
2016 ஆம் வருடம் இந்தியாவையே உலுக்கி போட்ட ஒரு நிகழ்வு பணமதிப்பிழப்பு. 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. கோடிக்கணக்கான ஏழை மக்கள் இதனால் பெரும் துயரில் ஆழ்ந்தனர்.
அதற்குபிறகு 2000 ரூபாய் நோட்டுகள் மக்களின் புழக்கத்திற்கு விடப்பட்டது. சாதாரண ஏழை கூலி வர்க்கத்தினரின் கையில் அந்த 2000 ரூபாயினால் ஏழை படும் அவல நிலையை விளக்கும் படமாக வெளிவருகிறது இந்த “2000” திரைப்படம்.
திருமணமாகி பல வருடங்கள் கழித்து அப்புசாமி என்ற விவசாயிக்கு குழந்தை பிறக்கிறது. குழந்தை பிறந்த ஓரிரு நாட்களில் உடல்நிலை சரியில்லாமல் போக, அவசரமாக மருந்து வாங்கி வருமாறு மருத்துவர், விவசாயி அப்புசாமியிடம் கூறுகிறார்.
அப்புசாமி தனியார் ஏடிஎம்’ல் பணம் எடுக்கிறார். அதில் 2000 ரூபாய் நோட்டு கிடைக்கிறது. அந்த நோட்டின் ஓரத்தில் பென்னால் எழுதப்பட்டிருக்கிறது. இதனால், மருந்து கடைகளில் இந்த நோட்டு செல்லாது என மருந்தினை தர மறுக்கின்றனர்.
வேறு பணமும் இல்லாததால், சரியான நேரத்தில் மருந்தினை கொடுக்க இயலாததால் குழந்தை இறந்துவிடுகிறது.
இதனால், சமூக சேவை வழக்குரைஞர் பாரதி கிருஷ்ணகுமார் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்கிறார். குழந்தையின் மரணத்திற்கு காரணம் ஏடிஎம்’ல் இருந்து வெளிவந்த எழுதப்பட்ட 2000 ரூபாய் நோட்டு என்று.
இதில், யார் மீது தவறு .? தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட்டார்களா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.
பாலன் கதாபாத்திரத்தில் நேர்மையான வழக்குரைஞராக வந்த பாரதி கிருஷ்ணகுமார், தனது கதாபாத்திரத்தை நேர்த்தியாக செய்து முடித்துள்ளார்.
ஒரு அனுபவ நடிகரின் நடிப்பைப் போன்று தனது கதாபாத்திரத்தில் ஜொலித்திருக்கிறார். அமைதியான அறப்போராட்டத்தின் மூலமும் சட்டப் போராட்டம் மூலமும் எளிய மக்களின் வாழ்க்கைக்கு ஒளி ஏற்றும் வழக்குரைஞர் கதாபாத்திரத்தில் தனக்கென தனி ட்ராக் அமைத்து சிறப்பாக பயணித்திருக்கிறார்.
அரசு வழக்குரைஞராக தோன்றிய கராத்தே வெங்கடேஷ் தனது தோற்ற மிரட்டலையும், கண் மிரட்டலையும் சிறப்பாக கொடுத்திருக்கிறார்.
இதன் நடுவே ஆணவக் படுகொலை சம்பவம் ஒன்றும் கதையில் ஒரு பக்கமாக ஓடிக் கொண்டிருக்கிறது. சாதியால் தனது மனைவியை இழந்த ஒரு இளைஞன், தன் மனைவியின் மரணத்திற்கு காரணமாக இருந்த தனது அப்பா மற்றும் உறவினர்களுக்கு சட்டத்தின்மூலம் தண்டனை பெற்றுத் தந்தாரா இல்லையா என்பதையும் காட்டியிருக்கிறார் இயக்குனர்.
சரியான மூலக்கதையை கையில் எடுத்த இயக்குனர் அதை சொல்லும் விதத்தில் தடுமாறியிருக்கிறார். காட்சிகள் எதையும் வெளியே எடுத்துச் செல்லாமல், நீதிமன்றம் மற்றும் அலுவலகம் என இரண்டை மட்டும் திருப்பி திருப்பி காண்பித்து ரசிகர்களை களைப்படையை வைத்திருக்கிறார்கள்.
கதையின் ஓட்டத்தை சற்று சுவாரஸ்யத்தோடு கொடுத்திருந்தால் 2000 நோட்டின் பாதிப்பு “2000” திரைப்படம் மூலம் மக்களிடம் வெகுவாக எடுத்துச் சென்றிருக்க முடியும்.
இனியவனின் இசையில் இன்னும் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம்.
பிரிமூஸ் தாஸின் ஒளிப்பதிவு கச்சிதம்.
நாட்டு மக்களுக்கு தேவையான விழிப்புணர்வு படமாக இதை கையில் எடுத்ததற்காக இயக்குனர் ருத்ரனுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்ளலாம்.





