Spotlightசினிமாவிமர்சனங்கள்

அயலான் விமர்சனம் 3/5

இயக்கம்: ரவிக்குமார்

நடிகர்கள்: சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன், ஷரத், பானுப்பிரியா

ஒளிப்பதிவு: நீரவ் ஷா

இசை: ஏ ஆர் ரகுமான்

கிராமத்தில் இருக்கும் சிவகார்த்திகேயன் பறவைகள் மீதும் இயற்கை மீதும் அலாதி அன்பு வைத்திருக்கிறார். இப்படியே இருந்தால் சம்பாதிக்க மாட்டாய் என்று சிவகார்த்திகேயனை சென்னை அனுப்பி வைக்கிறார் அவரது தாயான பானுப்பிரியா.

அங்கு, யதேச்சையாக கருணாகரன் மற்றும் யோகிபாபுவை சந்திக்கிறார். அவர்களுடனே தங்குகிறார்.

இந்த சமயத்தில், வேற்று கிரகத்தில் இருந்து ஒரு அதிசய விண்கல் ஒன்றுபூமியில் விழுகிறது. அதைக் கைப்பற்றிய வில்லன் ஷரத், அதை வைத்து பூமிக்கு அடியில் பல கிலோமீட்டர் ஆழத்திற்கு அடியில் இருக்கும் விஷவாயுவை வெளியே எடுக்க திட்டமிடுகிறார்.

அதேசமயம், அந்த விண்கல்லை கண்டுபிடிக்க பூமிக்கு வருகிறது ஒரு ஏலியன். வந்த இடத்தில் வில்லனிடம் ஏலியனின் ஸ்பேஷ் ஷிப் மாட்டிக் கொள்ள, செய்வதறியாது சிவகார்த்திகேயனிடம் தஞ்சம் அடைகிறது.

சிவகார்த்திகேயனின் நல்ல உள்ளம் அறிந்து அவருடன் சில தினங்கள் இருக்கிறது.

ஏலியனோடு சேர்ந்து வில்லனின் சதித்திட்டத்தை சிவகார்த்திகேயன் எப்படி முறியடித்தார் என்பதே படத்தின் மீதிக் கதை.

புகை மற்றும் குடி இந்த இரண்டும் இல்லா தரமான ஒரு குடும்பபாங்கான படத்தை கொடுத்ததற்காக இயக்குனர் ரவிக்குமாரை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.

எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும், அதில் சிறப்பான ஒரு நடிப்பைக் கொடுப்பதில் வல்லவர் சிவகார்த்திகேயன். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில், தனது யதார்த்தமான நடிப்பைக் கொடுத்து அசத்தியிருக்கிறார் நாயகன் சிவகார்த்திகேயன்.

பக்கத்து வீட்டுப் பையனாக பேசும் வசனங்களும் பெரிதாகவே நம்மை ஈர்த்திருக்கின்றன. ரகுல் ப்ரீத் சிங்கிற்கு பெரிதான ஒரு ஸ்கோப் இல்லை.

படத்தில் ஆங்காங்கே சின்ன தடுமாற்றம் இருந்தாலும், தமிழ் சினிமாவில் ஒரு தரமான ஹாலிவுட் தரத்திற்கு இணையான ஒரு ஏலியன் படத்தைக் கொடுத்திருக்கிறார்.

ஏலியன் படம் என்றால் ஹாலிவுட்டில் தான் பார்க்க வேண்டுமா இனி தமிழிலும் பார்க்கலாமே என்ற கூற வைக்கும் அளவிற்கு தனது திறமையை இந்த படத்திற்கு கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

ஏலியனின் சக்தி எதுவரை என்பதை கூறுவதில் சற்று இயக்குனர் தடுமாறியிருக்கிறார்.

கருணாகரன் மற்றும் யோகிபாபுவின் காமெடிகள் படத்திற்கு பெரிதாகவே கைகொடுத்திருக்கிறது.

என்ன ஆச்சி ஏ ஆர் ரகுமானுக்கு.? ஏற்கனவே பழக்கப்பட்ட கேட்ட இசையை தான் மீண்டும் ஏ ஆர் ரகுமான் கொடுத்திருக்கிறார். இப்படத்திற்கென்று இசையில் எந்த ஒரு முயற்சியும் ஏ ஆர் ரகுமான் கொடுக்காதது பெரும் ஏமாற்றம் தான்.

நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு படத்திற்கு சற்று ஆறுதல்.

ரவிக்குமாரின் முயற்சிக்கு பெரும் வாழ்த்துகள்.

அயலான் – முயற்சிக்கு பாராட்டுகள்..

Facebook Comments

Related Articles

Back to top button