
டிரைகலர் பிலிம்ஸ் மற்றும் வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள, புரட்சிகர தொழிலதிபர், கண்டுபிடிப்பாளர் மற்றும் கொடையாளர் ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட ‘ஜிடிஎன்’ (GTN) திரைப்படத்தின் பிரீ-ரிலீஸ் விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. ஆகஸ்ட் 7ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள இப்படத்தில் நடிகர் ஆர். மாதவன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த நிகழ்வில் மாதவன், சத்யராஜ், துஷாரா விஜயன், அதிதி பாலன், விஜய் யேசுதாஸ், இயக்குநர் கிருஷ்ணகுமார் ராமகுமார், தயாரிப்பாளர்கள் வர்கீஸ் மூலன், விஜய் மூலன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டு திரைப்பட அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
நடிகர் மாதவன் பேசுகையில், “ஜி.டி. நாயுடு போன்ற மாபெரும் மேதையின் வாழ்க்கையை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் பொறுப்பை அவரது குடும்பத்தினர் எங்களிடம் ஒப்படைத்துள்ளனர். அவரைப் பற்றி படத்தை தொடங்குவதற்கு முன் எனக்கும் முழுமையாக தெரியாதது ஒரு குற்ற உணர்வாக இருந்தது. இந்த படம் அவரது சாதனைகளை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்க்கும்” என்றார்.

சத்யராஜ், “கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்த நான் கூட ஜி.டி. நாயுடுவின் முழுமையான சாதனைகளை இந்த படத்தின் மூலம்தான் ஆழமாக அறிந்தேன். இது ஒரு சாதாரண பயோபிக் அல்ல; முழுமையான கமர்ஷியல் அம்சங்களுடன் உருவான உலகத் தரமான திரைப்படம். மாதவனின் திரைப்பயணத்தில் இது மிக முக்கியமான மைல்கல்” என்று பாராட்டினார்.
இயக்குநர் கிருஷ்ணகுமார் ராமகுமார், ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை ஆராய்ந்து உருவாக்கிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். “சாதாரண மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும் என்பதே ஜி.டி. நாயுடுவின் கண்டுபிடிப்புகளின் நோக்கம். அந்த மகத்தான மனிதரை திரையில் கொண்டு வர முடிந்தது மிகப்பெரிய பாக்கியம்” என்றார்.
அதிதி பாலன், துஷாரா விஜயன், விஜய் யேசுதாஸ் உள்ளிட்ட நடிகர்களும் இப்படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டு, ரசிகர்கள் ஆகஸ்ட் 7 முதல் திரையரங்குகளில் படத்தை கண்டுகளிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
தயாரிப்பாளர்கள் வர்கீஸ் மூலன் மற்றும் விஜய் மூலன், ‘ராக்கெட்டரி’ திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் மாதவனுடன் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி தெரிவித்ததுடன், ‘ஜிடிஎன்’ திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினர்.
புரட்சிகர தொழிலதிபர், கண்டுபிடிப்பாளர், கல்வியாளர் மற்றும் கொடையாளரான ஜி.டி. நாயுடுவின் சாதனைகளையும், அவர் உலகிற்கு அளித்த பங்களிப்புகளையும் புதிய தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வகையில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், ஆகஸ்ட் 7ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.





