
ஐதராபாத்: இன்று நடைபெற்ற போட்டியில் பெங்களூர் அணியும் ஐதராபாத் அணிகளும் மோதிக் கொண்டன. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக கேப்டன் வில்லியம்சன் 56 ரன்களும், சாகிப் அல் ஹசன் 35 ரன்களும் விளாசினர். மற்ற வீரர்கள் பெங்களூரு அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து அளித்தனர். பெங்களூரு அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய சவுதி, சிராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு துவக்கமே சோகமாக அமைந்தது. வோஹ்ரா 8 ரன்களிலும், பார்தீவ் பட்டேல் 20 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளிக்க பின்னர் வந்த கேப்டன் கோஹ்லி அதிரடியாக விளையாடினார்.
39 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கோஹ்லி ஆட்டமிழக்க, பின்னர் வந்த டி வில்லியர்ஸும், மொயின் அலியும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் பெங்களூரு அணி 84 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் 6-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மன்தீப் சிங்-டி கிராண்ட்ஹோம் நிதானமாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். இருப்பினும் பெங்களூரு அணியால் 20 ஓவர்களில் 141ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.