Spotlightசினிமா

சரியும் செல்வாக்கை மீட்க முதல்வர் உதவியை நாடிய அரக்கோணம் எம்.எல்.ஏ.!!

 

தமிழகத்தில் சமீபத்திய பரபரப்பு தொகுதியாக மாறியிருக்கும் அரக்கோணம் தனித் தொகுதியில் வரும் 9ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டம் நடத்துகிறார்.

இந்த கூட்டத்தை ஒழுங்கு செய்திருப்பது அரக்கோணம் தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ. சு.ரவி.

திடீரென இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் தொகுதியில் முதல்வர் பழனிச்சாமி கூட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதற்கு பின்னணியில் ஒரு ரகசியம் ஒளிந்துள்ளது.

அரக்கோணம் தொகுதியில் சு.ரவி இரண்டு முறை வெற்றி பெற்றும் தொகுதியின் அடிப்படை பிரச்சினைகளை கூட நிறைவேற்றவில்லை என்பதுதான் அவர் மீதான குற்றச்சாட்டு.

இதன் காரணமாக தொகுதி முழுதும் பெரும் அதிருப்தி அதிமுகவிலேயே நிலவுகிறது.

உண்மை இப்படி இருக்க சிட்டிங் எம்.எல்.ஏ. கனவோ வேறு மாதிரி இருக்கிறது.

புரட்சிபாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி இப்போது அதிமுக கூட்டணியில் தான் இருக்கிறார்.

அவருக்கு அரக்கோணம் தொகுதியில் மீண்டும் போட்டியிட ஆசை… ஏற்கனவே திமுக தயவால் அங்கே எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றதால் அதிமுக சார்பில் நின்று ஜெயித்து விடலாம் என ஒரு கணக்கு போட்டார்.

ஜெகன் மூர்த்தியின் கணக்கை தெரிந்து கொண்ட சிட்டிங் எம்.எல்.ஏ.ரவி “நான் இரண்டு முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்ற தொகுதி இது. இப்போது 3ம் முறையாக வெற்றி பெற்றால் கன்பார்ம் அமைச்சர். அதனால் கே.வி.குப்பம் போங்கள்” என ஜெகன்மூர்த்தியிடம் சொல்லி அவர் கற்பனையை திசை மாற்றி விட்டிருக்கிறார் சிட்டிங்.

இதனால்தான் சமீபத்தில் குடியாத்தம் பகுதியில் புரட்சிபாரதம் கட்சி திடீர் கூட்டம் நடத்தியது. அதில் கலந்து கொண்ட அமைச்சர்கள் சிலரும் பெருசாக ஜெகன் மூர்த்திக்கு வாக்கு கொடுக்காமல் எஸ்கேப் ஆகியிருக்கிறார்கள்.

அரக்கோணம் தொகுதியில் இப்போது நிலவும் அதிருப்தி தெரியாமலேயே சிட்டிங் அமைச்சர் கனவில் இருக்கிறார்.

தமிழகம் முழுதும் அதிமுக ஆட்சியின் மீதான அதிருப்தியும், ஆட்சி மாறும் என்ற பேச்சும்தான் நிலவி வருகிறது. இந்த உண்மை புரியாமல் அரக்கோணம் சிட்டிங் “அமைச்சர்” கனவில் மிதக்கிறார்.

கடந்த சில தினங்களுக்கு பனப்பாக்கம் பகுதியில் நடந்த கூட்டத்தில் அரக்கோணம் சிட்டிங் எம்.எல்.ஏ.ரவியை வார்த்தைகளால் வெளுத்து வாங்கினார் திமுக தலைவர் ஸ்டாலின்.

இதற்கு பதிலடியாக அதே மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் தொகுதியில் கைனூர் பகுதியில் வரும் 9ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்ளும் கூட்டத்தை நடத்துகிறார் சிட்டிங் எம்.எல்.ஏ. ரவி.

இதற்கு காரணம் தன்னைக் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் சொன்ன குற்றச்சாட்டை கண்டித்து அதற்கு எதிர் கருத்து சொல்லி, தொகுதியில் சரிந்துள்ள செல்வாக்கை மீட்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மூலமாக முயற்சிக்கிறார் சிட்டிங் எம்.எல்.ஏ. ரவி.

அதே நேரம் சசிகலா வருகையால் அதிமுக வட்டாரமே பதட்டமாகியிருக்கிறது. காரணம் சிட்டிங் எம்.எல்.ஏ. ரவி கைனூரில் நடத்த திட்டமிட்ட கூட்டமே 8ம் தேதியான இன்றுதான். ஆனால் அதே நாளில் பெங்களூரில் இருந்து சசிகலா சென்னை வரும் திட்டத்தால் கைனூர் கூட்டத்தை 9ம் தேதிக்கு மாற்றியிருக்கிறார் முதல்வர்.

ஆனால், திமுக தரப்பில் மிக உற்சாகமாக தேர்தல் பணிகளை செய்ய உ.பி.க்கள் தயாராகி விட்டனர்.

அரக்கோணம் தொகுதியை சு.ரவி தக்க வைப்பாரா… அல்லது திமுகவிடம் பறி கொடுப்பாரா பொறுத்திருந்து பார்ப்போம்!

– நமது நிருபர்

Facebook Comments

Related Articles

Back to top button