
நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா த்ரில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியில் தமிழக வீரர் விஜய் சங்கருக்கு மிகப்பெரும் பங்கு உள்ளது.
கடைசி ஓவரில் 11 ரன்கள் அடித்தால் வெற்றி பெரும் நிலையில் இருந்த ஆஸ்திரேலிய அணியின் கனவை விஜய் சங்கர் தனது பந்து வீச்சால் தகர்த்தெரிந்தார்.
அந்த கடைசி நேர அழுத்தத்தை கூறிய விஜய் சங்கர்,‘43-44 -வது ஓவருக்குப் பிறகு எந்த நேரமும் நான் பந்து வீச அழைக்கப்படுவேன் என மனதளவில் என்னை தயார்படுத்துக் கொண்டேன். 48 -வது ஓவருக்குப் பிறகு பும்ரா என்னிடம் வந்து பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆகிறது என கூறினார்.
அதனால் சரியான லெந்த்தில் ஸ்டம்புகளை நோக்கி பந்தை வீச வேண்டும் என பும்ரா ஆலோசனை கூறினார். அவர் கூறியதும் மனதளவில் ஒரு தெளிவு கிடைத்தது. கடைசி ஓவரில் ஆஸ்திரேலிய அணியின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியது மகிழ்ச்சியளிக்கிறது. தோனியின் சில டிப்ஸ் எனக்கு பலமாக இருந்தது.’ என விஜய் சங்கர் கூறியுள்ளார்.




