
ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த வெங்கட் மோகன் விஷாலின் அயோக்யா திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ராஷி கண்ணா, ஆர்.பார்த்திபன், ராதாரவி, கே.எஸ்.ரவிகுமார், ஆடுகளம் நரேன், சோனியா அகர்வால் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் பி.மது தயாரித்து வரும் இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. அதற்காக சென்னை சாலிகிராமத்தில் உள்ள மோகன் ஸ்டுடியோவில் மிகப் பிரம்மாண்டமான நீதிமன்ற செட் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு படத்தின் முக்கியமான காட்சி கடந்த 3 நாட்களாக படமாக்கப்பட்டு வருகிறது. இந்தக் காட்சியில் 200-க்கும் மேற்பட்ட துணைநடிகர்கள் நடித்து வருகின்றனர்.
படத்தின் முக்கியமான காட்சி என்பதால் நடிகர் விஷால் தொடர்ந்து நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே இரவு பகல் பாராமல் சுமார் 48 மணி நேரம் தொடர்ந்து நடித்துள்ளார்.
அயோக்யா படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்னும் இரண்டு பாடல்களுக்கு மட்டுமே படப்பிடிப்பு செய்ய வேண்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற இருக்கிறது. இந்தப் படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே இப்படத்தின் டீசர் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.





