Spotlightசினிமாவிமர்சனங்கள்

ஜோ விமர்சனம் 3.5/5

அறிமுக இயக்குனர் ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ, மாளவிகா மனோஜ், பாவ்யா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் இந்த “ஜோ”.

முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள ஜோ பளிச்சிட்டதா இல்லையா என்பதை விமர்சனம் மூலம் பார்த்து விடலாம்.

ஜோ’வாக படத்தில் வருபவர் ஹீரோ ரியோ. பள்ளி பருவத்தில் ஆரம்பமாகிறது படத்தின் கதை. நண்பர்களுடன் ஜாலியாக இருந்து தனது பள்ளி பருவத்தை முடித்து கல்லூரிக்குள் நுழைகிறார்.

அதே நண்பர்களுடன் ஆட்டம், கொண்டாட்டமாக இருக்க நாயகி மாளவிகாவை காண்கிறார். கண்டதும் காதல் வயப்படுகிறார். தொடர்ந்து மாளவிகாவின் பின்னால் சுற்றி சுற்றி, ஒரு தலை காதலை இருதலை காதலாக மாற்றுகிறார் ரியோ.

கல்லூரி வாழ்க்கை முடிந்து நாயகி மாளவிகா அவரது மாநிலமான கேரளாவிற்கு சென்று விடுகிறார். இதனால், மொபைல் காதலாக மாற இருவருக்குள்ளும் அவ்வப்போது சண்டை வருகிறது.

வீட்டில் சென்று பேச போன இடத்தில் சிறு கைகலப்பு ஏற்பட, ரியோவை வெறுத்து விடுகிறார் மாளவிகா.

இந்த காட்சிகள் அனைத்தும் ப்ளாஷ் பேக் காட்சிகளாக வர, நிகழ்காலத்தில் மற்றொரு நாயகியான பாவ்யாவை திருமணம் செய்கிறார் ரியோ.

மாளவிகாவுடனான காதல் என்னவானது.? திருமணம் வேண்டாம் என்றிருந்த பாவ்யாவின் கழுத்தில் ஏன் ரியோ தாலியை கட்டினார்.? என்ற கேள்விக்கெல்லாம் இரண்டாம் பாதியில் விடை இருக்கிறது.

கதையின் நாயகனாக நடிக்காமல் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் நடிகர் ரியோ.. படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலே மனதிற்குள் பச்’சென்று பதிந்து விடுகிறது ஜோ’வின் கதாபாத்திரம்.

பள்ளி, கல்லூரி, திருமண வாழ்க்கை என மூன்று வெவ்வேறு காலகட்டத்திற்கு ஏற்றவாறு தனது வாழ்வியலை வேறுபடுத்தி காண்பித்திருக்கிறார் நாயகன் ரியோ. இதுதான் முதல் படம் போல், தனது கதாபாத்திரத்தோடு ஒன்றி, நடிக்காமல் நடித்து காட்டியிருக்கிறார்.

அழகு தேவதைகளாக காட்சிக்கு காட்சி வந்து நம்மை ஈர்த்திருக்கின்றனர் மாளவிகாவும் பாவ்யாவும்.

முதல் பாதியில் மாளவிகாவும் இரண்டாம் பாதியில் பாவ்யாவும் காட்சிகளில் நம்மை வெகுவாகவே கவர்ந்திருக்கின்றனர். அதிலும், மாளவிகாவின் ஒரு பங்கு மேல் தான்.

மற்ற நடிகர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டதை சிறப்பாக செய்திருந்தனர்.

படத்தின் மிகப்பெரும் தூண்களாக வந்து நின்றவர்கள் ஒளிப்பதிவாளரும் இசையமைப்பாளரும் தான்.

முதல் காட்சியிலேயே நம்மை படத்திற்குள் இழுத்துச் சென்றுவிட்டார் ஒளிப்பதிவாளர் ராகுல் கே ஜி விக்னேஷ். ஒவ்வொரு காட்சியையும் ரசிக்கும்படியாக ரசனையாக கொடுத்து நம்மை பெரிதாகவே ஈர்த்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

ரசிப்பவனுக்கே ஒரு காட்சியின் ரசனை தெரியும் என்பார்கள். அப்படியாக காட்சிக்கு காட்சி தனது ரசனையை செதுக்கி கொடுத்திருக்கிறார் ராகுல் கே ஜி விக்னேஷ். இன்னும் ஓரிரு வருடத்தில் சினிமாவின் உச்ச ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக இவர் நிற்பார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

பாடல்கள் ஓகே ரகமாக கடந்து சென்றாலும், பின்னணி இசையில் சித்துகுமார் மிகப்பெரும் பலமாக வந்து நிற்கிறார்.

கதைக்கு உடல் அமைத்து, திரைக்கதைக்கு உயிர் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஹரிஹரன் ராம். படத்தில் வரும் ஒரு காட்சியாவது படம் பார்ப்பவர்களின் வாழ்வோடு நிச்சயமாக ஒன்றிருக்கும்.

அந்த வாழ்வியலை மிக அழகாக கொண்டு வந்து நம் கண்களில் ஈரத்தினை எட்டிப் பார்க்க வைத்திருக்கிறார் இயக்குனர்.

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியா இயக்குனராக ஹரிஹரன் ராம் உயர்ந்து நிற்பார். அதற்கு ஜோ’வே அடித்தளம்..

ஜோ – ஜொலிப்பு…

Facebook Comments

Related Articles

Back to top button