விமர்சனங்கள்

எமன் கட்டளை – விமர்சனம் 3/5

கதையின் நாயகனான அன்பு, ஒரு இளம் உதவி இயக்குனராக வருகிறார். பல இடங்களில் இயக்குனராக வாய்ப்பு தேடி அலைந்தும் எந்த ஒரு பலனும் இல்லை. ஆகவே, தானே படத்தினை தயாரிக்க முடிவெடுத்து, பணத்திற்காக திருட்டில் ஈடுபடுகிறார் அன்பு.

திருமண மண்டபத்தில் நுழைந்து அங்கிருந்த பணம் மற்றும் நகைகளை கொள்ளையடிக்கிறார் அன்பு. அடுத்தநாள் அந்த மண்டபத்தில் திருமணம் நின்று மணமகள் சந்திரிகா ரேவதி மற்றும் மணமகளின் தந்தையான டி பி கஜேந்திரன் இருவரும் விஷமருந்தி விடுகின்றனர்.

ஆபத்தான நிலையில் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால், ஏற்படும் குற்ற உணர்ச்சியால் அன்பும் விஷம் அருந்தி இறந்து விடுகிறார்.

இறந்த பின் எமலோகத்தில் எமனை சந்திக்கிறார் அன்பு. விஷமருந்திய சந்திரிகா ரேவதியின் நிலைமைக்கு நீ தான் காரணம். ஆகவே, ”சந்திரிகா ரேவதியின் திருமணத்தை மூன்று மாதத்திற்குள் நீயே நடத்தி முடிக்க வேண்டும். ” என்று மீண்டும் அன்புவிற்கு உயிர் கொடுத்து பூமிக்கு அனுப்பி விடுகிறார் எமன்.

சந்திரிகா ரேவதியின் வீட்டிற்கு மேல் பகுதியிலேயே வாடகைக்கு தனது நண்பன் அர்ஜூனனுடன் குடியேறிவிடுகிறார் அன்பு.

இறுதியில், எமனின் கட்டளையான சந்திரிகா ரேவதியின் திருமணத்தை 90 நாட்களில் நாயகன் அன்பு நடத்தி முடித்தாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

நாயகன் அன்பு, மறைந்த நடிகர் மயில்சாமியின் மகன் ஆவார். தந்தையிடம் தான் கற்ற நடிப்பை இப்படத்தில் நன்றாகவே வெளிப்படுத்தியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். தன்னால் ஒரு பெண்ணுக்கு திருமணம் தடைபட்டு அவரது வாழ்க்கையே கேள்விக்குறியாகி விட்டதே என்றெண்ணி கவலை கொள்ளும் இடத்தில் நாயகன் அன்பு கதையின் நாயகனாக நன்றாகவே ஜொலித்திருக்கிறார்.

ஆங்காங்கே காமெடிக்கும் நன்றாகவே முயற்சித்து அதுவும் அன்புவிற்கு கைகொடுத்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

நாயகி, சந்திரிகா ரேவதி காட்சிகளுக்கு அழகாகவும் நடிப்பில் அளவாகவும் வந்து படத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். தனது காதலை கண்டும் காணாமல் இருக்கும் அன்புவிடம் தனது மனக்குமுறலை கண்ணீராக வெளிக்கொணரும் இடத்தில் “டச்” தான்.

காமெடிக்கு, அர்ஜூனன், சார்லி, வையாபுரி என பலரும் படத்தில் இருக்கின்றனர். ஒரு சில காட்சிகள் என்றாலும் சார்லியின் காமெடி நன்றாகவே வொர்க்-அவுட் ஆகியுள்ளது.

அன்புவின் நண்பனாக அர்ஜூனன் நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார். கிடைக்கும் இடங்களிலெல்லாம் தனது நடிப்பின் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

வித்தியாசமான கதையை வித்தியாசமான முறையில் எடுத்து தனது இயக்கத்திறனை வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் எஸ் ராஜசேகர். எழுத்திலும் இயக்கத்திலும் அவரின் அசாத்திய திறமை நன்றாகவே தெரிகிறது.

வி சுப்பையனின் கதையும் வசனமும் படத்திற்கு பெரும் பலம்.

சின்ன சின்ன குறைகள் இருந்தாலும், திரைக்கதை செல்லும் வேகம் அனைத்தையும் மறக்கடித்துவிடுகிறது.

ஆபாச காட்சிகளோ, ரத்தம் தெறிக்கும் சண்டைக் காட்சிகளோ என எதுவும் இன்றி ஒரு அழகான குடும்ப பாங்கான படைப்பாக இப்படம் உருவாகியிருக்கிறது. குடும்பத்தோடு கண்டுகளிக்கும்படியாக இப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் ராஜசேகர்.

என் எஸ் கே அவர்களின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டும் படத்திற்கு ஒரு தூணாக வந்து நிற்கிறது. ஒரு சில இடங்களில் ஒளிப்பதிவு இன்னும் சற்று கூர்ந்து கவனித்திருந்திருக்கலாம்.

மொத்தத்தில்,

எமன் கட்டளை – அன்பு கட்டளை..

ஒளிப்பதிவு – கார்த்திக் ராஜா

தயாரிப்பு: டாக்டர் எஸ் ஏ கார்த்திகேயன்

கதை , வசனம் – வி சுப்பையன்

பாடல்கள் – சிநேகன்

Facebook Comments

Related Articles

Back to top button