
இளம் தலைமுறையினரிடம் சமூகப் பொறுப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாகியுள்ள ‘செய்! செய்யாதே!’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, சென்னை நகரில் திரையுலக பிரபலங்கள், மருத்துவத் துறை நிபுணர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் வெளியிடப்பட்ட திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர், சமூகப் பொறுப்புணர்வு மற்றும் மருத்துவ விழிப்புணர்வை மையமாகக் கொண்ட வலுவான கதைக்களத்தை வெளிப்படுத்தியதாக சிறப்பு விருந்தினர்கள் பாராட்டினர். இளம் தலைமுறைக்கு நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தும் படைப்பாக இப்படம் அமையும் என்ற நம்பிக்கையையும் அவர்கள் தெரிவித்தனர்.
ஃபைவ் ஸ்டார் கதிரேசன் வாழ்த்து
தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன், சினிமாவுக்கும் அரசியலுக்கும் தமிழகத்தில் நீண்டகால தொடர்பு இருப்பதை குறிப்பிட்டு, சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தி சினிமாவுக்கு இருப்பதாக தெரிவித்தார்.
இயக்குநர் டாக்டர் எஸ். ராஜா, மருத்துவராக அமெரிக்காவில் உயர்ந்த நிலையில் இருந்தபோதும், சமூகத்திற்கு நல்ல கருத்தை சொல்லும் நோக்கில் சினிமாவைத் தேர்வு செய்து இந்தப் படத்தை இயக்கியிருப்பது பாராட்டத்தக்கது என்றும், தயாரிப்பாளர் சுப்புலட்சுமி ஜெயராம் மற்றும் படக்குழுவினருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு
முன்னாள் ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், அரசியலில் இருந்த ஒருவர் சமூகப் பொறுப்புள்ள திரைப்படத்தை இயக்குவது பாராட்டுக்குரிய முயற்சி எனக் குறிப்பிட்டார்.
மருத்துவ விழிப்புணர்வு, சமூகப் பொறுப்பு மற்றும் மனிதநேயத்தை பேசும் இப்படம் அனைத்து தரப்பு மக்களிடமும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், குறிப்பாக இளைஞர்களுக்கு பயனுள்ள செய்தியை கொண்டு சேர்க்கும் என்றும் அவர் வாழ்த்துத் தெரிவித்தார்.
இயக்குநர் டாக்டர் எஸ். ராஜா
இயக்குநர் டாக்டர் எஸ். ராஜா (M.D., USA) பேசுகையில்,
“இன்றைய இளம் தலைமுறையை அச்சுறுத்தும் போதைப்பொருள் பழக்கம், சுயமருந்து உட்கொள்ளுதல், மருத்துவ விழிப்புணர்வு குறைபாடு போன்ற முக்கிய பிரச்சினைகளை இப்படம் பேசுகிறது. பெற்றோர், ஆசிரியர்கள், மருத்துவர்கள் ஆகியோரின் சமூகப் பொறுப்பையும் வலியுறுத்துகிறது.”
மேலும், அமெரிக்காவில் இருந்து பலமுறை இந்தியா வந்து கடின உழைப்புடன் இப்படத்தை உருவாக்கியதாகவும், இந்தப் படத்தில் நடித்த ஹெச். ராஜா எந்தவித சம்பளமும் பெறாமல் நடித்தது மறக்க முடியாத அனுபவம் என்றும் தெரிவித்தார்.
ஹெச். ராஜா பேச்சு
தமிழக அரசியல் ஆளுமை ஹெச். ராஜா, உடல்நலக்குறைவிலிருந்து மீண்டு மீண்டும் பொதுமக்கள் முன்னிலையில் நிற்பது இறைவனின் அருள் என்று தெரிவித்தார்.
மேலும், இந்தப் படத்தில் நடிகர்கள் யாருக்கும் மேக்கப் பயன்படுத்தப்படாமல், முழுக்க இயல்பான தோற்றத்தில் நடித்திருப்பதாகவும், லாப நோக்கத்தை விட சமூகப் பொறுப்பை முன்னிறுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
செவிலியர்கள், முன்கள மருத்துவ பணியாளர்கள், மருத்துவ நெறிமுறைகள் மற்றும் மனித உயிரின் மதிப்பை எடுத்துரைக்கும் திரைப்படமாக ‘செய்! செய்யாதே!’ அனைவராலும் வரவேற்கப்படும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.
சமூகப் பொறுப்பை பேசும் திரைப்படம்
ஹரிணி சுப்பு சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தை டாக்டர் எஸ். ராஜா (M.D., USA) எழுதி இயக்கியுள்ளார். தயாரிப்பாளராக சுப்புலட்சுமி ஜெயராம் பணியாற்றியுள்ளார்.
போதைப்பொருள் பழக்கம், சுயமருந்து உட்கொள்ளுதல், தவறான மருத்துவ தகவல்கள், குடும்ப உறவுகள், பொறுப்பான வாழ்க்கைத் தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு சமூகப் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், மருத்துவ நெறிமுறைகள் மற்றும் மனிதநேயத்தின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறது.
இப்படத்தில் ஹெச். ராஜா தமிழ்நாடு முதலமைச்சராக சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள நிலையில், டாக்டர் எஸ். ராஜா, குரு விஜய், தர்ஷினி ரெட்டி, மௌனிகா ப்ரீத்தி, சிதம்பரம் PDK, தபிதா குணரத்னே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மத்திய திரைப்படத் தணிக்கைக் குழு (CBFC) சான்றிதழ் பெற்றுள்ள ‘செய்! செய்யாதே!’ திரைப்படம் 2026 செப்டம்பர் மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.





