நாகராஜ் கருப்பையா அவர்களின் இயக்கத்தில் வேல ராமமூர்த்தி, மாரிமுத்து , தீபா சங்கர், சுரேஷ் நந்தா, நந்தனா, ரமா, செந்தி குமாரி, ஜெரால்டு மில்டன் இவர்களின் நடிப்பில் உருவாகி இன்று திரைகண்டிருக்கும் திரைப்படம் தான் வீராயி மக்கள்.
படத்திற்கு இசையமைத்திருக்கிறார் தீபன் சக்ரவர்த்தி. ஒளிப்பதிவு செய்திருக்கிறார் சீனிவாசன்.
ஒயிட் ஸ்கிரீன் பிலிம்ஸ் சார்பில் சுரேஷ் நந்தா இப்படத்தை தயாரித்திருக்கிறார்.
முழுக்க முழுக்க கிராம பின்னணியில் இப்படம் உருவாகியிருக்கிறது.
கதைக்குள் பயணிக்கலாம்…
அறந்தாங்கி பகுதியில் வீராயி என்பவர் தனது நான்கு பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார். மிகவும் கஷ்டப்பட்டு பிள்ளைகளை வளர்த்து வருகிறார்.
மூத்த மகனான வேல ராமமூர்த்தி ரமாவை திருமணம் செய்து கொள்ள, இரண்டாவது மகனான மாரிமுத்து செந்தி குமாரியை திருமணம் செய்து கொள்கிறார்.
மூன்றாவது மகளான தீபா, பக்கத்து கிராமத்தில் ஒருவரை மணமுடிக்க, நான்காவது மகன் படித்து வெளிநாட்டில் செட்டிலாகி விடுகிறார். அங்கு ஒரு பெண்ணையும் மணமுடித்துக் கொள்கிறார்.
இந்நிலையில், பஞ்சம் தலைவிரித்தாட பணக்கஷ்டத்தால் தனது குடும்பத்துடன் திருப்பூர் சென்று விடுகிறார் வேல ராமமூர்த்தி. இரண்டாவது மருகமகளுடன் வீராயிக்கு சண்டை வர, வீராயி வீட்டை விட்டு வெளியேறி தனியே வாழ்ந்து வருகிறார்.
தனியாக இருந்த தாயை அழைத்து தன்னோடு வைத்து பார்த்து வருகிறார் வேல ராமமூர்த்தி. குடும்பம் பிரிந்ததால், சொத்தை பிரித்து விடுகிறார்கள்.
இதனால மனமுடைந்த வீராயி இறந்து விடுகிறார். அதன்பிறகு வேல ராமமூர்த்தியின் மகனாக வரும் சுரேஷ் நந்தா தனது அத்தை மகளாக வருபவரை காதலிக்கிறார்.
இந்த காதலால், பிரிந்த குடும்பத்தை ஒன்றாக்கி விடலாம் என்றும் நினைக்கிறார் சுரேஷ் நந்தா. இவரின் கனவானது நனவானது இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.
வழக்கம்போல் மிடுக்கான கதாபாத்திரத்தில் ஜொலித்திருக்கிறார் வேலா ராமமூர்த்தி. பாசம் காட்டுவதாக இருக்கும் இடத்தில் நன்றாகவே ஜொலித்திருக்கிறார் வேலா ராமமூர்த்தி.
அண்ணன் மீது மிகுந்த பாசம் வைக்கும் கதாபாத்திரமாக நடித்திருக்கிறார் நடிகர் மாரிமுத்து. அவ்வப்போது கண்கலங்க வைக்கும் காட்சிகளில் நடித்து நம்மை வெகுவாகவே கவர்ந்திருக்கிறார்.
ஏனைய கதாபாத்திரங்கள் அனைவரும் தங்களுக்கான கேரக்டரை நிவர்த்தி செய்து நடித்திருக்கிறார்கள். தீபாவின் ஓவர் ஆக்டிங் சற்று நெருடல் தான்.
படத்தின் மிகப்பெரும் பலம் என்றால் அது இசை மட்டும் தான். கதையோடு சேர்ந்து நாமும் பயணிக்க பின்னணி இசை பெரும் துணையாக நின்றது.
ஒளிப்பதிவு காட்சிகளை அழகூற காட்டியிருக்கிறது.
மண்வாசம் கொண்டு பாரதிராஜா படங்களைப் போன்ற ஒரு அழகான குடும்ப வாழ்வியலை நீண்ட நாட்கள் கழித்து பார்த்த ஒரு மன திருப்தியை இப்படம் கொடுக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
வீராயி மக்கள் – பாசம்