தமிழ்நாடு

தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கும் ”சாதனை” அதிகாரி!

ஆயுதப்படையில் தலைமை காவலராக, சிறப்பு உதவி ஆய்வாளராக, அம்மாவின் கருப்பு பூனை படை அதிகாரிகளில் ஒருவராக மற்றும் பல வி.ஐ.பிக்களுக்கு பாதுகாப்பு அதிகாரியாக என சுமார் 40 வருடங்கள் பணிபுரிந்து காவல்துறையில் இருந்து ஓய்வுபெற்றவர் திரு.தனசேகரன். கராத்தே, களரி, தாய்ச்சி , ஜிம்னாஸ்டிக் என தற்காப்பு கலைகளில் வல்லவரான இவர்,தமிழக காவல்துறை சார்பாக பல்வேறு விளையாட்டு போட்டிகளில் ஜப்பான், மலேசியா, தென் ஆப்பிரிக்கா உட்பட பலநாடுகளுக்கு சென்று போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்று வந்துள்ளார்.

இதில் என்ன ஆச்சர்யமான செய்தி என்றால் இந்த போட்டிகளில் கலந்துகொள்ள சென்றுவந்ததற்கான செலவையெல்லாம் தனது சொந்த பணத்தில் இருந்தே செலவு செய்துள்ளார் தனசேகரன். இதற்காக அரசிடமிருந்தோ, அல்லது தனியாரிடம் இருந்தோ எந்தவித ஸ்பான்சர்ஷிப்பும் கிடைக்கவில்லை.. காவல்துறை மேலதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற்று தமிழக காவல்துறை சார்பாக போட்டிகளில் கலந்துகொள்வதை மட்டுமே பிரதானமாக கருதியதால் தனசேகரனும் அந்த சமயங்களில் அதை எதிர்பார்க்கவில்லை.

2013ல் ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற போட்டிகளில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்று வந்தார் தனசேகரன். காவல்துறையில் இருந்து வெளிநாட்டு சென்று தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்கிற பெருமையையும் பெற்றார். தனது வெற்றியை மறைந்த முதல்வர் மாண்புமிகு புரட்சி தலைவி ஜெயலலிதாவின் பொற்பாதங்களில் சமர்ப்பித்து அவரிடம் ஆசி பெற விரும்பிய தனசேகரன் அந்தசமயத்தில் உயர் பொறுப்பில் இருந்த அதிகாரிகளிடம் தனது விருப்பத்தை கோரிக்கையாக முன் வைத்தார்.

ஊடகங்கள் மூலமாக கூட, அவர் முதல்வரை சந்திக்க விரும்பும் கோரிக்கை அப்போது வெளியானது. ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை, அவரது கோரிக்கை சிலரால் கண்டுகொள்ளாமல் கிடப்பில் போடப்பட்டது. இதனால் “தங்கத்தாமரை அம்மாவின் பாதங்களில் என் தங்க பதக்கத்தை சமர்ப்பிக்க நினைத்தேன்.. அந்த கோரிக்கை நிறைவேறாமல் போனதால் என்னுடைய பணியில் இருந்து விருப்ப ஒய்வு பெற விரும்புகிறேன்” என வெளிப்படையாக காரணம் கூறி பணி ஓய்வுக்கு விண்ணப்பித்தார் தனசேகரன்..

ஆனால் அப்போது கூட அவரை அழைத்து விசாரித்தவர்கள், தனசேகரன் குடும்ப சூழல் காரணமாக பணியில் இருந்து ஒய்வு பெறுகிறார் என காவல்துறை உயரதிகாரிகளுக்கு தவறான தகவலைத்தான் கொடுத்தார்கள். உண்மையான காரணம் மூடி மறைக்கப்பட்டது.

மாண்புமிகு அம்மா மேல் கொண்ட அதீத அன்பினால் சைதாப்பேட்டையில் அம்மா கராத்தே பள்ளி ஒன்றை ஆரம்பித்து கடந்த ஐந்து வருடங்களாக நடத்திவரும் தனசேகரன், ஏழை எளிய குழந்தைகளுக்கு அவர்களின் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் வளர்க்கும் விதமாக இலவசமாக கராத்தே பயிற்சி அளித்து வருகிறார். அவர்களும் பல நிகழ்சசிகளில் கலந்துகொண்டு சாதனை படைத்தும் வருகிறார்கள். மாண்புமிகு அம்மா உடல்நலம் குன்றி அப்பாலோவில் சிகிச்சை எடுத்துவந்த சமயத்தில் தனது கராத்தே பள்ளி மாணவர்களுடன் மருத்துவமனை சென்று பிரார்த்தனை செய்தார் தனசேகரன்.

விருப்ப ஒய்வு பெற்ற தனசேகரனுக்கு சேரவேண்டிய பணப்பலன்கள், பென்ஷன் ஆகியவை தடங்கலின்றி கிடைத்தாலும், தனது சாதனைகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காததும் சிலரின் காழ்ப்புணர்ச்சியால் அது மூடி மறைக்கப்பட்டதும், இப்போதும்கூட மிகுந்த மனவேதனையை தருகிறது என்கிறார் தனசேகரன்.. சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தின்போது கூட எம்.எல்.ஏ ஒருவர், சாதனையாளர்களுக்கு புரட்சித்தலைவி அம்மா விருது வழங்கி கௌரவிக்கவேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார். அதை தமிழக அரசு பரிசீலிக்கவேண்டும்.. அதற்காக ஆவண செய்யவேண்டும் என்கிறார் தனசேகரன்.

“என்னுடைய விருப்பமெல்லாம், எனது சாதனைகளுக்கு அப்படி ஒரு அங்கீகாரம் தமிழக அரசால் வழங்கி கௌரவிக்கப்படவேண்டும் என்பதுதான். அதேபோல பெண்களின் பாதுகாப்பு என்பது அம்மாவின் கனவு. அந்த கனவை நிறைவேற்றும் விதமாக தமிழகம் முழுவதும் அம்மா கராத்தே பள்ளிகளை துவங்கி ஏழை எளிய மாணவர்களுக்கு இலவச பயிற்சிகளை வழங்க முன்வரவேண்டும் என்பது என்னுடைய கோரிக்கை” என்கிறார் தனசேகரன்.

தமிழக காவல்துறைக்கு தனது திறமைகளால் பெருமை சேர்த்த இந்த இந்த ஓய்வுபெற்ற காவலரின் மனக்குமுறல் இப்போதாவது உரியவர்கள் மூலம் தமிழக அரசை எட்டுமா..? இவரது சாதனைகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்குமா..? இவரது கோரிக்கை நிறைவேறுமா..?

Facebook Comments

Related Articles

Back to top button