
பிரபல அரசியல்வாதி தொடர்புடையதாகக் கூறப்படும் ரூ.634 கோடி வழக்கில் தனது பெயரை இணைத்து சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என ஷபானா ஷாஜஹான் (Shabana Shajahan) மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நவம்பர் 1ஆம் தேதி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த இரண்டு நாட்களாக YouTube, X, Facebook மற்றும் Instagram உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தனது பெயரும் புகைப்படங்களும் சம்பந்தப்பட்ட வழக்குடன் தொடர்புபடுத்தப்பட்டு பரப்பப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
“இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களில் எனது பெயர் எங்கு இடம்பெற்றுள்ளது? என்னை இந்த விவகாரத்துடன் தொடர்புபடுத்தும் உறுதிப்படுத்தப்பட்ட ஆதாரம் என்ன? எந்த அடிப்படையில் எனது பெயர் இதில் சேர்க்கப்பட்டது?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், ஒரே மாதிரியான குற்றச்சாட்டுகளைப் பல சமூக வலைதளப் பக்கங்கள் தொடர்ந்து பரப்புவது ஏன் என்றும், அவற்றைப் பரப்புபவர்களிடம் ஆதாரங்கள் குறித்து கேள்வி எழுப்பப்படாதது ஏன் என்றும் கேட்டுள்ளார்.
தன்னை இழிவுபடுத்தும் வகையில் பாலியல் ரீதியான கருத்துகள், மீம்ஸ்கள் மற்றும் பதிவுகள் வெளியிடப்படுவது தனிமனித கண்ணியத்தின் மீதான கடுமையான தாக்குதல் என்றும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“இந்தத் தகவல்கள் பொய்யானவை என்பது தெரியவந்தால், அவற்றைப் பரப்பியவர்கள் அதே அளவுக்கு வெளிப்படையாகத் திருத்தம் வெளியிடுவார்களா?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
தனக்கு எதிராகப் பரப்பப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் முற்றிலும் பொய்யானவை மற்றும் தவறாக வழிநடத்துபவை எனத் திட்டவட்டமாக மறுத்துள்ள ஷபானா ஷாஜஹான், தனது கண்ணியத்தை யாரிடமும் கேட்டுப் பெற வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
“நானும் எனது குடும்பத்தினரும் நான் யார் என்பதை அறிவோம். அதுவே எனக்கு முக்கியமான உண்மை” எனக் கூறி தனது அறிக்கையை நிறைவு செய்துள்ளார்.





