந்ததா.??? என்பதே படத்தின் மீதிக் கதை…
படத்தின் பெரிய பலமே, கதாபாத்திரங்களின் தேர்வு தான்.ஒவ்வொரு கதாபாத்திரமும் கதையோடு ஒன்றி நம்மையும் கதையோடு இழுத்துச் சென்றிருக்கிறார்கள்.
கதைக்களம் மற்றும் திரைக்கதை இரண்டையும் ஒருசேர பயணிக்க வைத்து அசத்தியிருக்கிறார் இயக்குனர் ராகவ். வசனங்களும் நம்மை ஈர்க்கும்படியாகவும் கவரும்படியாகவும் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார்கள்.
காட்சிக்கு காட்சி நம் கண்களை கவரக்கூடிய வகையில் ஒளி கொடுத்து வெளிச்சம் பாய்ச்சிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கோபி. க்ளைமாக்ஸில் கொடுத்த சினிமாதனத்தை சற்று மாற்றியமைத்து யதார்த்த வாழ்வியலின் முடிவை கொடுத்திருந்தால் இன்னும் ரசனைக்கு பூஸ்ட் கொடுத்தாற் போல் இருந்திருக்கும்.
இசையமைப்பாளர் ஹரி எஸ் ஆர் படத்திற்கு பெரும் பலமாக வந்து நிற்கிறார். கோலிவுட்டில் இனி பல படங்களில் இவரின் பெயர் பதியப்படும்.
தேர்ந்தெடுத்த நடிப்பைக் கொடுத்து தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்திருக்கிறார் நாயகன் கெளசிக் ராம். வாழ்த்துகள் நாயகனே..
நாயகி அஞ்சலி, வழக்கம்போல் அழகோடு நடிப்பும் படத்திற்கு மெருகேற்றிருக்கிறது. கண்கள் பேசுகிறது ஆயிரம் கவிதைகள்… RJ விக்னேஷின் அளவான நடிப்பும், அழுத்தமான வசனமும் படத்திற்கு பலம்.
காலங்களில் அவள் வசந்தம் – இதமான வருடல்..





