Spotlightசினிமாவிமர்சனங்கள்

லால் சலாம் விமர்சனம் 3.25/5

3, வை ராஜா வை படங்களுக்குப் பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் லால் சலாம்.

இப்படத்தில், விஷ்ணு விஷால், விக்ராந்த், தம்பி ராமையா, செந்தில் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் இப்படத்தில் நடித்திருக்கிறார்.

விஷ்ணு ரங்கசாமி படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார்.

1990 களில் நடக்கும் கதையாக இருக்கிறது. இருவேறு கிரிக்கெட் அணியில் இருக்கின்றனர் விஷ்ணு விஷாலும் விக்ராந்தும். இது ஊருக்குள் நடக்கும் கிரிக்கெட் போட்டி.

போட்டி நடக்கும் போது மோதல் ஏற்படுகிறது. அப்போது, விஷ்ணு விஷால் விக்ராந்தை பலமாக தாக்கி விடுகிறார்.

இதனால், ஊருக்குள் மத கலவரம் ஏற்பட்டு விடுகிறது. மும்பையில் பிரபல தொழிலதிபராக வரும் ரஜினிகாந்தின் மகனாக வருகிறார் விக்ராந்த்.

விக்ராந்த் தாக்கப்பட்டதும், ரஜினிகாந்த் துடித்து போகிறார். தனது நெருங்கிய நண்பனின் மகனான விஷ்ணு விஷாலை ரஜினிகாந்த் என்ன செய்தார்.? கிராம மக்களின் பல வருட கனவு தேர் திருவிழா என்ன ஆனது.?? என்பதே படத்தின் மீதிக் கதை.

எப்போதும் திரையை தனதாக்கிக் கொள்ளும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இப்படத்திலும் அதையே செய்திருக்கிறார். கோபம், பாசம், குறும்பு, எமோஷன்ஸ் என படத்தில் இவர் வரும் காட்சிகள் அனைத்தும் தீப்பொறியாக இருக்கிறது திரையரங்கில். ரஜினிகாந்த் எண்ட்ரீ ஆகும் காட்சியில் திரையரங்கமே அதிர்கிறது.

விஷ்ணு விஷால் மீது தான் படம் பயணப்படுகிறது. கதையின் நாயகனாக ஜொலித்திருக்கிறார். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை தெளிவாக செய்து முடித்திருக்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு விக்ராந்த் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ஜொலித்திருக்கிறார்.

செந்தில் மற்றும் தம்பி ராமையா இருவருக்கும் வலுவான கதாபாத்திரம் தான். கடவுளை பற்றிய புரிதலை தரமான வசனங்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர்.

ரஜினிகாந்த் பேசும் வசனங்களும் கைதட்ட வைத்துள்ளன. இயக்கத்தில் ஆங்காங்கே சின்ன சின்ன குறைகள் எட்டிப் பார்த்திருக்கிறது. எடிட்டிங்கிலும் சற்று கவனம் செலுத்தியிருந்திருக்கலாம். மதத்தால் பிரிந்து கிடப்பவர்களை அன்பால் ஒன்றிணைக்கலாம் என்பதை வலியுறுத்தியுள்ளது.

ஏ ஆர் ரகுமானின் இசையில் பின்னணி இசை தரமாக கொடுத்திருக்கிறார். பாடல்கள் ஓகே ரகம் தான். விஷ்ணுவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.

ஆங்காங்கே கதை ஜம்ப் ஆவது கொஞ்சம் நெருடலாக இருக்கிறது. மற்றபடி சொல்லவந்த கருத்தை தெளிவாக கூறிவிட்டுச் செல்வதால் லால்சலாம் மனதால் வென்றிருக்கிறது.

லால் சலாம் – அன்பு தானே எல்லாம்…

Facebook Comments

Related Articles

Back to top button