
வல்லபாய் படேலின் பிறந்தநாளை ஒட்டி அவரது சிலை குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. ”ஒற்றுமை சிலை” என பெயரிடப்பட்டுள்ள இந்த சிலையை நாட்டுக்கு அர்ப்பணிப்பதன் அடையாளமாக பிரதமர் மண்ணையும் நர்மதா ஆற்று நீரையும் ஒரு கலசத்தில் ஊற்றினார்.
அதைத் தொடர்ந்து சிலையின் காலடியில் பிரதமர் சிறப்பு பிரார்த்தனை செய்தார். இதையடுத்து அங்கு அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகம் மற்றும் பார்வையாளர் அரங்கத்தை பிரதமர் பார்வையிட்டார்.
இந்த திறப்பு விழாவையொட்டி இந்திய விமானப்படை விமானங்கள் பறந்ததுடன் கலைநிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தற்போது வரை உலகில் இருக்கும் உயரமான சிலை என்றால் அது சீனாவில் உள்ள புத்தர் சிலைதான். அதன் உயரம் 419 அடி. இனிமேல் உலகிலேயே மிக உயரமான பிரம்மாண்டமான சிலை என்றால், அது குஜராத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேலின் சிலைதான். படேல் சிலையின் மொத்த உயரம் 787 அடி. சிலை அமைந்துள்ள பீடத்தின் உயரம் மட்டும் 190 அடி ஆகும்.




