அறிமுக இயக்குனர் பிரபு ராம் வியாஸ் இயக்கத்தில் மணிகண்டன், ஸ்ரீ கெளரி ப்ரியா, கண்ணா ரவி, சரவணன், கீதா கைலாசம், ஹரீஷ் குமார் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளியாகியிருக்கும் திரைப்படம் தான் லவ்வர்.
இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ஷான் ரோல்டன். ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா.
மில்லியன் டாலர் மற்றும் ஆர் பி எண்டர்டெயின்மெண்ட் இப்படத்தை தயாரித்திருக்கிறார்கள்.
6 வருடங்களாக காதலர்களாக இருக்கிறார்கள் மணிகண்டனும் ஸ்ரீ கெளரி ப்ரியாவும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார் ஸ்ரீ கெளரி. ஆரம்பித்த தொழில் தோல்வியை சந்திக்க, அடுத்த தொழில் செய்வதற்காக காத்திருக்கிறார் மணிகண்டன்.
சின்ன சின்ன வெறுப்புகளை தன் காதலி மீது காண்பித்து கோபமடைகிறார் மணிகண்டன். சரக்கு அடித்துக் கொண்டு காதலி மீது கோபத்தைக் கொட்டித் தள்ள, மன்னிப்பு கேட்டு மீண்டும் சரணடைகிறார் மணிகண்டன்…
தொடர்ந்து கோபமடைவதும் பின் மன்னிப்பு கேட்பதுமாக தொடர்கிறது இந்த காதல் கதை.. ஒரு கட்டத்தில் தன் காதலை வெறுக்கிறார் நாயகி. காதலை உதறுகிறார்.
இதனால் பித்து பிடித்தவர் போல் ஆகிவிடுகிறார் மணிகண்டன். மீண்டும் மணிகண்டனின் காதலை நாயகி ஏற்றுக் கொண்டாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.
நாயகன் மணிகண்டன் தனக்கு என்ன கொடுக்கப்பட்டதோ அதை தெளிவாகவும், உணர்ச்சிகரமாகவும் நடித்து தனது கதாபாத்திரத்தை நிவர்த்தி செய்திருக்கிறார். என்னப்பா இப்படி நடிக்கிற என கேட்கும் அளவிற்கு எமோஷன்ஸ், காதல், கோபம் என நாலாபுறமும் இறங்கி அடித்திருக்கிறார் மணிகண்டன்.
நாயகி ஸ்ரீ கெளரி ப்ரியா காட்சிகளுக்கு அழகாகவும் நடிப்பில் தனது திறமையையும் நிரூபித்திருக்கிறார். எமோஷன்ஸ் காட்சிகளில் நம்மையும் கண்கலங்க வைத்துவிட்டார் ஸ்ரீ கெளரி.
அம்மாவாக நடித்திருக்கும் கீதா கைலாசம் வழக்கம்போல் அந்த கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார்.
படத்தின் கதையில் ஒரு சில சறுக்கல்கள் எட்டிப் பார்த்து தான் செல்கிறது. 24 மணி நேரமும் புகை மண்டலமாகவே இருக்கிறார் நாயகன். அதுமட்டுமல்லாமல், இரவானால் மது இல்லாமல் இல்லை. காதலர்களுக்கு இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார் இயக்குனர் என்று தெரியவில்லை. மது, புகை மட்டுமே காதலுக்கான நிவாரணி என்று கூறியதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளும் கருத்தாக இல்லை.
ஒரு சிலருக்கு இப்படம் கனெக்ட் ஆகலாம். ஆனால், அனைவருக்குமானதா என்று கேட்டால் அது இல்லை என்று தான் கூற வேண்டும். ஒரு சில இடங்களில் காட்சிக்கான போக்கு சற்று தடுமாறியிருப்பதை காண முடிந்தது.
ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் ரகம் தான். பின்னணி இசை கதையோடு நகர்ந்து செல்கிறது. உணர்வுகளை எளிதாக உணர வைத்ததில் முக்கிய பங்கு பின்னணி இசை. ஒளிப்பதிவு கலர்ஃபுல்.
லவ்வர் – காதல் & மோதல் & உணர்வு