Spotlightவிமர்சனங்கள்

நீல நிறச் சூரியன் – விமர்சனம் 4/5

தமிழ் சினிமாவின் முதல் திருநங்கை இயக்குனரான சம்யுக்தா விஜயன் அவர்களின் இயக்கத்திலும் நடிப்பிலும் உருவாகியிருக்கும் படம் தான் நீல நிறச் சூரியன்.

திருநங்கைகளின் வாழ்வியலை மிகவும் உயிரோட்டமான ஒரு திரைக்கதைக் கொண்டு உருவாகியிருக்கும் ஒரு அழகிய படைப்பு தான் இந்த நீல நிறச் சூரியன்.

இப்படத்தில் சம்யுக்தா விஜயன், கிட்டி, கஜராஜ், கீதா கைலாசம், பிரசன்னா பாலசந்திரன், கே வி என் மணிமேகலை, மசந்த் நட்ராஜன், ஹரிதா, வின்னர் ராமசந்திரன், மோனா பெத்ரா உள்ளிட்ட நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர்.

படத்திற்கு ஒளிப்பதிவு & எடிட்டர் & இசை இவை மூன்றையும் ஸ்டீவ் பெஞ்சமின் கையாண்டிருக்கிறார்.

கதைக்குள் பயணிக்கலாம்…

கஜராஜ் – கீதா கைலாசம் தம்பதிகளின் மகனாக வருகிறார் அரவிந்த் (சம்யுக்தா விஜயன்). அரவிந்த் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

அரவிந்திற்கு தான் ஒரு ஆண் இல்லை பெண் என்ற உணர்வு சிறு வயதில் இருந்தே இருக்கிறது. ஆசிரியர் ஆன பிறகு ஒரு சில சிகிச்சை மூலம் பெண்ணாக மாற நினைக்கிறார்.

தனது இந்த முடிவை வீட்டில் கூற, பெற்றோர்கள் முதல் மனமுடைந்தாலும் பின் ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால், சொந்த பந்தத்தினர் விலகிச் செல்கின்றனர்.

தான் தனது உடையை மாற்றிக் கொள்ளும் முறையை மாற்ற இருப்பதாக பணிபுரியும் பள்ளியில் இருக்கும் தலைமை ஆசிரியரிடம் கூற அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். ஆனால், பள்ளி மேலிடம் இதற்கு சம்மதம் தெரிவிக்கிறது.

சேலை அணிந்து கொண்டு முழு பெண்ணாக மாறிய பின் இந்த சமூகம் அரவிந்தை பானுவாக ஏற்றுக் கொண்டதா.?? பானுவாக மாறிய பின் அவர் படும் இன்னல்கள் என்னென்ன என்பதே இப்படத்தின் மீதிக் கதை.

இயக்குனரே கதையின் முக்கிய கதாபாத்திரத்தை தாங்கி நடித்திருப்பதால் படத்தின் ஒவ்வொரு இடத்திலும் அதற்கான முக்கியத்துவத்தை உணர்ந்து ஒவ்வொரு காட்சியும் நகர்த்திச் சென்றிருக்கிறார் இயக்குனர்.

அரவிந்த் மற்றும் பானு என்ற இரண்டு கதாபாத்திரத்தையும் ஒருசேர தந்து காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார். இதற்கு முன் இப்படியான கதை கொண்ட படங்கள் பல வந்தாலும், மற்ற படத்திலிருந்து இப்படம் நிச்சயம் மாறுபட்டு நிற்கிறது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

படத்தின் மிகப்பெரும் பலம் என்றால் அது திரைக்கதை மட்டுமே… எந்த வகையான ஆபாச காட்சிகள் இல்லாமல், முக சுழிவு ஏற்படா வண்ணம் வசனங்களையும் கவனிக்கத்தக்க வகையில் கொடுத்து கைதட்டல் பெறுகிறார் இயக்குனர்.

நடித்த நடிகர்கள் அனைவரையும் மிக சரியாக பயன்படுத்திருக்கிறார் இயக்குனர்.

ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை இரண்டுமே படத்தில் அதிகமாக கவனம் பெறுகிறது.

நீல நிறச் சூரியன் – அழகு

Facebook Comments

Related Articles

Back to top button