
ரத்திந்திரன் ஆர் பிரசாத் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க நேரடியாக ஓடிடியில் வெளியாகவிருக்கும் படம் தான் ‘பூமிகா’.
கதைக்குள்….
ஐஸ்வர்யா ராஜேஷ் அவரது கணவராக வரும் விது, தோழியாக வரும் சூர்யா கணபதி மற்றும் விதுவின் தங்கை மாதுரி அனைவரும் காட்டிற்குள் செல்கின்றனர். அங்கு ஒரு பங்களாவில் தங்குகின்றனர்.
அன்று இரவு அந்த பங்களாவில் அமானுஷ்யம் ஒன்று இருப்பதை அவர்கள் உணர்கின்றனர். இதனால், அங்கிருந்து கிளம்பிட வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள். கிளம்பும் வேளையில் அவர்கள் வந்த கார் ரிப்பேர் ஆகி விட, அன்றைய இரவு அங்கு தங்கியே ஆக வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகின்றனர்.
வீட்டின் காவலாளியாக வரும் பாவேல் நவகீதன் அவர்களோடு இருக்கிறார். இச்சமயத்தில், அந்த அமானுஷ்யம் அவர்களிடம் எதையோ கூற வருகிறது. யார் அந்த அமானுஷ்யம், என்ன கூற வந்தது.? இவர்களுக்கும் அந்த அமானுஷ்யத்திற்கும் என்ன சம்மந்தம் .? என்பதே படத்தின் மீதிக் கதை.
படத்தில் நடித்த அனைவருமே கதைக்கு ஏற்ற கதாபாத்திரம் தான். தங்கையாக நடித்த மாதுரி தான் கொஞ்சம் ஓவர் ஆக்டிங்கை கொடுத்திருக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ், விது, சூர்யா கணபதி, பாவேல் நவகீதன் ஆகியோர் தேர்ந்த நடிப்பை கொடுத்திருக்கின்றனர்.
பூமிகா (அவந்திகா) என்ற பெண்ணின் நடிப்பு படத்தில் பாராட்டும்படியாக இருந்தது.
புவி வெப்பமடைதல் என்ற மூலக்கதையை கையில் எடுத்த இயக்குனர் அதை சொல்லும் விதத்தில் சற்று சறுக்கியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். பூமியை வெப்பமடையாமல் பார்த்துக் கொண்டால் மட்டுமே நாம் நலமாக வாழ முடியும் என்ற முக்கியமான கதையை கையில் எடுத்த இயக்குனருக்கு தனி பாராட்டினை தெரிவித்து விடலாம்.
படத்தின் முதல் பாதியை முடிப்பதற்குள் தலையை பிய்த்துக் கொள்ளலாம் போன்ற பொருமையை சோதித்து விடுகிறார்கள். இரண்டாம் பாதியில் தான் படத்தின் கதையை முழுவதுமாக வைத்திருக்கிறார்கள். மிரட்டல் காட்சியில் மிரட்டியிருக்கிறார் இயக்குனர். ஆங்காங்கே இசையை கூடுதலாக கொடுத்து கடுப்பேற்றுகிறார் இசையமைப்பாளர் பிருத்வி சந்திரசேகர்.
ராபர்டோ ஜஸாரா மலைப்பகுதியினை மிகவும் அழகாக காட்டியிருக்கிறார்.
அவசியமான கதை என்றாலும் அநாவசியமான சுற்றலால் நம்மையும் தலை சுற்ற வைத்து விடுகிறார்கள்.
பூமிகா – பூவை மட்டும் கொடுத்திருக்கலாம்…





