
தமிழ் சினிமாவில் சமூக அக்கறை மிக்க கதையம்சத்துடன் உருவாகியுள்ள ‘நடு நாடு’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சாகித்யா கிரியேஷன்ஸ் மற்றும் தி கிங் மூவி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படம், கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் வலுவான கதைக்களத்துடன் உருவாகியுள்ளது.
இப்படத்தின் மூலம் எழில் மற்றும் அருண்குமார் கதாநாயகர்களாக அறிமுகமாகின்றனர். கதாநாயகியாக அனுஸ்ரீ நடித்துள்ள நிலையில், ‘காந்தாரா’ புகழ் சம்பத் ராம் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், கருத்தம்மா ராஜஸ்ரீ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படம், முழுமையாக கடலூர் மாவட்டம் மற்றும் சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. கல்வி மனித வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றங்களையும், அதன் சமூகப் பொறுப்பையும் வலியுறுத்தும் வகையில் படம் உருவாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இசையமைப்பாளர் பரணி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை செந்தில் மாறன் கவனித்துள்ள நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன.
அண்மையில் பிரசாத் லேப் வளாகத்தில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குநர் ஆர்.வி. உதயகுமார், பாடலாசிரியர் மா.ஆ. தாமு, எடிட்டர் ஆர்.கே. செல்வம் மற்றும் ஒளிப்பதிவாளர் செந்தில் மாறன் ஆகியோரின் பணிகளை வெகுவாக பாராட்டினார்.

இயக்குநர் பேரரசு, படத்தின் இயக்குநர் சந்தோஷ் மற்றும் இசையமைப்பாளர் பரணி ஆகியோரின் அர்ப்பணிப்பை பாராட்டியதோடு, திரைப்படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.
தயாரிப்பாளரும் இயக்குநருமான திருமலை, “சிறிய படங்களும் தரமான உள்ளடக்கத்தால் வெற்றி பெற வேண்டும். ‘நடு நாடு’ திரைப்படத்தின் பாடல்கள், ஒளிப்பதிவு, எடிட்டிங் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் சிறப்பாக அமைந்துள்ளன. இந்த திரைப்படம் நிச்சயம் வெற்றி பெறும்” என்று வாழ்த்தினார்.
சமூகத்திற்கு தேவையான கருத்தை சுவாரஸ்யமான திரைக்கதையுடன் சொல்லும் ‘நடு நாடு’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.





