
ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் மிக பிரமாண்டமாக தயாரித்த படம் ‘அடங்க மறு’. ஜெயம் ரவி, ராஷி கண்ணா நடிப்பில், சாம் சி எஸ் இசையில் அறிமுக இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கியிருந்தார். கிளாப் போர்ட் ப்ரொடக்ஷன்ஸ் கிருஸ்துமஸ் வெளியீடாக டிசம்பர் 21ஆம் தேதி வெளியிட்ட இந்த படம் ரசிகர்களிடையே நல்ல ஒரு வரவேற்பை பெற்றது.
இசையமைப்பாளர் சாம் சிஎஸ். பேசும்போது, ”நான் எந்த படத்துக்கும் இதுவரை தியேட்டர் விசிட் போனதில்லை. இந்த படத்துக்கு இயக்குனரும், ஹீரோவும் அழைத்ததால் நானும் விசிட் போயிருந்தேன். மதுரையில் மிகப்பெரிய கூட்டத்தில் போலீஸிடம் அடி வாங்கினேன். ஒரு படத்தின் உண்மையான வெற்றி எங்கு தெரியும் என்றால் தியேட்டரில் தான் தெரியும். அதை நான் என் கண்ணாலேயே பார்த்தது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.
முதல் படத்திலேயே என்னை வெற்றிப்பட தயாரிப்பாளராக மாற்றிய ஒட்டுமொத்த குழுவுக்கும் நன்றி. மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. இது அடுத்தடுத்து சிறந்த படங்களை கொடுக்க எங்களுக்கு கூடுதல் பொறுப்புகளை கொடுத்திருக்கிறது. அடுத்த படத்தின் கதை இந்த படத்தை விட 10 மடங்கு மிகப்பெரிய படமாக இருக்கும் என்றார் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார்.
நான் கதையை நம்பியதை விட கார்த்திக்கை நம்பினேன். எல்லோரிடமும் பேசி மயக்கி வேலை வாங்கி விடுவார். இந்த மொத்த குழுவுடன் மீண்டும் இன்னொரு படத்தில் இணைய வேண்டும் என ஆசைப்படுகிறேன் என்றார் நாயகன் ஜெயம் ரவி.





