Spotlightவிமர்சனங்கள்

‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ விமர்சனம்

படித்த படிப்பிற்கு வேலை கிடைக்காத விரக்தியில் சுற்றி வருகிறார் கதையின் நாயகன் வெற்றி. தனது குடும்பத்தின் கடனுக்காகவும் அதற்கு செலுத்த வேண்டிய வட்டிக்காகவும் சின்ன சின்ன திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார். கதையானது 1970களில் நடந்து வருகிறது.

அப்போது ஏற்படும் ஒரு சம்பவத்தால், வெற்றிக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து விடுகிறது. அது என்ன சம்பவம்.? எதற்காக வெற்றி அதனை செய்தார்.?? மரணதண்டனை என்பது தேவைதானா .?? என மனதில் எழும் பல கேள்விகளுக்கு படத்தில் விளக்கமாக விடை வைத்து முடித்திருக்கிறார் இயக்குனர் தயாள் பத்மநாபன்.

கருத்துகளையும் தான் எதற்காக இந்த படைப்பின் கருவை கொண்டு வந்தோம் என்பதையும் மிகவும் தெளிவாக புரிந்து கொண்டு உணர்ந்து கொண்டு இப்படத்தை மிக தெளிவாக இயக்கி முடித்திருக்கிறார் இயக்குனர் தயாள் பத்மநாபன்.

நடிகர்களின் நடிப்பில் நமக்கு பெரிதான ஒரு தாக்கம் இல்லை என்றாலும், அவர்கள் பேசும் வசனங்கள் மட்டுமே படத்திற்கு மிகப்பெரும் ஆறுதல்., பிரிகிடாவின் நடிப்பு மட்டுமே படத்தில் ரசிக்கும்படியாக இருந்தது. சுப்ரமணியம் சிவா அவர்களின் நடிப்பும் ரசிக்கும்படியாக இருந்தது. மற்றபடி, மற்ற நடிகர்களின் நடிப்பு அனைத்துமே மீட்டர் தாண்டி அல்லது மீட்டரே இல்லாமல் நடித்திருக்கிறார்களே என்று தான் தோன்ற வைத்தது.

தயாள் பத்மநாபன் மற்றும் கவிதா பாரதி இருவரது எழுத்துகள் மட்டுமே படத்திற்கு உயிர்நாடியாக நிற்கிறது. படத்தின் வசனங்களையும் கதையையும் பார்க்கும் போது ஒரு புத்தகத்தை கேட்பது போன்ற ஒரு உணர்வை இப்படம் நமக்குள் ஏற்படுத்திவிடும்.

தர்புகா சிவாவின் பாடல்கள் “இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே” என்ற பாரதியின் கூற்றுப்படி, இசையமைத்திருக்கிறார். ஆதலினால் காதல் செய்வீர் என்ற பாரதியின் வரிகளை பாடலாக்கியது இனிமை… அதன் குரல் இனிமையிலும் இனிமை தான்.. அதுமட்டுமல்லாமல், பாரதிதாசனின் முத்தம் கொடு பாடலும் ரசிக்க வைத்தன.

எம் வி பன்னீர் செல்வத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம் என்றே கூறலாம். அந்த கால கட்ட கிராம புற வீடு, ஜெயில் செட் அப், என காட்சிப்பதிவில் நன்றாக கவனம் செலுத்தி தனது வெளிச்சத்தை காட்டியிருக்கிறார்.

குற்றவாளிகளின் மரண தண்டனை என்பது நியாயமா..? ஒருவனின் மரண தண்டனையானது சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி குற்றத்தை குறைத்துவிடுமா? என பல கேள்விகளை நம் மனதில் எழுப்பிக் கொண்டே சென்றிருக்கிறது இந்த “லக்‌ஷ்மிகாந்தன் கொலை வழக்கு”.

Facebook Comments

Related Articles

Back to top button