
ஆஹா ஓடிடி தளத்தில் வரும் 11ஆம் தேதி வெளியாகும் திரைப்படம் தான் ”வான் மூன்று”. மூன்று தலைமுறை காதலை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதுதான் இந்த படத்தின் மையக்கரு.
இப்படத்தில், டெல்லி கணேஷ், லீலா தாம்சன், வினோத் கிஷன், அபிராமி வெங்கடாசலம், ஆதித்யா பாஸ்கர் மற்றும் அம்மு அபிராமி உள்ளிட்டவர்கள் நடித்திருக்கின்றனர்.
தான் காதலித்த பெண் தன்னை ஏமாற்றிவிட்டதாக விஷம் அருந்தி மருத்துவமனையில் அட்மிட் செய்யப்படுகிறார் ஆதித்யா. அதே நேரத்தில், காதலன் தன்னை விட்டுச் சென்று விட்டதாகக் கூறி அம்மு அபிராமியும் விஷம் அருந்தி அதே மருத்துவமனையில் அட்மிட் செய்யப்படுகிறார். இவர்கள் இருவரும் எதிரெதிர் பெட்’டில் இருக்கின்றனர்.
அச்சமயம், இருவரும் காதலைப் பற்றி அறிந்துகொள்கின்றனர். இது இளம் தலைமுறையின் காதலாக வருகிறது.
தனது தந்தையை விட்டு காதலித்தவனை கரம் பிடிக்கிறார் அபிராமி வெங்கடாசலம். தனது மனைவியை நன்றாகவே பார்த்துக் கொள்கிறார் வினோத் கிஷன். அபிராமிக்கு மூளையில் மிகப்பெரும் பிரச்சனை வர, இறப்பின் விளிம்பிற்கு சென்று விடுகிறார். நடுத்தர வயது காதலை இந்த ஜோடிகள் காண்பிக்கின்றனர். இந்த காதல் எதுவரை செல்கிறது.? காதலின் ஆழம் என்ன என்பதை நடுத்தர தலைமுறையாக கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள்.
மகன் விட்டுச் சென்று விட, உனக்கு நான் எனக்கு நீ என்ற வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர் 60வயதை கடந்த டெல்லி கணேஷ் மற்றும் லீலா தம்பதியினர். லீலாவிற்கு இதய கோளாறு ஏற்பட, ஆப்ரேஷனுக்கு நிறைய பணம் தேவைப்படுவதால் செய்வதறியாது திகைத்து நிற்கிறார் டெல்லி கணேஷ். அப்போது இருக்கும் அவர்களின் அனுபவ காதல் எப்படி கைகொடுத்தது என்பதை காலம் கடந்த தலைமுறையாக காட்சிகளுக்கு எடுத்து வந்திருக்கிறார்கள்.
இந்த மூன்று தலைமுறைகளும் தங்களுக்கான காதல் எப்படி உலகில் உலாவிக் கொண்டிருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார் இயக்குனர் முருகேஷ்..
ஒவ்வொரு காதலிலும் ஒருவிதமான ஈர்ப்பைக் கொடுத்து மிக அதிகமாகவே கவனம் பெற வைத்துவிட்டார் இயக்குனர். ஆதித்யாவிடம் முதியவர் ஒருவர் கூறும் காதல் என்றால் என்ன என்பது அல்டிமேட் வசனங்கள், யதார்த்தங்கள். கதாபாத்திரங்களில் நடித்த நடிகர்கள் அனைவரும் தங்களது அனுபவ நடிப்பால் காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கின்றனர்.
அந்த ஒரு காட்சிக்காகவே இயக்குனருக்கு மிகப்பெரும் பூங்கொத்தை வழங்கலாம். காதலை காதலாகக் கூறி அதிகமாகவே ரசிக்க வைத்துவிட்டார் இயக்குனர். ஆபாசம் இல்லை, சண்டைக் காட்சிகள் இல்லை, அழகு காவியமாக படத்தை கொடுத்திருக்கிறார்கள்.
இந்த காவியத்திற்கு ஒளிப்பதிவும் இசையும் பெரிதாகவே கைகொடுத்திருக்கிறது. திரைக்கதையை இன்னும் சற்று ஸ்பீடு ஏற்றியிருந்திருக்கலாம் என்ற சின்ன குறையோடு காதல் என்ற ஒன்றால் அதை ஈடு செய்திருக்கிறார் இயக்குனர் என்ற நிறைவை கூறிக் கொண்டு விமர்சனத்தை முடித்துக் கொள்வோம்..
வானம் மூன்று – மூன்று தலைமுறையின் காதல் காவியம் …
Producer – Vinoth Kumar Senniappan
Production – Cinemakaaran
Director – AMR Murugesh
DOP – Charles Thomas
Music – R2 BRO’S
Editor – AJAY MANOJ
Lyricist – AMR MURUGESH, ELAIYA VARMAN, SIVA KUMAR, SHANKARA KUMAR PS