Spotlightவிமர்சனங்கள்

கள்ளன் – விமர்சனம் 3/5

கரு.பழனியப்பன் ஹீரோவாக நடிக்க அறிமுக இயக்குனர் சந்திரா தங்கராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் “கள்ளன்”. படத்தின் ட்ரெய்லர் மக்களை வெகுவாக கவர்ந்த நிலையில், திரைப்படம் எந்த அளவிற்கு ஈர்த்தது என்பதை விமர்சனம் மூலம் காணலாம்.

கதைப்படி,

கதைக்களம் 1985களில் நடக்கும்படியாக அமைக்கப்பட்டுள்ளது. நாயகன் கரு பழனியப்பன் மற்றும் அவரது இரண்டு கூட்டாளிகள் காட்டில் வேட்டையாடும் தொழில் செய்து வருகின்றனர். வேட்டை செல்வதை வனத்துறை போலீஸார் கண்டித்ததால், திருட்டுத்தொழில், கள்ளத்துப்பாகி செய்து கொடுத்தல் என பல குற்றங்களில் ஈடுபடுகின்றனர் மூவரும்.

ஒருகட்டத்தில், போலீஸாரால் மூவரும் கைது செய்யப்படுகின்றனர். இதில், முதல் குற்றவாளியான கரு பழனியப்பனுக்கு தூக்குத் தண்டனையும் விதிக்கப்படுகிறது. இதற்கிடையில், கரு பழனியப்பன் எதேச்சையாக நாயகி நிகிதாவை சந்திக்க இருவருக்குள்ளும் காதல் மலர்கிறது.

நிகிதாவிற்காக தான் வாழ வேண்டும் என்று சிறையில் இருந்து தப்பிக்க ப்ளான் போடுகிறார் கரு பழனியப்பன். சிறையில் கிடைத்த புதுக்கூட்டாளி நமோ நாராயணனோடு அங்கிருந்து தப்பித்துச் செல்கிறார்கள் கரு பழனியப்பனும் அவரது கூட்டாளிகளும்.

கரு பழனியப்பன் அவரது கூட்டாளிகள் இருவர், நமோ நாராயணன் இவரது தம்பி செளந்தரராஜா மற்றும் இவர்களது கூட்டாளிகள் இருவர் என 7 பேர் சேர்ந்து மீண்டும் கொள்ளையடிக்கும் வேலையில் இறங்குகிறார்கள்.

அதன்பிறகு என்ன ஆனார்கள்.? இவர்களது வாழ்க்கை என்னவானது.? என்பதே படத்தின் மீதிக் கதை.

நாயகன் கரு பழனியப்பன் வேட்டைக்காரனாக மிகவும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஆங்காங்கே தனது உடல் மொழியையும் சற்று நடிக்க வைத்திருந்தால் நடிப்பில் இன்னும் சற்று ஈர்த்திருந்திருப்பார். நாயகி நிகிதா, தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை செய்து முடித்திருக்கிறார். பெரிதான ஸ்கோப் கதையில் அவர்க்கு இல்லை.

நமோ நாராயணன் மற்றும் செளந்தர்ராஜா இருவருக்கும் இப்படத்தில் பெரிதான கதாபாத்திரம் தான். இருவரும் தனது நடிப்பை மிரட்டலாக கொடுத்திருக்கிறார்கள். அதிலும், சண்டைக் காட்சியில் செளந்தர்ராஜா அசரடித்திருக்கிறார்.

கூட்டாளிகளாக தோன்றிய அனைவரும் கதைக்கேற்ற கதாபாத்திரங்களாக மாறி கதைக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள்.

படத்தில் பெரிதும் கவர்ந்தவர் மற்றொரு நாயகி மாயா தான். யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் கதையில் இவரால் ஏற்படும் திருப்பம் கதையை விறுவிறுப்பாக்கி விடுகிறது. தனது மிரள வைக்கும் கண்களால் அனைவரயும் மிரட்டுகிறார். தமிழ் சினிமாவில் நிச்சயம் ஒரு ரவுண்ட் வருவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

வேலா ராமமூர்த்தியோடு ஆரம்பிக்கும் கதை நகர்வு அழகான கிராமத்து வேட்டை வாழ்வியலை கண்முன்னே நிறுத்தியதற்காகவே இயக்குனர் சந்திரா தங்கராஜ் அவர்களை பெரிதாக பாராட்டலாம். முதல் பாதியில் எந்த ஒரு குறையும் இல்லாமல் அழகாக நகர்கிறது.

இரண்டாம் பாதியில் சில காட்சிகள், அடுத்து இதுதான் நடக்கும் என்று நம்மை யூகிக்க வைத்தது கதைக்கு சின்ன சறுக்கலாக அமைந்துள்ளது. மற்றடி, கதையின் ஓட்டத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தவில்லை.

பன்றி வேட்டையாடும் காட்சி, ஜெயிலில் இருந்து தப்பிச் செல்லும் காட்சி என பல இடங்களில் ஒளிப்பதிவு கவனம் ஈர்க்கிறது. ஒளிப்பதிவாளர்கள் எம் எஸ் பிரபு மற்றும் கோபி ஜெகதீஸ்வரன் இருவருக்கும் வாழ்த்துகள்.

கே இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். அதிலும், ’எத்தனை இரவு காத்திருந்தேன்
எத்தனை நிலவை பார்த்திருந்தேன்’ என்ற பாடல் ரசிக்க வைக்கிறது. படத்தின் இரண்டாம் பாதியில் பின்னனி இசையில் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருந்திருக்கலாம்.

படத்தொகுப்பை ரசனைக்கு ஏற்றவாறு கொடுத்திருக்கிறார் எஸ் பி அகமது.

மற்றபடி, கதைக்களம், வாழ்வியல், எடுக்கப்பட்ட விதம், என பலவற்றில் இயக்குனரின் கடுமையான உழைப்பிற்கு வெற்றி கிட்டியுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button