
காதல், குடும்பம், எதிர்பாராத திருப்பங்கள்… ரசிகர்களை 2 மணி நேரம் எண்டர்டெயின் செய்யும் ‘ராம் & லீலா’!
தமிழ் சினிமாவில் காதல் கதைகள் புதிதல்ல. ஆனால், அந்தக் காதலுக்குள் எதிர்பாராத திருப்பங்களையும், குடும்ப உணர்வுகளையும் கலந்து சொல்லும்போது அது ரசிகர்களை எந்த அளவுக்கு கவர்கிறது என்பதில்தான் வெற்றி இருக்கிறது. அந்த வகையில், காதல், நகைச்சுவை, குடும்ப உறவுகள் மற்றும் சென்டிமென்ட் ஆகியவற்றை கலந்து உருவாகியுள்ள திரைப்படம் ‘ராம் & லீலா’.
ரியோ, வர்திகா, சேத்தன், மாளவிகா அவினாஷ், முனிஷ்காந்த், தீபா வெங்கட், மகாபா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை ராமச்சந்திரன் கண்ணன் எழுதி இயக்கியுள்ளார்.
என்ன கதை?
சேத்தன் மற்றும் மாளவிகா அவினாஷ் தம்பதிக்கு மகனாக வரும் ரியோவுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது குடும்பத்தின் ஆசை. ஆனால், பல வருடங்களாக பெண் பார்த்தும் ரியோவுக்கு திருமணம் மட்டும் கைகூடவில்லை.
ரியோ பார்க்கும் ஒவ்வொரு பெண்ணும் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி திருமணத்தை நிராகரித்துச் செல்ல, விரக்தியில் இருக்கும் அவருடைய வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக வருகிறார் வர்திகா.

முதலில் பார்வையால் தொடங்கும் இவர்களது அறிமுகம், மெல்ல மெல்ல காதலாக மாறுகிறது. ஒரு கட்டத்தில் தனது காதலை வர்திகாவிடம் ரியோ வெளிப்படுத்த, அவரும் உடனடியாக பச்சைக்கொடி காட்டுகிறார். ஒரு தலைக் காதல், இருதலைக் காதலாக மாறுகிறது.
ஆனால், இந்தக் காதலுக்கு வர்திகா ஒரு கண்டிஷன் வைக்கிறார்.
“காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே உன்னுடன் இருக்க முடியும். அதற்கு மேல் நான் வீட்டிற்கு சென்றாக வேண்டும்” என்கிறார்.
ஆரம்பத்தில் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாத ரியோ, நாள்கள் செல்லச் செல்ல மாலை 6 மணிக்கு மேல் வர்திகா எங்கே செல்கிறார், ஏன் இப்படி ஒரு கட்டுப்பாடு இருக்கிறது என்ற கேள்விகளுடன் குழப்பமடைகிறார் ரியோ.
ஒரு கட்டத்தில் இதுதொடர்பாக இருவருக்கும் ஏற்படும் விவாதம், ரியோவை வர்திகாவின் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறது.
அங்கே வர்திகா மற்றும் அவரது குடும்பத்தைப் பற்றிய உண்மையை தெரிந்துகொள்ளும் ரியோவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது.
உயிருக்கு உயிராக காதலித்த வர்திகாவை ரியோ வெறுக்கும் அளவுக்கு அப்படி என்ன உண்மை தெரிந்தது?
வர்திகாவை ஏற்றுக்கொள்ள முடியாமல் ரியோ விலகிச் செல்வது ஏன்?
இவர்களது காதல் இறுதியில் என்ன ஆனது?
என்பதற்கான பதில்களை இரண்டாம் பாதியில் சுவாரஸ்யமான திருப்பங்களுடன் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

ரியோ – வர்திகா காதல் எப்படி?
படத்தின் மிகப்பெரிய பலம் ரியோ மற்றும் வர்திகா இடையேயான காதல் காட்சிகள்தான்.
இவர்களது முதல் சந்திப்பு முதல் காதலாக மாறும் தருணம் வரை காட்சிகள் பெரிதாக சிக்கலில்லாமல் இயல்பாக நகர்கின்றன. குறிப்பாக, மாலை 6 மணிக்கு மேல் வர்திகா வீட்டிற்கு சென்றுவிட வேண்டும் என்ற கண்டிஷன், கதையின் மீது ஒரு எதிர்பார்ப்பை உருவாக்குகிறது.
“அப்படி என்னதான் 6 மணிக்கு மேல் நடக்கிறது?” என்ற கேள்வியை ரசிகர்களுக்குள்ளும் இயக்குநர் ஏற்படுத்துகிறார்.
அதற்கான விடை கிடைக்கும் இடத்தில்தான் படத்தின் கதையும் வேறு ஒரு பாதைக்கு செல்கிறது.
ரியோ வழக்கம்போல் தனது இயல்பான நடிப்பால் கதாபாத்திரத்திற்கு தேவையான எண்டர்டெயின்மென்ட்டை கொடுத்திருக்கிறார்.
காதல், குழப்பம், அதிர்ச்சி, கோபம் என ஒவ்வொரு உணர்வையும் தனது ரியாக்ஷன்கள் மூலமாக சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக, வர்திகாவின் குடும்பத்தைப் பற்றிய உண்மையை தெரிந்துகொள்ளும் காட்சிகளில் அவரது நடிப்பு கவனம் பெறுகிறது.
வர்திகாவாக நடித்திருக்கும் நாயகியும் சிறப்பாக நடித்திருக்கிறார். குறிப்பாக அவரது கண்கள் கதாபாத்திரத்திற்கு கூடுதல் அழகு சேர்க்கின்றன. காதல் காட்சிகள் மட்டுமின்றி, கதையின் திருப்புமுனைகளிலும் தனது நடிப்பை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
சேத்தன் மற்றும் மாளவிகா அவினாஷ் இருவரும் தங்களது அனுபவமான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
ரியோவின் தங்கை, நண்பர் என படத்தில் வரும் துணை கதாபாத்திரங்களும் கதையோட்டத்திற்கு தேவையான பங்களிப்பை வழங்கியிருக்கின்றனர்.
படத்தின் இடைவேளை மிகப்பெரிய திருப்பத்துடன் அமைந்துள்ளது. முதல் பாதி முழுவதும் காதல் மற்றும் எண்டர்டெயின்மென்ட் என செல்லும் நிலையில், இடைவேளையில் வரும் திருப்பம் இரண்டாம் பாதி மீது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.
“இனி என்ன நடக்கும்?” என்ற கேள்வியுடன் ரசிகர்களை இடைவேளைக்கு அனுப்புவது படத்தின் முக்கியமான பிளஸ். இரண்டாம் பாதியில் அந்த கேள்விகளுக்கான பதில்களை இயக்குநர் படிப்படியாக அவிழ்த்துச் செல்கிறார்.

ஒளிப்பதிவு & இசை
படத்தின் முக்கியமான பலங்களில் ஒளிப்பதிவும் இசையும் இடம்பெறுகின்றன.
மல்லைகார்ஜுனின் ஒளிப்பதிவு, காதல் காட்சிகளுக்கும் கதையின் சூழலுக்கும் அழகான காட்சியமைப்பை வழங்குகிறது.
அங்கித் மேனனின் இசை, படத்தின் உணர்வுகளுக்கு ஏற்றவாறு பயணிக்கிறது. குறிப்பாக காதல் மற்றும் சென்டிமென்ட் காட்சிகளில் இசை நல்ல பக்கபலமாக அமைந்துள்ளது. எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ள YNC சிவா, படத்தின் ஓட்டத்தை பெரும்பாலும் சீராக வைத்திருக்கிறார்.
கடந்த மாதம் வெளியான ஒரு திரைப்படத்தின் சில காட்சிகளை நினைவுபடுத்தும் தருணங்கள் ‘ராம் & லீலா’வில் ஆங்காங்கே இடம்பெறுகின்றன.
இருப்பினும், அவை படத்தின் மையக் கதையையோ, முக்கியமான திருப்பங்களையோ பெரிதாக பாதிக்கவில்லை. அதனால், படம் தனது கதையோட்டத்தில் ரசிகர்களை தொடர்ந்து அழைத்துச் செல்கிறது.
படம் முழுவதும் உருவாக்கப்பட்ட கேள்விகளுக்கு இரண்டாம் பாதியில் பதில் அளித்த இயக்குநர், இறுதியில் ஒரு பாசிட்டிவான கிளைமாக்ஸ் மூலம் படத்தை நிறைவு செய்திருக்கிறார்.
குறிப்பாக, படம் முடிந்து திரையரங்கில் இருந்து வெளியே வரும் போது ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான உணர்வை கொடுக்கும் வகையில் கிளைமாக்ஸ் அமைந்துள்ளது.
பெரிய சிக்கலான கதையை சொல்லாமல், காதல், குடும்பம், சென்டிமென்ட், நகைச்சுவை மற்றும் திருப்பங்கள் என எளிமையான முறையில் ரசிகர்களை இரண்டு மணி நேரம் வேறு ஒரு உலகத்திற்குள் அழைத்துச் செல்கிறது ‘ராம் & லீலா’.
காதல் கதைகளையும், லைட்டான குடும்ப பொழுதுபோக்கு படங்களையும் விரும்புபவர்களுக்கு இப்படம் நல்ல தேர்வாக அமையும்.





