
நடிகர் யோகி பாபு கதையின் நாயகனாக நடித்துள்ள ‘சிங்காரம்’ திரைப்படம் வரும் அக்டோபர் 30, 2026 அன்று உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
‘ராஜவம்சம்’ படத்தை இயக்கிய கே.வி. கதிர்வேலு இயக்கியுள்ள இப்படத்தை ராக் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் ஏ.எஸ். ரமண பாலாஜி மற்றும் பத்மாவதி காந்தி இணைந்து தயாரித்துள்ளனர்.
நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞராக யோகி பாபு நடித்துள்ள இப்படம், சமூகத்தில் நிலவும் அடக்குமுறைகளையும் வாழ்க்கைச் சவால்களையும் எதிர்கொண்டு, தனது உரிமை மற்றும் சுயமரியாதைக்காகப் போராடும் மனிதனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. நகைச்சுவை, குடும்ப உணர்வுகள் மற்றும் சமூகக் கருத்துகளை இணைத்து இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் யோகி பாபுவுடன் வேல ராமமூர்த்தி, எம்.எஸ். பாஸ்கர், மரியா வின்சென்ட், சார்ம்ஸ், ஆர்த்தி கணேஷ், மனோபாலா, மாரிமுத்து, படவா கோபி, சென்ட்ராயன், தீபா சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சாம் சி.எஸ். இசையமைத்துள்ள இப்படத்திற்கு பிரசன்னா எஸ். குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பையும், குருராஜ் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர்.
யோகி பாபுவின் நகைச்சுவையுடன் சமூக அக்கறை கொண்ட கதைக்களத்தில் உருவாகியுள்ள ‘சிங்காரம்’ திரைப்படம் அக்டோபர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.





