
இயக்கம்: ஜெயலட்சுமி
தயாரிப்பு: ”ஸ்கை வாண்டர்ஸ்” எண்டர்டைன்மெண்ட் நிறுவனம்
நடிகர்கள்: லிங்கேஷ், திவ்யா தாமஸ், லியா, காட்பாடி ராஜன், மாறன், கஞ்சா கருப்பு, மதுசூதனன், தர்ஷன்
தயாரிப்பு: ஜெயலட்சுமி
இசை: சாண்டி சாண்டல்லோ
ஒளிப்பதிவு:டோனி சான், வெங்கடேஷ்
பாடல்வரிகள் – கபிலன், சந்துரு, ஜெயலட்சுமி
எடிட்டர் – கோபி கிருஷ்ணா – ரஞ்சித்
கதைப்படி,
மீனவனான நாயகன் லிங்கேஷ், மீன்பிடி தொழிலையே தனது உயிராக நினைத்து வாழ்ந்து வருகிறார். தாய்-தந்தையரை இழந்த லிங்கேஷ், மாமன் மதுசூதனின் வளர்ப்பில் வளர்கிறார்.
மதுசூதனின் மகளாக வரும் திவ்யா, தனக்கு உலகமே தனது மாமா தான் என்று லிங்கேஷ் மீது அளவு கடந்த அன்பையும் காதலையும் வைத்திருக்கிறார்.
கலாச்சாரத்தைப் பற்றி அறிந்து கொள்ள தமிழகத்திற்கு வெளிநாட்டிலிருந்து வருகை தந்த ஒரு டீமிற்கு ஊரை சுற்றி காண்பித்து தமிழர்களின் அருமை பெருமைகளை கூறி வருகிறார் லிங்கேஷ்.
அந்த டீமிலிருப்பவர் தான் லியா. லியாவும் லிங்கேஷும் நெருங்கி பழகுகிறார்கள். இருவருக்கும் காதல் மலர்ந்து விடுகிறது.
விரைவில் திருமணம் முடிந்து தனது மாமா லிங்கேஷுடன் மகிழ்ச்சியாக வாழலாம் என்ற கனவில் இருந்த திவ்யாவிற்கு பேரியாக விழுந்தது லியா – லிங்கேஷின் காதல்.
அடுத்த நடக்கும் எதிர்பாராத திருப்பங்களே படத்தின் மீதிக் கதை.
நாயகன் லிங்கேஷ், தீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மீனவ கதாபாத்திரத்தில் மிகவும் யதார்த்தமான நடிப்பைக் கொடுத்து அசத்தியிருக்கிறார் லிங்கேஷ். இதற்கு முன் பல படங்களில் பெயர் சொல்லும் அளவிற்கான கேரக்டர் ரோல்களில் நடித்து வந்த நடிகர் லிங்கேஷுக்கு இப்படம் ஒரு அனுபவம் தான். தனக்குக் கொடுக்கப்பட்டதை அளவோடு நடித்திருக்கிறார்.
அதேபோல், நாயகி திவ்யாவும் மிகவும் யதார்த்தமாக நடித்து தனது கேரக்டரை கச்சிதமாக கொடுத்திருக்கிறார். தனது காதலை லிங்கேஷிடம் சொல்லும் இடத்தில் நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிரார் திவ்யா.
காதலுக்காக ஏங்கும் கதாபாத்திரத்தில் நடிகை லியா பொருந்தினாலும், க்ளோஷ் அப் காட்சிகளில் பெரிதான ஒரு நடிப்பை அவரிடம் பார்க்க முடியவில்லை.
அனுபவ நடிப்பால் தனக்கான காட்சிகளை கட்சிதமாக நடித்து கொடுத்திருக்கிறார் மதுசூதனன்.
கஞ்சா கருப்பு மற்றும் மாறன் இவர்களது காமெடி பெரிதாகவே வொர்க் அவுட் ஆகியுள்ளது. இவர்களது காமெடி படத்தில் பெரிய ஆறுதல் என்று தான் கூற வேண்டும்.
படத்தினை காட்சிப்படுத்திய விதத்திற்காகவே இயக்குனரை பெரிதாக பாராட்ட வேண்டும். ஒரு புதுமுக இயக்குனர் என்பது போல் அல்லாமல், அனுபவ இயக்குனரின் திறமை போல் படத்தினை இயக்கியிருக்கிறார். முதல் பாதி பாராட்டும்படியாக இருந்தாலும், இரண்டாம் பாதியில் நன்றாகவே காட்சியமைப்பை சற்று கவனித்து படமாக்கியிருக்கலாம்.
ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை படத்திற்கு பெரும் பலமாக இருந்தது.
மொத்தத்தில்,
என் காதலே – காதலின் வலி.





