
மாதவிடாயின் போது உடலுறவு வைக்கலாமா வேண்டாமா என்ற கேள்வி எல்லோருக்கும் இருக்கத்தான் செய்கிறது . அது பற்றிய தெளிவான விளக்கங்களை தருகிறார் சென்னையில் புகழ் பெற்ற பாலியல் மருத்துவர் திரு.கார்த்திக் குணசேகரன்.
அவர் கூறுகையில், “கர்ப்பப்பையில் கருமுட்டை தங்காது எண்டோமெட்ரியம் உடைந்து வருதல் தான் மாதவிடாய் . மாதவிடாயின் போது பெண்களுக்கு உடலுறவின் மீது நாட்டம் இருக்கும் . அதில் தவறேதும் இல்லை . துணையுடன் நல்ல புரிதல் இருந்தால் மாதவிடாயின் போதும் உடலுறவு கொள்ளலாம் . பாதி பெண்களுக்கு சுத்தம் இல்லாத உணர்வு ஏற்படும் . எனவே அவர்கள் உறவு கொள்ள விரும்பமாட்டார்கள்.
மாதவிடாயின் போது உடலுறவு கொண்டால் நோய்த்தொற்று ஏதும் ஏற்படாது .கர்ப்பம் தரிக்க கூடாது என்றால் உடலுறவு கொண்ட 48 மணி நேரத்திற்குள் கருத்தடை மாத்திரை எடுத்துக்கொள்ளவேண்டும் . 21 நாட்கள் தொடர்ந்து ஹார்மோன் மாத்திரை உட்கொள்ளவும் செய்கிறார்கள் பெண்கள். ஸ்டீராய்டுகளால் உடல் எடை உயர வாய்ப்புள்ளது . வெளிநாடுகளில் 14 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் கருத்தடை பற்றிய அவசியத்தை உணர்ந்து இருக்கிறார்கள். டீனேஜ் கர்ப்பம் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அறிவு அவசியம் .மற்ற நாட்களில் சாதாரணமாக ஏற்படும் வெள்ளைப்படுதலின் போது பெண்கள் தன் பிறப்புறுப்பை கழுவி விட்டு துணையுடன் உடல் உறவு கொள்ளலாம் “.
மேலும் தொடர்ந்த அவர் “பெண்ணின் பிறப்புறுப்பு திரவம் பால்வினை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு அந்த திரவம் முன்விளையாட்டின் போது தவறுதலாக ஆணுறுப்பின் மீது பட நேர்ந்தால் கூட ஆணிற்கு நோய்த்தொற்று ஏற்படும் வாய்ப்புள்ளது . ஆணுறை அவசியமானது . வாய்வழி உறவின் போது கூட ஆணுறை அணிவது அவசியமானது . தெரிந்த துணையோ, முன் பின் தெரியாத துணையோ ஆணுறை அணிந்தால் கோனேரியா , சிஃபிலிஸ் , ஈஸ்ட் , ஹெச்பிவி ,ஹெச்ஐவி போன்ற பால்வினை நோய்களில் இருந்து தப்பித்து கொள்ளலாம்” என்கிறார் மருத்துவர்.




