
தயாரிப்பாளர்: Rufus Parker
வெவ்வேறு நாடுகளிலிருந்து கடத்தி வரப்படும் 18 வயதுக்கும் குறைவான சிறுவர்களை கொத்தடிமைகளாக அடக்கி வைத்து அவர்களை தையல் கூலிகளாக பயன்படுத்திகின்றனர். பன்னிரண்டு மணி நேர வேலை, அடி, சவுக்கடி, பிரம்படி என்று பல்வேறு கொடுமைகள் நடத்தப்படுகிறது.
இளம் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதுடன் அவர்களை வைத்து பாலியல் படங்கள் தயாரிப்பது மற்றும் பல்வேறு சட்ட விரோதங்கள் செயல்கள் நடைபெறுவதை சிட்டி ஆப் ட்ரீம்ஸ் படம் வெளிப்படுத்தி இருக்கிறது.
இந்த கும்பலில் கதையின் நாயகனான சிறுவன் ஆரி லோபஸ் சிக்கிக் கொள்கிறான். தான் ஒரு கால்பந்தாட்ட வீரனாக வேண்டும் என்ற கனவோடு வாழ்ந்து வரும் ஆரி லோபஸ், இந்த கும்பலில் இருந்து தப்பித்தாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.
பல நாடுகள் வியந்து பார்க்கும் அளவிற்கான கட்டமைப்பு, வசதி, வாழ்க்கை என கொண்டாடப்படும் ஒரு நாடாக திகழும் அமெரிக்காவின் மறுபக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது இந்த படம்.
குழந்தை தொழிலாளர்களின் கொடுமைகளை சாட்டையடியாக வெளிச்சப்படுத்தி அதை திரைக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
கதையின் நாயகனான சிறுவன் ஆரி லோபஸ், வசனங்கள் எதுவும் பேசாமல் தனது கண்கள் மூலம் பல உணர்ச்சிகளை பார்வையாளர்களுக்கு கடத்துகிறார். கால்பந்தாட்டத்தின் மீதான தனது ஆர்வத்தை ஒரு காகிதத்தின் மூலம் வெளிப்படுத்தும் ஆரி லோபஸ், தப்பிக்க மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியிலும் பார்வையாளர்களை பதற்றமடைய செய்கிறார்.
அதிலும், ஒரு காட்சி தப்பிச் செல்லும் போது ஒளிப்பதிவு மற்றும் ஆரி லோபஸின் நடிப்பு இரண்டும் உயிரோட்டமான ஒன்று.
படம் பார்க்கும் பார்வையாளர்களின் உணர்ச்சிகளை ஒரு நிமிடம் அசைத்து பார்க்கும் விதமாக திரைக்கதையை கொடுத்திருக்கிறது படக்குழு.
ஒரு வாழ்வியலின் உயிரோட்டமாக க்ளைமாக்ஸ் காட்சியில் ஆரி லோபஸ் விடும் கண்ணீரோடு நம் கண்ணீரும் கலந்து கொள்ளும் அளவிற்கான ஒரு தரமான படைப்பைக் கொடுத்ததில் ”City Of Dreams” படக்குழுவினர் பெருமை கொள்ளலாம்..