Spotlightசினிமாவிமர்சனங்கள்

அடியே – விமர்சனம் 3/5

மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘அடியே’.‌ இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார், கௌரி ஜி. கிஷன், மதும்கேஷ் பிரேம், ஆர் ஜே விஜய், வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

கதைப்படி,

டைம் டிராவல் கதையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் படம் தான் இந்த “அடியே”. இப்போது நடக்கும் உலகத்திற்கு கற்பனையான ஒரு உலகம் இருக்குமென்றால் அது பேரலல்யுனிவெர்ஸ் ஆகும். அந்த கற்பனையான உலகத்தில் நாம் விரும்பும் அனைத்தும் நடந்தால் அது ஆல்டர்நேட் ரியாலிட்டி.

இந்த இரண்டையும் வைத்து தான் நகர்கிறது அடியே படத்தின் கதை.

நிஜ உலகத்தில் கெளரியுடன் காதலை கூட தெரிவிக்க முடியாமல் தவிக்கும் ஜி வி பிரகாஷ் பேரலல்யுனிவெர்ஸில் கெளரியின் கணவராக இருக்கிறார். வேலையே இல்லாமல் இருக்கும் ஜி வி பிரகாஷ் அங்கு ஆஸ்கர் வென்ற மிகப்பெரும் இசையமைப்பாளராக இருக்கிறார்.

கனவு உலகத்தில் நடக்கும் நிகழ்வானது நிஜ வாழ்க்கையிலும் ஜி வி பிரகாஷிற்கு நடந்ததா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

முந்தைய படத்திலிருந்து நடிப்பில் இன்னும் சற்று தேறியிருக்கிறார் ஜி வி பிரகாஷ். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமல் சுற்றும் ஒரு மனிதனாக இருக்கும் இடத்திலாக இருக்கட்டும், கெளரியை காதலிக்கும் போது இருக்கும் மகிழ்ச்சியாக இருக்கட்டும் என பல இடங்களில் தனது முக பாவணைகளால் ரசிக்கும்படியான காட்சிகள் பலவற்றைக் கொடுத்து திரையில் நம்மை கட்டிப் போட்டுவிடுகிறார் ஜி வி பிரகாஷ்.

96 படத்தில் குட்டி த்ரிஷாவாக ரசித்த கெளரி இப்படத்தில் தனி நாயகியாக நடித்து ரசிகர்களை வெகுவாகவே கவர்கிறார். காதல் எமோஷன்ஸ், அழகு, சிரிப்பு என பல இடங்களில் தனக்கான தனித்துவத்தை நன்றாகவே வெளிப்படுத்தியிருக்கிறார்.

தான் நடிக்கும் படங்களில் என்ன மாதிரியான நடிப்பை கொடுப்பாரோ அதையே இப்படத்திலும் கொடுத்திருக்கிறார் வெங்கட் பிரபு.

இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் தனக்கான படைப்பை மிக தெளிவாக கொடுத்திருக்கிறார். முதல் பாதி இடியாப்ப சிக்கலாக செல்லும் கதையானது இரண்டாம் பாதியில் தெளிவு பெறுகிறது.

என்ன சொல்ல வர்ராங்க இவங்க என முதல் பாதி பல கேள்விகளை எழுப்பினாலும், இரண்டாம் பாதியில் ஆமாப்பா கரெக்ட் என சொல்லும் அளவிற்கு அழகாகவே திரைக்கதையை நகர்த்திச் சென்றிருக்கிறார்கள்.

எட்டப்படாத பல விஷயங்களை இப்படி நடந்தா எப்படி இருக்கும் என பல கோணங்களில் யோசித்து கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர்.

கோகுல் பினோய் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தாக அமைந்திருக்கிறது. ஜஸ்டின் பிரபாகரின் இசையில் பாடல்கள் ஓகே ரகமாகவும் பின்னணி இசை கதையோடு நகரும் ஒரு ஃபீல் குட் இசையாகவும் கொடுத்திருக்கிறார்.

சிறிது தவறினாலும், கதைகளத்திற்குள் நாம் தவறிவிடுவோம்.. கையில் வைத்திருக்கும் செல்போனை எடுக்காமல் முழுக்க முழுக்க திரையில் நாம் ஐக்கியமானால் இந்த “அடியே” உங்களை அடடே போட வைக்கும்..

”அடியே” – ”அடடே” சபாஷ்

Facebook Comments

Related Articles

Back to top button