Spotlightசினிமா

காதலில் ஆரம்பித்து… சண்டையில் சிக்கி… காமெடியில் கலக்கும் ‘சண்டக்காரி’!

‘த்ரிஷ்யம்’ படத்தின் இயக்குநர் ஜீத்து ஜோசப் கதையில் உருவாகியுள்ள புதிய ரொமான்டிக் காமெடி குடும்பத் திரைப்படம் ‘சண்டக்காரி’. பிரபல இயக்குநர் ஆர். மாதேஷ் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் விமல் மற்றும் ‘சிவாஜி’ படப் புகழ் ஸ்ரேயா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

காதல், நகைச்சுவை, மோதல், குடும்ப உணர்வுகள் என அனைத்து அம்சங்களையும் கலந்து உருவாகியுள்ள ‘சண்டக்காரி’, குடும்ப ரசிகர்களுக்கு முழுமையான பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாகியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

லண்டனில் இயங்கி வரும் முன்னணி சாப்ட்வேர் நிறுவனத்தை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை நகர்கிறது. அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரியாக ஸ்ரேயாவும், அங்கு பணிபுரியும் சாப்ட்வேர் ஊழியராக விமலும் நடித்துள்ளனர். அதிகாரி – ஊழியர் என வெவ்வேறு நிலைகளில் இருக்கும் இருவருக்கும் இடையே ஏற்படும் மோதல்கள், ஈகோ, கோபம் மற்றும் காதல் ஆகியவை கதையின் முக்கிய அம்சங்களாக அமைந்துள்ளன.

விமல் மற்றும் ஸ்ரேயா இடையேயான சண்டையில் சிக்கித் தவிக்கும் கதாபாத்திரத்தில் சத்யன் நடித்துள்ளார். இருவரின் மோதல்களுக்கு இடையில் அவர் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் படத்தின் முக்கியமான காமெடி பகுதிகளாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. விமல் – ஸ்ரேயா – சத்யன் கூட்டணி திரையில் கலகலப்பான அனுபவத்தை வழங்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு முக்கிய கதாபாத்திரங்களில் கே.ஆர். விஜயா, புன்னகை பூ கீதா

படத்தில் பிரபு குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை கே.ஆர். விஜயா மற்றும் புன்னகை பூ கீதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், கிரேன் மனோகர் நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ளார்.

இவர்களுடன் ‘கடலோர கவிதைகள்’ புகழ் ரேகா, ‘மஹதீரா’ படத்தில் வில்லனாக நடித்த தேவ் கில், உமா பத்மநாபன், மகாநதி சங்கர் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் இணைந்து நடித்துள்ளனர்.

முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் கூட்டணி

‘சண்டக்காரி’ படத்தின் தொழில்நுட்பக் குழுவிலும் முன்னணி கலைஞர்கள் இணைந்துள்ளனர். பிரபல இசையமைப்பாளர் அம்ரீஷ் இசையமைத்துள்ளார். குருதேவ் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ள நிலையில், தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்புப் பணிகளை கவனித்துள்ளார். ஐய்யப்பன் கலை இயக்கத்தையும், கணல் கண்ணன் சண்டைக்காட்சிகளையும் வடிவமைத்துள்ளனர். ஹபீப் நடனக் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

விமல் – ஸ்ரேயா இணையும் புதிய கூட்டணி மற்றும் ஜீத்து ஜோசப்பின் கதையில் உருவாகியுள்ள படம் என்ற எதிர்பார்ப்பு ஆகியவை ‘சண்டக்காரி’ திரைப்படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்துள்ளன.

காதல், காமெடி, மோதல் மற்றும் குடும்ப உணர்வுகளுடன் உருவாகியுள்ள ‘சண்டக்காரி’, குடும்பத்துடன் திரையரங்கில் ரசிக்கக்கூடிய ரொமான்டிக் காமெடி படமாக விரைவில் வெளியாக உள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button