Spotlightதமிழ்நாடு

தொகுதியை தக்க வைக்க சிட்டிங் எம்.எல்.ஏ.வின் உள்ளடி வேலை?! இது அரக்கோணம் அரசியல்!!

ரக்கோணம் தொகுதி கடந்த 2011ம் ஆண்டுக்கு முன்புவரை அசைக்க முடியாத திமுக கோட்டையாக இருந்தது.

2011ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் கூட்டணிக்கு கொடுத்ததால் அசைக்க முடியாத திமுக கோட்டையை அதிமுக சுலபத்தில் கைப்பற்றியது.

அதிமுக சார்பில் சு.ரவி வெற்றி பெற்றார். அடுத்து வந்த தேர்தலிலும் திமுகவின் வேட்பாளர் தேர்வு சர்ச்சைகளால் அதிமுக வேட்பாளர் சு.ரவி மீண்டும் இரண்டாம் முறையாக அரக்கோணத்தை கைப்பற்றினார்.

இதற்காக திமுகவின் வேட்பாளர் தேர்வு சர்ச்சையை தனக்கு சாதகமாக்கி பல “நள்ளிரவு தனி கவனிப்பு” களை வைத்து பல கோஷ்டிகளை “வளைத்து” வெற்றியை தக்க வைத்து கொண்டார் சிட்டிங் எம்.எல்.ஏ.

இப்போது 3வது முறையாக மீண்டும் அதிமுக வேட்பாளர் ஆக அரக்கோணத்தில் நிற்கிறாராம். இந்த முறை எப்படியும் ஹாட்ரிக் வெற்றி அடிக்க வேண்டும் என பல கட்ட பகீரத முயற்சிகளை எடுத்து வருகிறார்.

அதே நேரம், எம்.எல்.ஏ.ரவி அதிமுக அமைச்சர்களுக்கு இணையாக “முறைகேடான வகையில் வளர்ச்சி” அடைந்திருப்பதாகவும் திமுக ஆட்சிக்கு வந்ததும் ரவி சிறைக்கு செல்வது உறுதி என பனப்பாக்கம் கூட்டத்தில் ஸ்டாலின் அதிரடியாக பேச அரக்கோணம் தொகுதி கவனிக்கப்படும் தொகுதியாக மாறியது.

அதோடு, அரக்கோணம் தொகுதியை எப்படியும் கைப்பற்றியே ஆக வேண்டும் என மாவட்ட செயலாளர் காந்திக்கு கட்சித்தலைமை சிறப்பு அசைன்மெண்ட் கொடுத்திருக்கிறதாம்.

அதோடு, மாவட்ட செயலாளர் காந்தியும் அரக்கோணம் தொகுதி மீது ஸ்பெஷல் கேர் எடுத்திருக்கிறார்… காரணம் அரக்கோணம் அதிமுக எம்.எல்.ஏ. ரவி கடந்த சில வாரங்களுக்கு முன்பு திமுக மாவட்ட செயலாளர் காந்தியை கடுமையாக விமர்சித்து பேசியதும், அதற்கு பதிலடியாக இராணிப்பேட்டையில் நடந்த ஆர்ப்பாட்ட கூட்டத்தில் காந்தி சவால் விட்டதும் தொகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொகுதியில் ஏற்கனவே அடிப்படை வசதிகள் எதையும் பெரிதாக செய்யாததால் சிட்டிங் எம்.எல்.ஏ. ரவி மீது பொதுமக்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். இது போதாதென்று 2முறை பதவியில் இருந்தும் கூட பணியாற்றிய கட்சி நிர்வாகிகள் யாருக்கும் எதையும் பெரிதாக செய்யாததால் கட்சி நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

இதனால்தான் அரக்கோணம் தொகுதியில் உள்ள கைனூர் பகுதியில் நடைபெற்ற கூட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வந்தபோதும் எதிர்பார்ததைவிட மக்கள் கூட்டம் இல்லாததால் கடும் அப்செட் ஆன முதல்வர் பழனிச்சாமி மேடைக்கே வராமல் வாகனத்திலேயே நின்றபடி பேசி சென்றது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில் ஹாட்ரிக் வெற்றி பெறுவது சந்தேகமே என்பதை புரிந்து கொண்டதால் “உள்ளடி” வேலைகளில் சிட்டிங் எம்.எல்.ஏ. இறங்கி இருப்பதாக விவரம் அறிந்தவரகள் தொகுதியில் முணுமுணுக்க ஆரம்பித்து இருக்கிறார்கள்.

இதற்கு காரணம் இல்லாமல் இல்லை… சிட்டிங் எம்.எல்.ஏ. ரவியின் வலது, கரமாக பல ஆண்டுகளாக கூடவே நெருக்கமாக இருந்த “வீரமான”வக்கீல் திடீரென அதிமுகவில் இருந்து விலகி திமுக மாவட்ட செயலாளர் காந்தி முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

அப்படி இணைந்த வீரமான வக்கீல் அந்த “வாசனை” மறைவதற்குள் திமுகவில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்ததால் பல ஆண்டுகளாக கட்சியில் இருப்பவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதற்கிடையில், சமீபத்திய புதுவரவு “வீரமான” வக்கீல் திமுகவில் வந்து சேர்ந்ததும் உடனடியாக சென்னையில் உள்ள “முக்கிய பெண் விவிஐபி” ஒருவரை நேரில் போய் சந்தித்து அரக்கோணம் தொகுதியை பெற்று தரும்படி கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு அந்த “புதுவரவு” வீரமான வக்கீலுக்கு ஓய்வு பெற்ற “நீதியை” நிலை நாட்டும் ஒருவர் ஆதரவாக இருப்பதாக “வீரமான” வக்கீல் சொல்லி வருவதையும் கட்சியினர் அங்கொன்றும் இங்கொன்றும் பேசாமலில்லை.

அந்த “நீதியை” நிலை நாட்டுபவர் ஏற்கனவே அதிமுக அனுதாபி என்பது உலகம் அறிந்த உண்மை.

அதிமுக சிட்டிங் எம்.எல்.ஏ.வுக்கு வலது கரமாக செயல்பட்டு திடீரென கட்சி மாறி திமுகவில் இணைந்து அந்த எம்.எல்.ஏ.வை எதிர்த்து போட்டியிட விருப்ப மனுவை அளித்த “புதுவரவு” வீரமான வக்கீல் பின்னணியில் சிட்டிங் எம்.எல்.ஏ. இருக்கலாம் என்றும், அவரே தன்னை எதிர்த்து திமுக சார்பில் செல்வாக்கான வேட்பாளரை போடாதபடி “உள்ளடி” வேலை செய்ய இப்படி ஒரு திட்டம் தீட்டி இருக்கலாம் என்ற சந்தேகத்தையும் உ.பி.க்கள் எழுப்புகிறார்கள்.

இந்த விவரங்கள் அனைத்தும் ஐபேக் ரகசிய டீம் கவனித்து அப்படியே கட்சித் தலைமைக்கு “சிறப்பு நோட்” போட்டிருக்கிறதாம்.

அதோடு, பலமான வேட்பாளரை திமுக தேர்வு செய்ததால்தான் இதுபோன்ற “குறுக்கு வழிகளை” யோசிக்கிறாரோ சிட்டிங் என்கிறார்கள் தொகுதி மக்கள்…

ஏற்கனவே தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் அதில் அரக்கோணம் மட்டும் விதிவிலக்கா என்ன?!

– களத்தில் இருந்து நமது செய்தியாளர்

Facebook Comments

Related Articles

Back to top button