Spotlightவிமர்சனங்கள்

தர்மபிரபு ; விமர்சனம் 3/5

மலோகத்தில் எமதர்மனாக இருக்கும் ராதாரவி, தனது மோசமான உடல்நிலையை கருத்தில் கொண்டு, எமதர்மன பதவியை தனது மகனான யோகிபாபுவிற்கு வழங்குகிறார். சித்திரகுப்தனாக இருக்கும் ரமேஷ் திலக், எமதர்மன் பதவியை தனக்கு தரவில்லையே எனக்கூறி யோகி பாபுவிற்கு எதிராக மறைமுக சூழ்ச்சி செய்கிறார்.

அந்த சூழ்ச்சியில் இருந்து யோகிபாபு தப்பித்தாரா..??? சிவபெருமானின் கோபத்திற்கு ஆளாகமால் எமலோகத்தை காப்பாற்றினாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

எமதர்மனாக நடித்திருக்கும் யோகிபாபுவிற்கு சற்று மாறுபட்ட கதாபாத்திரம் தான். மிகவும் சவாலான கதாபாத்திரத்தை ஏற்று மிகவும் நேர்த்தியாக அதை செய்தும் முடித்திருக்கிறார். அவரது டைமிங் காமெடி படத்திற்கு மிகப்பெரிய பலமாகவும் அமைந்துள்ளது. அவரோடு இணைந்து ரமேஷ் திலக்கும் தனது பங்கிற்கு நல்ல காமெடியை அள்ளித் தெளித்திருக்கிறார்.

ஆணவக்கொலைகள், தமிழக அரசியலின் கேலிக்கூத்துகள், குழந்தைகளின் படுகொலை, விவசாயிகள் மீதான கடன் தொல்லை, ஜாதி அரசியல், வாரிசு அரசியல், இளம்பெண்களை சீரழிக்கும் கொடூரன்கள், உள்ளிட்ட மக்களின் அன்றாட பிரச்சனைகளை கையில் எடுத்து அதற்கான தீர்வுகளையும் வழங்குகிறார். மேலோகத்தில் இருந்து பூலோகத்தின் தீர்ப்புகளை மேலோகத்தில் நிறைவேற்றுகிறார்.

அம்பேத்கர், பெரியார், நேதாஜி, காந்தியடிகள் உள்ளிட்ட நான்கு தலைவர்களை படத்தில் கொண்டுவந்திருக்கிறார்கள். அவர்களை ஆக்கப்பூர்வமான செயலுக்கு உபயோகப்படுத்தும் காட்சிகள் வைத்திருக்கலாம், அதை விட்டுவிட்டு…. அந்த காட்சிகளையும், மறைந்த பிரபல அரசியல் ஆலோசகரும் பத்திரிக்கையாளருமான ‘சோ’ அவர்களை இழிவுபடுத்தும்படியாக இருக்கும் காட்சிகளையும் படத்தில் வைக்கப்படாமல் இருந்திருக்கலாம்.

மேலும், இரண்டாம் பாதியில் அதிகமாக எட்டிப் பார்த்த் ஆபாச வசனங்களை அறவே நீக்கியிருக்கலாம். இன்னும் திரைக்கதையில் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் தர்மபிரபு இன்னும் அனைவரையும் ரசிக்க வைத்திருப்பான்.

ஜஸ்டின் பிரபாகரின் பின்னனி இசை படத்திற்கு சற்று பலமாக அமைந்தது. சி ஜி வேலைகளை இன்னும் சற்று கவனித்திருக்கலாம்.

மகேஷ் முத்துசுவாமியின் ஒளிப்பதிவு கலர்புல்லாக அமைந்திருப்பது பலம்.

கன்னிராசி படத்திற்கு பிறகு இப்படத்தினை இயக்கியுள்ள முத்துக்குமரன், நல்ல ஒரு காமெடி தளத்திற்கு அடித்தளமிட்டுள்ளார்.

தர்மபிரபு – காமெடி விருந்து படைக்காமல், டிபன் மட்டும் கொடுத்து அனுப்பிவிட்டார்கள்…

Facebook Comments

Related Articles

Back to top button