
சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில், தாதாசாகெப் பால்கே விருது பெற்ற இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார்.
இந்த சந்திப்பில், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளரும் தமிழக பாஜகவின் மேலிட பொறுப்பாளருமான அரவிந்த் மேனனும் உடனிருந்தார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் கடந்த 12 ஆண்டுகால ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட முக்கிய மக்கள் நலத் திட்டங்கள், வளர்ச்சி நடவடிக்கைகள் மற்றும் நாட்டின் முன்னேற்றப் பயணத்தை விளக்கும் சிறப்பு நூல்கள் ரஜினிகாந்திடம் வழங்கப்பட்டன.
இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானதாக நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நிகழ்வில் பாஜக மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜன் மற்றும் மாநில பிரச்சாரப் பிரிவு அமைப்பாளர் பாண்டியராஜன் ஆகியோரும் பங்கேற்றனர்.
சமூக வலைதளங்களில் இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்று வருகின்றன.




