
கர்நாடக அரசின் விருது பெற்ற இயக்குநர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படம் வரும் ஜூன் 25ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 2M சினிமாஸ் மற்றும் D பிக்சர்ஸ் நிறுவனங்களின் சார்பில் கே.வி. சபரீஷ் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் வெற்றி, ரங்கராஜ் பாண்டே, பிரிகிடா சாகா, மாறன், சரவணன், லிஸ்ஸி ஆண்டனி, லோகன் கண்ணன், நிர்மதா, அருவி மதன், கன்யா பாரதி, கவிதா பாரதி மற்றும் சுப்பிரமணியம் சிவா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் வெளியீட்டை முன்னிட்டு சென்னை நகரில் பிரம்மாண்டமான பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டு திரைப்படம் குறித்த பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டனர். மேலும், படத்தின் பிரத்யேக காட்சிச் சுருக்கமும், கதாபாத்திர அறிமுக வீடியோவும் ஊடகங்களுக்கு திரையிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது.
கவிதா பாரதி பேசுகையில், “தயாள் பத்மநாபன் கர்நாடகாவில் மிகுந்த மதிப்பைப் பெற்ற இயக்குநர். இந்த படத்தின் திரைக்கதை மற்றும் வசனப் பணிகளில் இணைந்தது எனக்கு பெருமை. ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ அனைவருக்கும் ஒரு தனித்துவமான அனுபவமாக இருக்கும்” என்றார்.
ஒளிப்பதிவாளர் எம்.வி. பன்னீர்செல்வம், “தயாள் பத்மநாபனின் திட்டமிடல் அபாரமானது. ஒரு இயக்குநர் தனது ஒளிப்பதிவாளருடன் திரைக்கதை நிலையிலேயே விவாதிப்பது அரிது. இந்த படம் பார்வையாளர்களுக்கு ஒரு காட்சிவிருந்து ஆக இருக்கும்” என தெரிவித்தார்.
இசையமைப்பாளர் தர்புகா சிவா, “இந்த படத்தில் பணியாற்றியது எனக்கு பெரும் திருப்தியை அளித்துள்ளது. வணிக நோக்கங்களுக்காக அல்லாமல், கதைக்குத் தேவையானதை மட்டுமே செய்ய வேண்டும் என்ற இயக்குநரின் அணுகுமுறை என்னை மிகவும் கவர்ந்தது” என்றார்.
நடிகர் வெற்றி, “தயாள் சார் அளவுக்கு திட்டமிட்டு பணிபுரியும் இயக்குநரை நான் பார்த்ததில்லை. இந்த படம் மிகச் சிறப்பாக உருவாகியுள்ளது” என பாராட்டினார்.
நடிகர் சரவணன், “இது தயாள் சார் இயக்கும் மூன்றாவது தமிழ் படம் என்றாலும், கன்னடத்தில் ஏற்கனவே 18 படங்களை இயக்கியுள்ளார். தமிழ் சினிமாவிலும் அவர் மேலும் பல சாதனைகள் படைக்க வேண்டும்” என்றார்.
நடிகை பிரிகிடா சாகா, “இந்த படம் எனது மனதிற்கு மிகவும் நெருக்கமானது. இயக்குநர் ஒரு சிறந்த மனிதர். அவர் படப்பிடிப்பு தளத்தில் அனைவரையும் குடும்ப உறுப்பினர்களைப் போல கவனித்துக் கொண்டார்” என்று நெகிழ்ச்சியுடன் பேசினார்.
அருவி மதன், “சிறிய பட்ஜெட் படங்களுக்கு வலுவான உள்ளடக்கம் இருந்தால் அது வெற்றி பெறும். இந்த படம் அதற்கு ஒரு நல்ல உதாரணமாக இருக்கும்” என்றார்.
லிஸ்ஸி ஆண்டனி, “தயாள் பத்மநாபன் படத்தில் நடித்தால், நம் உழைப்பு திரையில் சிறப்பாக வெளிப்படும் என்ற நம்பிக்கை கிடைக்கும். இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும்” என்றார்.
சுப்பிரமணியம் சிவா, “தயாளின் தெளிவும் திட்டமிடலும் அபாரமானது. கமர்ஷியல் மற்றும் கலைப்படங்களுக்கு இடையேயான இடைவெளியை இந்த படம் நிரப்பும்” என கூறினார்.
நடிகர் ஆரவ், “ஒரு கொலைக்குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டுமா என்ற முக்கியமான கேள்வியை இந்த படம் முன்வைக்கிறது. அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் இது ஒரு சிறப்பான அனுபவமாக இருக்கும்” என்றார்.
இறுதியாக பேசிய இயக்குநர் தயாள் பத்மநாபன், “இது எனது 22வது திரைப்படம் மற்றும் மூன்றாவது தமிழ் படம். 1972ஆம் ஆண்டு பின்னணியில், தூக்குத் தண்டனை கைதியின் வாழ்க்கையில் ஒரு இரவில் நடக்கும் சம்பவங்களை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது. உண்மை சம்பவங்களின் அடிப்படையில் அமைந்த இந்த கதையில் பல சுவாரஸ்ய அம்சங்கள் உள்ளன. படத்தின் சில முக்கிய விஷயங்களை தற்போது மறைத்து வைத்துள்ளோம்; அவை வெளியீட்டிற்கு பிறகு பேசப்படும்” என்றார்.
மேலும், நடிகர் சரவணன் தனது சம்பளத்தை குறைத்ததோடு கிளைமாக்ஸ் காட்சிக்காக கூடுதல் நாளை ஒதுக்கியதாகவும், ரங்கராஜ் பாண்டே படப்பிடிப்பு திட்டமிட்டதை விட இரண்டு நாட்கள் முன்னதாக முடிந்ததால் தனது சம்பளத்தில் இருந்து ரூ.2 லட்சத்தை திருப்பி வழங்கியதாகவும் இயக்குநர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
நிகழ்ச்சியின் இறுதியில் படக்குழுவினர் ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர். திரைப்படத்தின் பிரத்யேக காட்சிகள் மற்றும் கதாபாத்திர அறிமுகம் ஊடகத்தினரிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.





