
பெபின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கத்தில் ரூபா கொடுவாயூர், நரேந்திர பிரசாத், கீதா கைலாசம், ராஜூ ராஜப்பன், சுபாஷ் ராமசாமி, ஹரிதா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “எமகாதகி”.
படத்தின் போஸ்டர் மற்றும் ட்ரெய்லர் ஏற்கனவே வெளியாகி அனைத்து மக்களிடையே இருந்தும் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் சுஜித் சாரங். மேலும், இசையமைத்திருக்கிறார் ஜெசின் ஜார்ஜ்.
Naisat Media Works சார்பில் சீனிவாசராவ் ஜலகம் இப்படத்தினை தயாரித்திருக்கிறார்.
கதைக்குள் பயணித்துவிடலாம்….
தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு அழகிய கிராமம் தான் படத்தின் கதைக்களம். மேல் ஜாதி என எண்ணிக் கொண்டிருக்கும் சிலர், பொருளாதாரத்தில் பின் தங்கி இருப்பவர்களை கீழ் ஜாதி என எண்ணி அவர்களை எடுபிடி வேலைக்கு அமர்த்தும் பழக்கமானது அக்கிராமத்தில் இருக்கிறது.
அக்கிராமத்தின் முன்னாள் ஊர் கோவில் தர்மகர்த்தாவாக இருந்தவர், தனது மகன் வேறு சமூக பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் தன்னால் ஊரில் தலைநிமிர்ந்து நடக்க முடியவில்லை என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்.
அந்த ஊரின் தலைவராக இருப்பவர் ராஜூ ராஜப்பன். இவரின் மனைவியாக வருபவர் கீதா கைலாசம். இவர்களுக்கு ரூபா கொடுவாயூர் மகளாகவும் சுபாஷ் ராமசாமி மகனாகவும் வருகின்றனர்.
சிறுவயதிலிருந்தே அவ்வப்போது மூச்சு விடுவதில் சிரமம் உண்டு ரூபாவிற்கு. இதனால், சுவாச மருந்தை எடுத்துக் கொள்வார் ரூபா.
சுபாஷ் ராமசாமிக்கு திருமணமாகி அவரது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். தனது நண்பர்கள் மூவருடன் சேர்ந்து ஊர் கோவிலில் இருக்கும் சாமியின் கிரீடத்தைத் திருடி தொழில் தொடங்கி, அந்த தொழிலும் நஷ்டத்தில் முடிந்து விடுகிறது.
இன்னும் இரு வாரத்தில் ஊர்த் திருவிழா நடைபெற இருப்பதால் சுபாஷும் அவரது நண்பர்களும் அடமானம் வைத்த கிரீடத்தை எப்படியாவது மீட்டெடுக்க வேண்டும் என்று ஓடிக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், கடும் கோபத்துடன் வீட்டிற்கு வரும் ராஜூ, தனது மனைவியுடன் சண்டை போட்டு அவரை கைநீட்டி அடித்து விடுகிறார். அம்மாவை எதற்காக அடித்தீர்கள்.? என்று கேள்வியெழுப்ப ரூபாவையும் அடித்து விடுகிறார் ராஜூ. இதனால், அழுது கொண்டே தனது ரூமிற்கு சென்று விடுகிறார் ரூபா.
தொடர்ந்து நள்ளிரவில் எழுந்த கீதா கைலாசம், தனது மகள் வீட்டிற்கு தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைகிறார். வீட்டில் அனைவரும் கதறி அழ, சுபாஷ் தனது நண்பர்களை வீட்டிற்கு அழைக்கிறார்.
தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது ஊருக்கு தெரிந்தால், குடும்ப கெளரவம் போய்விடும் என்றறிந்து மூச்சுத் திணறலால் ரூபா இறந்து விட்டதாக கூறிவிடுகின்றனர் ரூபாவின் வீட்டில் இருப்பவர்கள்.
ரூபாவின் மரண செய்தியறிந்து கிராமமே துக்கத்தில் மூழ்கி விடுகிறது. ஊரே கூடிவந்து ரூபாவின் வீட்டில் துக்கத்தை பகிர்ந்து கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், இறுதி சடங்கிற்காக ரூபாவின் உடலை கிராமத்துஇளைஞர்கள் சிலர் தூக்க முயல, பெரும்கனமாக அவரது உடல் கனக்க, அவர்களால் அந்த உடலை தூக்க முடியவில்லை. தொடர்ந்து தூக்க முயல, பிணம் அசைவதைக் கண்டு இளைஞர்கள் தெறிந்து ஓடுகின்றனர்.
தொடர்ந்து மற்றும் சிலர் சென்று உடலை தூக்க முயற்சிக்க, ரூபாவின் உடல் தானாக எழுந்து அமர, வீட்டில் இருந்த அனைவரும் தலை தெறிக்க வெளியே ஓடுகின்றனர்.
ரூபாவின் உடலை வீட்டை விட்டு வெளியே எடுத்துச் செல்ல முடியாத அளவிற்கு தடுப்பது எது.? அதற்கான காரணம் என்ன.? உண்மையாகவே ரூபா தூக்கிட்டு தான் தற்கொலை செய்து கொண்டாரா.? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு விடை இருக்கிறது இரண்டாம் பாதியில்.
எமகாதகி என்ற பெண்ணை மையப்படுத்தி வைத்திருக்கும் டைட்டிலுக்கு ஏற்றவாறு, அம்மூல கதாபாத்திரத்தை பலமாக தாங்கி நின்று படத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார் நாயகி ரூபா கொடுவாயூர். காதல், அழுகை, கோபம், குறும்புத்தனம் என பல இடங்களில் தனது முக பாவனைகளை மிக அழகான க்யூட் நடிப்பில் கொடுத்து லீலா கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். அதிலும், பிணமாக இருக்கும் காட்சியில் அழகாக பயமுறுத்தியிருக்கிறார் ரூபா. தமிழ் சினிமாவிற்கு நல்லதொரு ஹீரோயின் கிடைத்திருக்கிறார் என்பதில் மகிழ்ச்சி தான்.
கதையின் நாயகனான நரேந்திர பிரசாத், அன்பு என்ற கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். யூ டியுப் தளத்தில் ஏற்கனவே நன்றாக அறிமுகமான முகமாக இருப்பதால், எளிதாக நரேந்திர பிரசாத்தை நம்மால் ஏற்றுக் கொள்ளவும் முடிகிறது. மேலும், தனக்குக் கொடுக்கப்பட்டதை மீட்டர் அறிந்து அதற்குள்ளே நடித்து முடித்திருக்கிறார் நரேந்திர பிரசாத்.
மாமன்னன், சார்பட்டா பரம்பரை, அமரன் உள்ளிட்ட பல படங்களில் அம்மா கேரக்டரில் நடித்த கீதா கைலாசம், இப்படத்திலும் அம்மா கதாபாத்திரத்தை மிகவும் யதார்த்தமாக நடித்து மனதில் பதிந்திருக்கிறார். க்ளைமாக்ஸ் வரையிலும் நடிப்பில் பெரிதான காட்சி இல்லையென்றாலும், க்ளைமாக்ஸ் காட்சியில் தனது மகள் மீது வைத்திருந்த பாசத்தை அழுது கொண்டே வெளிப்படுத்திய காட்சியில் படம் பார்ப்பவர்களை அனைவரின் கண்களில் இருந்து கண்ணீரை வர வைத்துவிட்டார் கீதா கைலாசம். இந்த ஒரு காட்சிக்காகவே அவருக்கு விருது வழங்கலாம்.
ரூபாவின் அப்பாவாக நடித்த ராஜூ ராஜப்பன் ஊர் தலைவர் கதாபாத்திரத்தில் நன்றாகவே பொருந்திருக்கிறார். அமரன் படத்திலும் இவரே சிவகார்த்திகேயனின் தந்தையாக நடித்திருந்தார். இப்படத்திலும் தனது நடிப்புத் திறனை நன்றாகவே வெளிப்படுத்தியிருந்தார். க்ளைமாக்ஸ் காட்சியில் தனது மகளின் உயிர் என்றதும் கோபம் வரும் காட்சியில் நடிப்பில் நன்றாகவே மிரட்டியிருக்கிறார்.
ரூபாவின் அண்ணனாக நடித்த சுபாஷ் ராமசாமியும் க்ளைமாக்ஸ் காட்சியில் அதிரடி நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
மேலும், படத்தில் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரமுமே அக்கதாபாத்திரமாகவே படத்தின் இறுதி வரை தெரிந்தார்கள். அதிலும் குறிப்பாக, சுபாஷ் ராமசாமியின் நண்பர்களாக வந்தவர்கள், போலீஸாக வருபவர், குடிகாரராக வருபவர், உள்ளூர் டாக்டர், ரூபாவின் பாட்டி, ஊர் பாட்டி, கிராமத்து பெண்கள், எக்ஸ் தர்மகர்த்தா அவரது மகன், மருமகள், மூட நம்பிக்கைக் குறித்து பேசும் பெண், ஹீரோவின் அப்பா, என படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களுமே மிகவும் இயல்பாகவே தங்களது கேரக்டர்களை நடித்து முடித்திருக்கிறார்கள்.
படத்தின் ஆரம்பத்திலேயே கதைக்குள் சென்று விட்டது படம் பார்ப்பவர்களை எழுந்து அமர வைத்துவிட்டார் இயக்குனர். குறிப்பாக திரைக்கதையில் எந்த இடத்திலும் தொய்வு ஏற்படாத வண்ணம் வசனங்களாலும் கதையை நன்றாகவே நகர்த்திச் சென்றிருக்கிறார் இயக்குனர். பிணத்தை வைத்து ஒரு சமூக கதை கூற முடியுமா என்ற யோசனைக்கு அருமையான படைப்பாக இப்படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
மனிதனுக்குள் ஒளிந்திருக்கும் பல விஷம எண்ணங்களை இப்படத்தில் வெளிச்சம் போட்டு காண்பித்திருக்கிறார் இயக்குனர்.
ஜாதி மறுப்பு திருமணம், கள்ள எண்ணம் கொண்டவர்கள், பிறரின் வளர்ச்சியைக் கொண்டு எரிச்சலைடைபவர்கள், கள்ளத்தனம், குடும்ப பெருமை, கெளரவம், மத நம்பிக்கை என பலவற்றை இப்படத்திற்குள் ஒளித்து வைத்திருக்கிறார் இயக்குனர்.
மாற்று சமூகத்தைச் சார்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டவர் கருப்பு சட்டை அணிந்து வருவதும், புரளியால் சூழ்ந்த ஒரு கிராம பெண்களின் கூட்டத்தின் நடுவே ஒரு பெண் மட்டும் அது இயற்கையானது என்பதை ஒவ்வொரு இடத்திலும் கூறிக் கொண்டே இருப்பதும் என படத்தில் காட்சிக்கு காட்சி பல விஷயங்களை புகுத்தி வைத்திருக்கிறார் இயக்குனர். தமிழ் சினிமாவில் அனைவரும் திரும்பி பார்க்கும்படியான ஒரு படைப்பு படைத்திருக்கிறார் இயக்குனர். சிகப்பு கம்பளம் விரித்து இயக்குனரை வரவேற்பதில் பெருமை கொள்ளலாம் தமிழ் சினிமா.
சுஜித் சாரங்க் இவரின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரும் பலம் என்றே கூறலாம். ரூபாவின் வீட்டிற்குள் அமைக்கப்பட்ட வெளிச்சம், காதல் பாடலில் கொண்டு வந்த வெளிச்சம், படத்தின் ஆரம்பத்திலேயே வரும் கிராம பாடல் காட்சியமைக்கப்பட்ட விதம் என பல இடங்களில் கைதட்டல் கொடுக்கும் அளவிற்கான ஒளிப்பதிவை கொடுத்து அசத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர்.
ஜெசின் ஜார்ஜின் இசையில் மூன்று பாடல்களும் ரசிக்க வைத்திருக்கிறது. அதிலும், க்ளைமாக்ஸ் பாடல் கண்களில் கண்ணீர் வரவைக்க பெரிதாகவே கைகொடுத்திருக்கிறது. பின்னணி இசை கதையோடு நாமும் சேர்ந்து பயணிக்க வைத்திருக்கிறது.
ராஜேந்திரனின் வசனங்கள், ஜோசப் பாபீன் கலை இயக்கம், ஸ்ரீஜித் சாரங்கின் படத்தொகுப்பு, அரவிந்த் மேனனின் சவுண்ட் மிக்சிங் என படத்தில் பணிபுரிந்த அனைவரும் கதையின் பலமறிந்து அதை திறம்பட செய்து முடித்திருக்கிறார்கள்.
மொத்தத்தில்,
எமகாதகி – 2025 ஆண்டின் தேசிய விருது பெறுவதுக்கேற்ற ஒரு தரமான படைப்பு…