Spotlightசினிமா

பெரம்பூரை பின்னணியாகக் கொண்ட காதல் கதை… ‘அன்பே டயானா’ டிரெய்லர் வெளியீடு

‘மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்’ மற்றும் ‘நியோ கேசில் கிரியேஷன்ஸ்’ இணைந்து தயாரித்துள்ள ‘அன்பே டயானா’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு திரைப்படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

விழாவில் பேசிய நடிகை ரோஜா, ‘அன்பே டயானா’ குடும்ப பாசம், காதல், உறவுகள் மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்ட முழுமையான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளதாக கூறினார். குறிப்பாக படத்தின் கிளைமாக்ஸ் ரசிகர்களின் மனதை தொடும் வகையில் இருக்கும் என்றும், இயக்குநர் பாரி இளவழகனின் உழைப்பு ஒவ்வொரு காட்சியிலும் வெளிப்படுவதாகவும் பாராட்டினார்.

பரிதாபங்கள் கோபி, இயக்குநர் பாரி இளவழகன் மீது தனக்கு இருந்த நம்பிக்கையாலேயே இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறினார். ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்டின் காட்சியமைப்புகளும், படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பும் சிறப்பாக அமைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இசையமைப்பாளர் பரத் சங்கர், பெரம்பூரை மையமாகக் கொண்ட கதையால் ஈர்க்கப்பட்டு, அந்தப் பகுதியை நேரில் பலமுறை சுற்றிப் பார்த்த பிறகே இசையமைக்கும் பணியை தொடங்கியதாக கூறினார். இந்தப் படத்தில் இடம்பெறும் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

சேத்தன், இந்தப் படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமும் முழுமையாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், இயக்குநர் பாரி இளவழகனின் எழுத்து படத்தின் மிகப்பெரிய பலம் என்றும் கூறினார். சமுத்திரக்கனி மற்றும் சசிகுமார் ஆகியோர், பாரி இளவழகனின் படைப்பாற்றலை பாராட்டி, ‘அன்பே டயானா’ வெற்றிப் படமாக அமையும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினர்.

நாயகி ரம்யா ரங்கநாதன், டயானா கதாபாத்திரம் தனது திரைப்பயணத்தில் முக்கியமானதாக இருக்கும் என்றும், பெரம்பூரின் கலாச்சாரம் மற்றும் ஆங்கிலோ-இந்திய சமூகத்தின் வாழ்க்கை முறையை படம் அழகாக பதிவு செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இயக்குநரும், கதாநாயகனுமான பாரி இளவழகன், இந்தப் படம் ஒரு குழுவின் கூட்டு முயற்சியால் உருவானது என்றும், படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரின் பங்களிப்பும் முக்கியமானது என்றும் கூறினார். பெரம்பூரின் கலாச்சாரத்தை கொண்டாடும் திரைப்படமாக ‘அன்பே டயானா’ அமையும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.

முன்னதாக வெளியான ஃபர்ஸ்ட் லுக், பாடல்கள் மற்றும் புரமோஷன் அப்டேட்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிரெய்லரும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.

‘ஜமா’ படத்தின் மூலம் கவனம் பெற்ற பாரி இளவழகன், இப்படத்தில் கதாநாயகனாக நடித்ததுடன் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். அவருக்கு ஜோடியாக ரம்யா ரங்கநாதன் நடித்துள்ளார். ரோஜா, சேத்தன், பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி, செல் முருகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘மண்டேலா’, ‘மாவீரன்’ படங்களின் இசையமைப்பாளர் பரத் சங்கர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு, ‘அருவி’ புகழ் ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை பார்த்தா மேற்கொண்டுள்ள நிலையில், கலை இயக்கத்தை மகேந்திரன் கவனித்துள்ளார்.

‘அன்பே டயானா’ திரைப்படம் ஜூலை 17, 2026 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button