Spotlightவிமர்சனங்கள்

அங்கம்மாள் – விமர்சனம் 4/5

 இயக்கம்: விபின் ராதாகிருஷ்ணன்

நடிகர்கள்: கீதா கைலாசம், சரண் சக்தி, பரணி, முல்லையரசி, தென்றல் ரகுநந்தன், யாஷ்மின், சுதாகர், வினோத் ஆனந்த்,

தயாரிப்பு: ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் & NJOY FILMS & FIRO MOVIE STATION

ஒளிப்பதிவு:ANJOY SAMUEL

இசை: MOHAMMED MAQBOOL MANSOOR

கதை: பெருமாள் முருகன்

படத்தொகுப்பு: PRADEEP SHANKAR

கதைப்படி,

தொலைபேசி இல்லாத காலகட்டம் அது. அங்கம்மாளுக்கு (கீதா கைலாசம்) இரண்டு மகன்கள். மூத்த மகனான பரணிக்கு திருமணம் முடிந்து 7 வயது மதிக்கத்தக்க மகள் இருக்கிறாள். இவரது மனைவியாக வருகிறார் தென்றல்.

இரண்டாவது மகனாக வருகிறார் சரண் சக்தி. கஷ்டப்பட்டு உழைத்து தனது இரண்டாவது மகனான சரணை டாக்டராக்கி விடுகிறார் அங்கம்மாள். ஊரில் அனைத்து வீடுகளுக்கு பால் கொடுப்பதோடு இல்லாமல், ஊரில் நல்லது கெட்டது என்றால் முதல் ஆளாக அதனை இழுத்து போட்டு செய்து வருகிறார் அங்கம்மாள். சட்டை (ஜாக்கெட்) அணிந்து கொள்ளாமல், சேலையால் உடலை மறைத்து, பின் தலையில் கொண்டையை சுருட்டிக் கொண்டு, சுருட்டு பிடித்துக் கொண்டு வரும் போது ஊர் ஆண்கள் பயப்படும் அளவிற்கு கம்பீரமாக வருவார் அங்கம்மாள்.

டவுணில் வேலை பார்த்து வரும் சரண், அங்கு முல்லையரசியுடன் காதல் ஏற்படுகிறது. முல்லையரசி நல்ல வசதி படைத்த பெண். இருவருக்குள்ளும் காதல் ஓடிக் கொண்டிருக்க, முல்லையரசியின் வீட்டில் சம்மதம் தெரிவித்து விடுகின்றனர்.

சரணும் தனது அம்மா அங்கம்மாவிடம் சம்மதம் பெற்றாலும், அங்கம்மாவிடம் ”முல்லை வீட்டினர் வசதி படைத்தவர்கள். அவர்கள் முன்னாள் இப்படி இருக்காதே, சட்டை அணிந்து கொண்டு, அடக்கமாக பேசு” என்று கூறுகிறார் சரண்.

நான் நானாக இருப்பதில் என்ன தவறு என்றெண்ணும் அங்கம்மாள், முதலில் ஏற்க மறுத்தாலும் தனதுமகனுக்காக அதனை ஏற்றுக் கொள்கிறார். ஊரில் அனைவரும் அங்கம்மாளிடம் சகஜமாக பேச ஆரம்பிக்க, சிலர் கேலியும் செய்கின்றனர்.

இதனால் மனம் உடையும் அங்கம்மாள் மீண்டும் பழைய நிலைமைக்கு மாறுகிறார். இதனால், சரணின் திருமணம் என்ன ஆனது என்பதே படத்தின் மீதிக் கதை.

அங்கம்மாள் கதாபாத்திரத்திற்கு இவர் தான் சரியாக இருப்பார் என்று கீதா கைலாசத்தை தேர்ந்தெடுத்ததற்கு இயக்குனருக்கு மிகப்பெரும் வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்ளலாம். நடை, உடை, டயலாக், உடல் மொழி என எந்த இடத்திலும் கீதாவாக தெரியாமல், அங்கம்மாளாகவே நமது கண்களுக்கு தெரிந்திருந்தார் கீதா கைலாசம். தனது ஊர் மக்களிடையே திண்ணையில் அமர்ந்து கொண்டு அரட்டை அடிப்பதும், அது 18+ வார்த்தையாக இருந்தாலும், அதில் எந்த ஒரு ஆபாசமில்லாத வெள்ளந்தி பேச்சும் நம்மை கிராமத்து பக்கமே அழைத்துச் சென்று விட்டார் கீதா கைலாசம்.

தனது பேத்தி மீது வைத்திருக்கும் பாசத்தை அவ்வப்போது வெளிப்படுத்தும் விதம் , உச்சானி பூவிற்காக காத்திருப்பது, வயது முதிர்ந்த காதல் என படத்தில் அவ்வளவும் அழகு கொட்டிக் கிடக்கிறது.

இரவு நேரத்தில் சில்லென அடிக்கும் காற்றில், பம்பு செட் மேலே அமர்ந்து நாதஸ்வரம் கற்றுக் கொள்ளும் பரணி, மாமியாராக தன்னை காயப்படுத்தினாலும் இது நம்ம குடும்பம் என்று எண்ணம் கொண்டு வரும் கதாபாத்திரமான மருமகள் தென்றல், கருமேக அழகாக காட்சிகளில் அழகு தேவதையாக காட்சி தரும் முல்லையரசி, என்ன சொன்னாலும் எந்த இடத்திலும் பாசத்தை குறைவில்லாமல் கொடுக்கும் மகன் சரண் என்று படம் முழுவதுமே ஒரு வாழ்வியலாக தெரிந்தது படத்திற்கு மிகப்பெரும் பலம்.

அங்கம்மாள், மகன் பரணி, மகன் சரண் மருமகள் தென்றல் என நால்வருக்கும் வீட்டிற்குள் நடக்கும் உரையாடல் படத்திற்கு மிகப்பெரும் மையம்.

சின்ன சின்ன சிரிப்பு, சின்ன சின்ன காமெடி என படத்திற்குள் நம்மை அழகாகவே இழுத்துச் சென்றிருக்கிறார் இயக்குனர். உச்சிமலை காத்து வீசி உச்சானி பூ வரும் என்ற பாடலோடு படம் முடியும் போது நம்மையும் இந்த படம் சிலிர்க்க வைத்துவிடுகிறது.

ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரும் பலம் என்றே கூறலாம். பரணியை இரவு நேரத்தில் காட்டும் போது வைக்கப்பட்ட ப்ரேம், வீட்டிற்குள் நடந்த சண்டையை காட்சிப்படுத்திய விதம், சுழன்று அடிக்கும் காற்றை படமாக்கிய விதம் என பல காட்சிகளை ஒளிப்பதிவாளரின் திறமையை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

பாடல்களும் சரி பின்னணி இசையும் சரி கதையோடு பயணிக்க வைக்க பெரிதும் கைகொடுத்திருக்கிறது.

உச்சிமலை காத்து உச்சானி பூ வரும் பாடல் வரும் க்ளைமாக்ஸில் நம் உடல் ஒரு நிமிடம் சிலிர்க்கிறது. இதுவே படத்தின் வெற்றி.

அங்கம்மாள் – அழகு.. 

Facebook Comments

Related Articles

Back to top button