Spotlightவிமர்சனங்கள்

வல்லான் – விமர்சனம் 2.5/5

வி எஸ் மணி சேயோன் இயக்கத்தில் சுந்தர் சி, தன்யா ஹோப், ஹேபா படேல், கமல் காமராஜு, அபிராமி வெங்கடாசலம், சாந்தினி தமிழரசன், தலைவாசல் விஜய், ஜெயகுமார், டி எஸ் கே உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “வல்லான்”.

படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் மணி பெருமாள். மேலும், இசையமைத்திருக்கிறார் சந்தோஷ் தயாநிதி. படத்தொகுப்பு செய்திருக்கிறார். தயாரிப்பாளர்கள் வி ஆர் மணிகண்ட ராமன் & வி காயத்ரி இருவரும் இணைந்து வல்லான் படத்தினை தயாரித்திருக்கிறார்கள்.

கதைக்குள் பயணிக்கலாம்…

சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரியான சுந்தர் சி, யாரையோ வெறிகொண்டு தேடி வருகிறார். இந்த சூழலில், மிகப்பெரும் செல்வந்தரின் மருமகனான கமல் காமராஜூ, மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார்.

இந்த வழக்கை போலீஸ் விசாரிக்க, விசாரணையில் எந்த வித முன்னேற்றமும் இல்லாததால் வழக்கை தனிப்பட்ட முறையில் விசாரித்து தரும்படி போலீஸ் உயரதிகாரி சுந்தர் சி’யிடம் கேட்கிறார். சுந்தர் சி வழக்கை விசாரிக்க ஆரம்பிக்கிறார்.

விசாரணை சென்று கொண்டிருக்கும் தருவாயில், இந்த வழக்கை செய்தியாக்கிக் கொண்டிருந்த பெண் ஒருவரும் கொல்லப்படுகிறார்.

வழக்கு சென்று கொண்டிருக்கும் சமயத்தில், காட்டிற்குள் ஒரு பெண்ணின் சடலம் கிடைக்கிறது. அந்த சடலம் அருகே மற்றொரு பெண்ணின் சடலமும் கிடைக்க, இறந்த அந்த பெண் தன்னுடைய காதலியான தன்யா ஹோப் தான் என்றறிந்து கதறி அழுகிறார் சுந்தர் சி.

அதன்பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.

நாயகன் சுந்தர் சி, இதற்கு முன் நடித்த படங்களை காட்டிலும், இப்படத்தில் இவரது நடிப்பு மிகவும் செயற்கையாகவே இருந்தது. இறந்தது தன் காதலி என்றறிந்து கதறி அழும் காட்சியில் நமக்கு எந்த வித உணர்வையும் கடத்தவில்லை. மேலும், பல இடங்களில் ஒரே மாதிரியான ரியாக்‌ஷனைக் கொடுத்து காட்சிகளை தவிடுபொடியாக்கி விட்டார் சுந்தர் சி. இயக்குனர் இன்னும் சற்று அதிகப்படியான நடிப்பை சுந்தர் சி’யிடம் கேட்டு வாங்கியிருக்கலாமே.?

நாயகிகளான தன்யா ஹோப், ஹேபா படேல் மற்றும் அபிராமி வெங்கடாசலம் இருவரும் தங்களது நடிப்பை அளவோடு கொடுத்து, அக்கதாபாத்திரத்தில் நிலைத்து நின்றனர்.

தலைவாசல் விஜய் மற்றும் சாந்திணி என்ற இரு நடிகர்களை எதற்காக இந்த சின்ன கதாபாத்திரங்களில் நடிக்க வைத்து இயக்குனர் பழி வாங்கியிருக்கிறார் என்று தெரியவில்லை.

கமல் காமராஜூ, டி எஸ் கே, ஜெயகுமார் இவர்களின் நடிப்பும் கதைக்கு பலமாகவே அமைந்திருந்தது.

அரோல் சங்கரின் கதாபாத்திரமானது மிகவும் வலுவானதாக இருந்ததால், அதில் இன்னும் சற்று கவனத்தை கூடுதலாக செலுத்தியிருந்திருக்கலாம்.

மணி பெருமாளின் ஒளிப்பதிவு படத்திற்கு சற்று பலமாக அமைந்திருந்தது. சந்தோஷ் தயாநிதியின் இசையும் பெரிதாக குறை கூறும்படியாக இல்லை.

வேகமாக சென்ற முதல் பாதியானது இரண்டாம் பாதியில் சற்று வேகம் குறைந்து எரிச்சலடைய வைத்துவிட்டது திரைக்கதை.

நல்லதொரு க்ரைம் திரில்லர் படத்தினை எடுக்க நினைத்த இயக்குனர், அதில் ஆங்காங்கே சற்று சறுக்கியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். க்ளைமாக்ஸ் காட்சியில் வைத்த ட்விஸ்ட் சற்று கவனிக்கும்படியாக இருந்தது.

எனினும், க்ரைம் த்ரில்லர் பட விரும்பிகள் ஒருமுறை நிச்சயம் பார்க்கலாம் என்ற நிறைவோடு விமர்சனத்தை முடித்துக் கொள்ளலாம்..

Facebook Comments

Related Articles

Back to top button