
யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ரச்சிதா மகாலட்சுமி, யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடிக்கும் ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ திரைப்படத்தின் பூஜை விழா, சென்னை நகரில் நேற்று (ஜூன் 26) கோலாகலமாக நடைபெற்றது. பூஜையுடன் படப்பிடிப்பும் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது.
Kaviya Productions மற்றும் S2 Movies இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை கே.ஆர். செந்தில்நாதன் எழுதி இயக்குகிறார். தயாரிப்பாளராக பி. மஞ்சுநாத் செயல்படுகிறார்.
படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ரச்சிதா மகாலட்சுமி, யாஷிகா ஆனந்த், YGM மதுவந்தி, மெல்வின், அமித் பார்கவ், அஸ்மிதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
படத்திற்கு அச்சு ராஜாமணி இசையமைக்க, ஷிஹாப் பட்டாம்பி ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.பி. அகமது படத்தொகுப்பை கவனிக்கிறார். ரெம்பன் பால்ராஜ் கலை இயக்குநராகவும், ஜாக்கி பிரபு சண்டைப் பயிற்சி இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர். நிர்வாக தயாரிப்பாளராக சேலம் சரவணன் செயல்படுகிறார்.
பூஜை விழாவில் இயக்குநர் சங்கத் தலைவர் ஆர்.வி. உதயகுமார், நடிகையும் அரசியல்வாதியுமான YGM மதுவந்தி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இயக்குநர் கே.ஆர். செந்தில்நாதன்
பூஜை விழாவில் பேசிய இயக்குநர் கே.ஆர். செந்தில்நாதன், “இன்று எங்கள் படத்தின் பயணம் பூஜையுடன் தொடங்கியிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தக் கதையை முழு நம்பிக்கையுடன் தயாரிக்க முன்வந்த தயாரிப்பாளர் மஞ்சுநாத் அவர்களுக்கு நன்றி. இந்தப் படத்தை சிறப்பாக உருவாக்க படக்குழுவினர் அனைவரும் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்ற உள்ளோம். அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறோம்,” என்றார்.
நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் வாழ்த்துகள்
நடிகர்கள் மெல்வின், அமித் பார்கவ், இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி, நடிகைகள் யாஷிகா ஆனந்த், ரச்சிதா மகாலட்சுமி, அஸ்மிதா, YGM மதுவந்தி உள்ளிட்டோர் படத்தின் கதையும், இயக்குநரின் அர்ப்பணிப்பும் சிறப்பானவை என்றும், படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினர்.
ஆர்.வி. உதயகுமார்
இயக்குநர் சங்கத் தலைவர் ஆர்.வி. உதயகுமார் பேசுகையில், “விளையாட்டை மையமாகக் கொண்டு குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய ஒரு பொழுதுபோக்கு திரைப்படமாக இது உருவாகிறது. இன்றைய தமிழ் சினிமாவிற்கு இத்தகைய படங்கள் மிகவும் அவசியம். நல்ல உள்ளடக்கமும், சரியான நேரமும் கிடைத்தால் இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும்,” என்றார்.
கனவுப் படைப்பு
இயக்குநர் செந்தில்நாதனின் நீண்ட நாள் கனவுத் திட்டமாக உருவாகும் இந்தப் படம், கடந்த ஏழு ஆண்டுகளாக நடைபெற்ற திட்டமிடலுக்குப் பிறகு தற்போது படப்பிடிப்பை தொடங்கியுள்ளது என்று விழாவில் பலரும் குறிப்பிட்டனர்.
விளையாட்டு பின்னணியில் நகைச்சுவை, குடும்ப உறவுகள் மற்றும் பொழுதுபோக்கை இணைத்து உருவாகும் ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ திரைப்படம் குறித்து விரைவில் மேலும் பல அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.





