
சென்னை: போரூரில் தனியார் கார் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 200-க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து சேதமாகியுள்ளது.
போரூரில் உள்ள தனியார் கார் குடோனில் சுமார் 300 கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று மதியம் குடோனை சுற்றியுள்ள புற்கள் எரிந்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து முதலில் 3 கார்கள் தீ பிடித்ததை தொடர்ந்து அருகில் உள்ள 200-க்கும் மேற்பட்ட கார்கள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளது.
இந்த தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ பெரும் பகுதிகளில் பரவியுள்ளதால், கோயம்பேடு, அம்பத்தூர், ஜெ.ஜெ.நகர், பூந்தமல்லி உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயிணை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த தீ விபத்தினால் ஏற்பட்ட கரும்புகை மூட்டத்தால் போரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து எப்படி ஏற்பட்டது, யாரும் குடோனுக்கு தீ வைத்துவிட்டு சென்றார்களா என்பது குறித்து போலீசார் தவீர விசாரணை நடத்தி வருகின்றனர்.





