Spotlightசினிமா

சைக்கோ; விமர்சனம் 3/5

கோயம்புத்தூர் மாவட்டத்தில் பல பெண்கள் மிகக் கொடுரமான முறையில் கொல்லப்பட்டு அவர்களது உடம்பை (முண்டம்) மட்டும் வீசி விட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறான் சைக்கோ கொலைகாரன் ராஜ்குமார்.

பார்வையில்லாதவராக வரும் உதயநிதி ஸ்டாலின், தனியார் ரேடியோ நிறுவனத்தில் ஆர் ஜே’வாக வரும் நாயகி அதிதி ராவை மீது காதல் கொள்கிறார். அதிதி ராவிற்கு உதயநிதி மீது காதல் இல்லை.

இச்சமயத்தில், அதிதி ராவையும் அந்த சைக்கோ கொலைகாரன் கடத்தி விடுகிறான். யார் இந்த ‘சைக்கோ’ கொலைகாரன் ராஜ்குமார்..?? எதற்காக இந்த கொலைகளை செய்கிறான்..?? உதயநிதி, அதிதி ராவை கண்டுபிடித்தாரா, இல்லையா..?? என்பதே படத்தின் மீதிக் கதை.

பார்வையில்லாதவராக கெளதமன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த உதயநிதி, மிகவும் யதார்த்தமாக நடித்து ஸ்கோர் செய்துள்ளார்.

நாயகி அதிதிக்கு ஆங்காங்கே தனது நடிப்பை வெளிக்காட்டுவதற்கான இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

’ஏ’ சான்றிதழ் கொடுக்கப்பட்ட படம் என்பதால், நித்யா மேனன் இஷ்டத்துக்கும் ஆபாச வார்த்தைகளை அள்ளித் தெளித்திருக்கிறார்.

சிங்கம்புலியின் கதாபாத்திரம் பேசப்படும் என்று பார்த்தால், இறுதியில் ஓவர் ஆக்டிங் கொடுத்து சற்று ஏமாற்றத்தை கொடுத்துவிட்டார்.

காவல் அதிகாரியாக வரும் இயக்குனர் ராம், மற்றும் ரேணுகா குமரன், ப்ரீதம், பாவா செல்லதுரை அனைவரும் கதையில் வந்து செல்லும் கதாபாத்திரமே.

படத்தின் மிகப்பெரும் பலம், இசையானி இளையராஜா தான். பின்னனி இசையில் சத்தமில்லா ஒரு சத்தத்தை கொடுத்து படத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். அதிலும், சித் ஸ்ரீராம் குரலில் வரும் உன்ன நெனச்சி’ பாடல் ரிப்பீட் மோட் தான்.

தன்வீர் மிர் அவர்களின் ஒளிப்பதிவு இருட்டிலும் பளிச்சிட வைத்திருக்கிறது. அதிலும் ‘உன்ன நெனச்சி பாடல் மற்றும் முழுகுவர்த்தி ஏந்தப்பட்ட அந்த அறை இவற்றில் கேமரா வேலைகளின் உச்சத்தை காணலாம்.

வில்லனாக வரும் ராஜ்குமார், மிகச் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். வில்லனையும் 5 நிமிடத்தில் நல்லவனாக ஏக்கப்பட வைக்கும் குணம் மிஷ்கினுக்கு தான் இருக்கும் போல…

கொலைகாரன், கொலை செய்யும் காரணம் கேட்டால், படு மோசமாக இருக்கிறது. அதுக்கு எதுக்குப்பா எல்லா பெண்களையும் கொலை செய்யணும்..??

மிகக் குறைவான ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்தும் கொண்டாடக்கூடிய அளவில் மட்டுமே ‘சைக்கோ; இருக்கிறான்.

வேண்டுமென்றே சில ஆபாச காட்சிகள் திணிக்கப்பட்டிருப்பது எரிச்சலைத் தான் கொண்டு வருகிறது.

குடும்பங்கள் அருவருக்கக்கூடியக் கூடிய காட்சிகள் அதிகம் இருப்பதால், தனிமையிலேயே படத்தை காண்பது நலம்.

மிஷ்கினிடம் ஏதோ எதிர்பார்த்தோம், ஆனால் இதை எதிர்பார்க்கவில்லை….

சைக்கோ – இரத்த வெறியாட்டம்..

Facebook Comments

Related Articles

Back to top button