
நாளுக்கு நாள் உலகில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. பாலியல் ரீதியான துன்பங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தண்டனைகள் கடுமையாக்கப்படும் வரையில் இந்த மாதிரியான குற்றங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும் என பல அறிஞர்கள், தலைவர்கள் கூறிக் கொண்டு வந்தாலும், அதற்கான செயல்முறைகள் எதுவும் நடக்காமல் இருப்பது வேதனை தான்.
கதைக்குள்…
ஆரம்பத்திலேயே, இளைஞர்கள் நால்வர் ஒரு இளம்பெண்ணை கடத்தி சென்று விடுகின்றனர். அந்த பெண்ணிற்கு போதை மருந்து கொடுத்து சீரழித்து விடுகின்றனர். இதற்கெல்லாம் மெயின் வில்லனாக வருகிறார் ஈசன்.
அரசியல் ரீதியாக இவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறார் அரசியலில் பெரும் புள்ளியான மைம் கோபி.
இப்படியாக, பல பெண்களை சீரழித்து , அவர்களின் வாழ்க்கையை கேள்விக் குறியாக்கி விடுகின்றனர் ஈசனும், மைம் கோபியும்..
இந்நிலையில், ஹீரோ சக்தி சிவன், படித்த பட்டதாரி இளைஞர். இவருக்கும் நாயகி சந்திரலேகாவிற்கும் காதல். இருவரும் வீட்டில் பெற்றோரின் சம்மதத்திற்காக காத்திருக்கின்றனர்.
இதற்கிடையில், நாயகி சந்திரலேகாவை கடத்தி விடுகிறது அந்த கும்பல். நாயகியை கண்டுபிடிக்க தீவிர வேட்டையில் இறங்குகிறார் நாயகன் சக்தி சிவன்.
சக்தி சிவனின் வேட்டையில் கயவர்கள் சிக்கினார்களா.? காதலி மீட்கப்பட்டாளா.? என்பது படத்தின் மீதிக் கதை.
இப்படத்தின் இயக்குனரே நாயகனாக நடித்திருக்கிறார். ஆகவே, அவர் மீதான காட்சிகளும் அதிகமாகவே உள்ளது. காட்சிகள் சிலவற்றில் இன்னும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்திருக்கலாம்.
நாயகி சந்திரலேகா எதார்த்த நடிப்பை கொடுத்திருக்கிறார். வில்லன் ஈசன் நடிப்பு பாராட்டுக்குறியது. அரசியல் பிரமுகராக தனக்கேற்ற பாணியில் வில்லத்தனத்தை முரட்டுத் தனமாக கொடுத்திருக்கிறார் மைம் கோபி.
வில்லத்தனத்தில் மாஸ் செய்து மிரட்டியிருக்கிறார் ஆமோஸ் ஜாக். நிச்சயம் கோலிவுட்டில் ஒரு ரவுண்ட் அடிப்பார்.
கார்த்திக் ராஜாவின் இசையா..?? என கேள்வி எழுப்பும் வகையில் இசை இருக்கிறது.. கொஞ்சம் அதிகமாக மெனக்கெட்டிருக்கலாம்.
சுரேஷ்குமாரின் ஒளிப்பதிவில் இன்னும் சற்று வெளிச்சம் பட்டிருக்கலாம்.
சிறப்பான மூலக் கதையை கையில் எடுத்து, அதை கூறும் விதத்தில் இயக்குனர் சற்று சறுக்கியிருக்கிறார்.
பெண்களை தொட்டால் அவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்ற சமூக இன்னல் பிரச்சனையை கையில் எடுத்ததற்காக இயக்குனர் சக்தி சிவனுக்கு பாராட்டுகள்…
ஆட்கள் தேவை – முயற்சி தேவை.





