Spotlightவிமர்சனங்கள்

உன் பார்வையில் – விமர்சனம்

ழுத்து & இயக்கம்: கபீர் லால்

நடிகர்கள்: பார்வதி நாயர், கணேஷ் வெங்கட்ராமன், மகேந்திரன், நிழல்கள் ரவி, துளசி

இசை: அமர் மோஹில்

தயாரிப்பு: : Lovely World Entertainment.

இரட்டை சகோதரிகளாக வருகின்றனர் திவ்யா மற்றும் பாவ்யா (பார்வதி நாயர்). பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருக்கின்றனர் இவர்கள். இவர்களில் திவ்யாவிற்கு கண் பார்வை தெரியாது. பாவ்யாவிற்கு கண்களில் சில பிரச்சனைகள் இருக்கிறது.

இந்த நிலையில், தனிமையில் இருந்த திவ்யா மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறார். இதனால், மனமுடையும் பாவ்யா திவ்யாவை நினைத்து தினமும் கவலை கொள்கிறார். இவரது கணவரான கணேஷ் வெங்கட்ராமன் ஆறுதல் கூறியும் திவ்யாவை நினைத்து மனம் உடைகிறார்.

இந்த சூழலில், ஏதோ ஒரு மர்ம உருவம் தன்னை பின் தொடர்வதை அறிகிறார் பாவ்யா. தொடர்ந்து தனது தங்கை திவ்யா தற்கொலை செய்து கொள்பவர் இல்லை என்று கூறும் பாவ்யா, அது ஒரு கொலையாக இருக்கக் கூடும் என்ற சந்தேகத்தில், கொலைக்கான காரணம் மற்றும் அந்த மர்ம உருவம் யார் என்றும் விசாரிக்க களத்தில் இறங்குகிறார்.

அவர் விசாரிக்க ஆரம்பிக்கும் அடுத்த கணமே, பல திடுக்கிடும் சம்பவங்கள் அரங்கேறுகின்றன. அது என்ன சம்பவம்.? திவ்யா கொலைக்கு என்ன காரணம்.? பாவ்யாவை பின் தொடர்ந்து அந்த மர்ம நபர் யார்.?? உள்ளிட்ட கேள்விகளுக்கெல்லாம் பல திடுக்கிடும் திருப்பங்களுடன் அரங்கேறியிருக்கும் சம்பவம் தான் இந்த “உன் பார்வையில்”.

இரட்டை கதாபாத்திரத்தில் தோன்றியுள்ளார் பார்வதி நாயர். திவ்யா கதாபாத்திரமானது ஒரு சில காட்சிகள் என்றாலும் அதை யுனிக்கான ஒரு நடிப்போடு அதை கொடுத்திருக்கிறார். பாவ்யா கதாபாத்திரமாக படம் முழுவதும் படபடப்பாகவே கொண்டு சென்றிருக்கிறார். பார்வை தெரியாமல் தனது கண்களால் பல காட்சிகளை நன்றாகவே கடத்திச் சென்றிருக்கிறார். மர்ம நபரை துரத்தும் காட்சிகளில் மர்ம நபரிடம் இருந்து தப்பிக்க ஓடும் காட்சிகளிலெல்லாம் நம்மை சீட்டின் நுனிக்கே அழைத்துச் சென்று விடுகிறார்.

சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும், தனக்கானதை சரியாக மிக அழகாக செய்து முடித்திருக்கிறார் கணேஷ் வெங்கட்ராமன். இவர்கள் போக, நிழல்கள் ரவி, துளசி உள்ளிட்ட சீனியர் நடிகர்களுக்கும் தங்களது அனுபவ நடிப்பை அளவாக கொடுத்திருக்கின்றனர்.

மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் மகேந்திரன். இரண்டாம் பாதியில் இவர் ஆடும் ஆட்டம், படத்தினை மிகவும் பரபரப்பானதாக ஆக்கிவிடுகிறது. தனது கண்களாலும் நடிப்பாலும் மிரட்டலை அவர் கொடுத்திருக்கிறார்.

படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை அடுத்து என்ன நடக்கும் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை ஒவ்வொரு காட்சியிலும் கொடுத்துக் கொண்டே செல்கிறார் இயக்குனர். மர்ம உருவம் உலவிக் கொண்டிருக்கும் போது, பார்வதி நாயரின் பரிதவிப்பான நடிப்பு, இருளில் கொடுக்கப்பட்ட வெளிச்சம், க்ளைமாக்ஸில் வைக்கப்பட்ட ட்விஸ்ட் காட்சிகள், காட்சிக்கு காட்சி பரபரப்பு என படம் முழுவதுமே விறுவிறுவென சென்றது படத்திற்கு மிகப்பெரும் பலம்.

ஒளிப்பதிவு படத்தினை ஒரு தளத்திற்கு மேலே கொண்டு சென்று விட்டது. பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரும் பலம் என்றே கூறலாம். சஸ்பென்ஸ் த்ரில்லர் விரும்பிகளுக்கு சரியான ஒரு தீணியாக இப்படம் சன் நெக்ஸ் ஓடிடி தளத்தில் வெளிவந்திருக்கிறது.

மொத்தத்தில்,

உன் பார்வையில் – தரமான த்ரில்லர் ரைட்…

Facebook Comments

Related Articles

Back to top button