
கே வி நந்தாவின் எழுத்து மற்றும் இயக்கத்தில் விமல், சூரி, ஸ்ரீதா, கே ஜி எஃப் ராம், தேவதர்ஷினி, நமோ நாராயணன், விநோதினி வைத்யநாதன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி சில வருடங்களாகவே திரைக்கு வராமல் நேற்று திரைகண்டிருக்கும் படம் தான் இந்த “படவா”.
படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ராமலிங்கம். இசையமைத்தும் தயாரித்தும் இருக்கிறார் ஜான் பீட்டர்.
வினோத் கண்ணா படத்தொகுப்பு செய்திருக்கிறார். சரவண அபிராமன் ஆர்ட் பணிகளை செய்திருக்கிறார்.
விவேகா, கபிலன் வைரமுத்து, இளைய கம்பன், சொர்ணலதா, ஜான் பீட்டர் படத்தின் பாடல்களுக்கு வரிகள் எழுதியுள்ளனர்.
கதைக்குள் பயணித்துவிடலாம்…
சிவகங்கை மாவட்டம் மரக்காத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விமல். இவரது நண்பராக வருபவர் சூரி. கிராம மக்களை ஏமாற்றி அவர்களிடம் பணம் பறித்து அதை வைத்து குடி, கும்மாளமுமாக இருப்பவர்கள் இருவரும்.
பருவமழை பொய்த்தது, கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பு என கிராமமே வறண்ட பூமியாக மாறிவிட, அக்கிராமத்தில் இருப்பவர்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக அங்குள்ள கே ஜி எஃப் ராமின் செங்கல் சூளைக்கு வேலைக்குச் செல்கின்றனர்.
கருவேலமரமே தனக்கான முதலீடு என்று அதை வணங்கியும் வருபவர் தான் கே ஜி எஃப் ராம். அக்கிராமத்தைச் சுற்றிலும் கருவேல விதைகளை தூவியும் வருகிறார் ராம்.
விமல் மற்றும் சூரி இருவரின் ஆட்டத்தை பொறுக்க முடியாத மரக்காத்தூர் கிராம மக்கள், விமலை நாடு கடத்த திட்டமிடுகின்றனர். தெரிந்த ஒருவர் மூலமாக கிராம மக்கள் அனைவரும் பணம் செலுத்தி விமலை வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பி வைக்கின்றனர்.
சென்ற சில நாட்களிலே மீண்டும் கிராமத்திற்கு வந்துவிடுகிறார் விமல். கிராமத்திற்குச் சென்றால் அனைவரும் துரத்துவார்களே என்று எண்ணி வந்த விமலுக்கு, மேள தாளத்துடன் மாலை அணிவித்து அவரை வரவேற்கின்றனர் கிராம மக்கள்.
அதன்பிறகு தான் விமலுக்கு தெரியவருகிறது, தனக்கு வெளிநாட்டில் பத்து கோடி ரூபாய் லாட்டரி விழுந்திருக்கிறது என்று ஊரில் பொய்யை பரப்பி வைத்திருக்கிறார்கள் என்று.
விமலிடம் பணம் இருப்பதால், அவரையே ஊராட்சி மன்ற தலைவராக்கி விடலாம் என்று ஊர் பெரியவர்கள் முடிவெடுத்து, விமலை ஊராட்சி மன்றத் தலைவராக்கி விடுகிறார்கள்.
ஒருகட்டத்தில் விமலின் காதலியான ஸ்ரீதாவிற்கு விமலுக்கு லாட்டரி எதுவும் விழவில்லை என்று உண்மை தெரிந்துவிட, விமலிடம் பேசுகிறார் ஸ்ரீதா. அதன்பிறகு விமலிடம் என்ன மாதிரியான மாற்றம் நிகழ்ந்தது.?? விவசாயத்தைப் பற்றி இயக்குனர் என்ன பேசுகிறார்.?? கருவேல பூமியாக இருந்த கிராமம் பின் என்ன ஆனது.??? என்பதே படத்தின் மீதிக் கதை.
நாயகனான விமல், படத்தின் கதைக்கேற்ற கதாநாயகனாக ஜொலித்திருக்கிறார். காதல், எமோஷன்ஸ், ஆக்ஷன், கோபம் என பல இடங்களில் தனது நடிப்பின் திறமையை நன்றாகவே பயன்படுத்தியிருக்கிறார் விமல். இந்த படத்தில், நடனமும் நன்றாகவே ஆடியிருக்கிறார் விமல்.
நடிகர் சூரி, இக்கதையின் இரண்டாம் நாயனே இவர் தான். விமலோடு இவர் அடிக்கும் லூட்டிகள் படம் பார்ப்பவர்களை நன்றாகவே சிரிக்க வைத்தது. பல இடங்களில் சோலோவாகவும் ஸ்கோர் செய்திருக்கிறார் சூரி.
வழக்கமான தனது யுனிக் முகபாவனைகளை கொடுத்து காட்சிகளில் ரசிக்க வைத்திருக்கிறார் சூரி.
நாயகி ஸ்ரீதா கதாநாயகியாக சரியான தேர்வு தான். பாடல் காட்சிகளில் ரசிகர்களுக்கு பூஸ்ட் கொடுத்திருக்கிறார். நடிப்பிலும் நன்றாகவே ஜொலித்திருக்கிறார்.
வில்லனாக கே ஜி எஃப் ராம், நடிப்பில் மிரட்டியிருக்கிறார். தனது தொழிலுக்காக எந்த எல்லை வரை செல்வேன் என்பதை கூறும் இடத்தில் வில்லன் கதாபாத்திரத்தை நன்றாகவே தூக்கி பிடித்திருக்கிறார்.
மேலும், படத்தில் நடித்த நமோ நாராயணன், ப்ரியதர்ஷினி உள்ளிட்ட கிராம மக்களாக நடித்த அனைவருமே தங்களின் கதாபாத்திரம் அறிந்து நன்றாகவே அதை செய்து முடித்திருக்கிறார்கள்.
படத்தின் மிகப்பெரும் பலமே கதை தான். முதல் பாதி காமெடி, கலாட்டா,காதல் என்று கடந்து சென்றாலும், இரண்டாம் பாதியில் தான் சொல்ல வந்த கருத்தை அழகாகவும் ஆழமாகவும் கூறி கைதட்டல் பெற்றிருக்கிறார் இயக்குனர் நந்தா.

கருவேல மரங்களின் தீமைகள் என்ன.? அது வேளாண்மை நிலத்தை எதுவரை பாதிக்கும்.? உள்ளிட்ட பலவற்றை மிக தெளிவான வசனங்களோடு அனைவரும் புரிந்துகொள்ளும் விதமாக படமாக்கியிருக்கிறார் இயக்குனர்.
விவசாயத்தின் முக்கியத்துவத்தை மக்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும், விவசாயிகளை போற்றிட வேண்டும், நாளைய தலைமுறைக்கு விவசாயத்தின் மகத்துவத்தை கற்றுக் கொடுக்க வேண்டும் என பல விதைகள் படவா படத்தில் விதைத்திருக்கிறார் இயக்குனர்.
இதை ஒரு படமாக பார்க்காமல், விழிப்புணர்வு பாடமாக அனைவரும் பார்த்து நன்றாகவே பயன்பெறலாம்.. இப்படியொரு படத்தை இயக்கியதற்காக இயக்குனருக்கு தமிழக அரசு விருது வழங்க வேண்டும்.
விவசாயத்தின் மேன்மையைப் பற்றி பேசிய படங்கள் ஆயிரம் இருந்தாலும், அதில் இப்படம் ஒரு முத்திரை பதித்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
ஒவ்வொரு கிராமம் வரை இப்படத்தை தமிழக அரசு கொண்டு சேர்க்க வேண்டும்.
படத்தின் பாடல்கள் ரசிக்கும்படியாக இருந்தது. அச்சம் ஞாணம்… பாடல், கொட்டுதே வானம்… பாடல், மற்றும் அரிவாள எடுடா எனும் பாடல்களில் இருந்த வரிகள் ரசிக்க வைத்தன.
சரவண அபிராமனின் ஆர்ட் பணிகள் பாடல் காட்சிகளுக்கு நன்றாகவே அழகுசேர்த்திருக்கின்றன.
வினோத் கண்ணாவின் படத்தொகுப்பு வேலைப்பாடுகள் ஓகே என்றாலும், இன்னும் கத்தியை ஷார்ப்பாக பயன்படுத்திருக்கலாமே என்றும் கூற வைத்துவிட்டார்.
சண்டைக் காட்சிகள், பாடல்காட்சிகளில் ஒளிப்பதிவின் வெளிச்சம் நன்றாகவே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
மொத்தத்தில்,
படவா – விவசாயத்தைப் பற்றிய விழிப்புணர்வு பா(ப)டம்…





