
காதலுக்கு ஏது வயது..?? மனதும் மனதும் இணைவது தானே காதல்.. மொழி, மதம், பேதம் இதெல்லாம் கடந்து வந்து இதயத்திற்குள் சங்கமாவது இந்த காதல்
அப்படியொரு அழகான காதலை கவிதையாக தந்திருக்கும் படைப்பு தான் இந்த கேர் ஆஃப் காதல்.
49 வயதாகியும் திருமணமே செய்துகொள்ளாமல் இருக்கும் தீபன் ஒரு அரசு அலுவலகத்தில் பியூனாக பணிபுரிகிறார். ((தீபன் யார் என்றால், முதல் மரியாதை படத்தில் அந்த நிலாவத்தான் நான் கையில பிடிச்சேன் என்ற பாடலுக்கு தோன்றுவாரே அவரே தான்…)) பல வருடங்களுக்கு பின் மீண்டும் தமிழ் சினிமாவிற்குள் தோன்றியிருக்கிறார்.
இவரது அலுவலகத்திற்கு மேல் அதிகாரியாக மாற்றலாகி வருகிறார் சோனியாகிரி. இவர் கணவனை இழந்தவர். சோனியாகிரிக்கு 20 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இந்த நிலையில் தீபனின் நடவடிக்கைகள், கேரக்டரை பார்த்து சோனியாகிரிக்கு தீபன் மீது ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது.
தீபனுக்கு திருமணம் ஆகாததால், பலரும் அவரை வார்த்தையால் துன்புறுத்துகின்றனர். சோனியாகிரியின் கனிவான பேச்சு அவரை ஆறுதல் படுத்த, தீபனுக்கும் சோனியாகிரி மீது ஈர்ப்பு ஏற்படுகிறது.
மற்றொரு காதல் கதையில், நாயகன் வெற்றி டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிகிறார். அந்த கடைக்கு நாயகி சரக்கு வாங்க தினமும் வருகிறார். நாயகிக்கு பாட்டில் கொடுக்கும்போதெல்லாம் அவளது கண்களால் ஈர்க்கப்படும் வெற்றி, நாயகியிடம் தன் காதலை வெளிப்படுத்துகிறார். அதன் பின் நடக்கும் சம்பவமே இந்த காதல் கதையின் முடிவு…
பள்ளிக்கூடத்தில் படிக்கும் நிரேஸ் என்ற மாணவனுக்கு சக மாணவி ஸ்வேதா மீது காதல். ஸ்வேதாவை பாட்டுப் போட்டியில் பாட வைத்ததின் பலன் இருவரையும் ஸ்வேதாவின் அப்பா பிரித்து டெல்லிக்கு அனுப்பி விடுகிறார்.
கார்த்திக் ரத்னமும் அயிராவும் எதிரும் புதிருமாக இருந்து காதலராகி விடுகிறார்கள். ஆனால் கிறிஸ்துவ மதமும் இந்துமதமும் எதிர்கொள்ளும்போது மதம் என்ற வெறியால் காதலர்கள் தவித்துப் போகிறார்கள்.
நாலுமுனைக் காதலாக இந்தப்படத்தை திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார் ஹேமாம்பர் ஜஸ்தி.
பருவ காதலை சிறப்பான முறையில் கையாண்டு, நான்கு பருவத்திலும் மலரும் காதலை மணம் மாறாமல் மனம் நோகாமல் படைத்திருக்கிறார் இயக்குனர்.
இசையமைப்பாளர் ஸ்வீகர் அகஸ்தி இசையில், காதலின் ஏக்கத்தை, வருடலை இசையை இதயம் வழியாக ரசிக்க வைத்திருக்கிறார்.
குணசேகரனின் ஒளிப்பதிவு காதலை ரசிக்க வைத்திருக்கிறது.
தீபனில் ஆரம்பித்து தேர்ந்தெடுக்கப்பட்ட கதையின் நாயகர்கள் அனைவரும் தங்களுக்கான கதாபாத்திரத்தை மிகவும் நேர்த்தியாக செய்து முடித்திருக்கிறார்கள்.
நான்கு காதல் கதையையும் ஒரே பாடலில் இணைத்தது ரசிக்க வைத்தது.
கேர் ஆஃப் காதல் – ரசிக்க வைத்த பல பருவ காதல் ….





