Spotlightசினிமா

“சமூக ஊடகங்களில் திட்டமிட்டு தவறான தகவல் பரப்பப்படுகிறது” – வேடன் அதிரடி விளக்கம்!

சமூக ஊடகங்களில் தன்னைப் பற்றி பரவி வரும் தவறான தகவல்கள் குறித்து கலைஞர் வேடன் விளக்கம் அளித்துள்ளார். சவூதி அரேபியாவில் பன்றி இறைச்சி உணவுகள் பரிமாறும் ரெஸ்டாரெண்ட் செயினை தொடங்க இருப்பதாகவும், அது தொடர்பாக வேடன் அறிக்கை வெளியிட்டதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்த நிலையில், அவை முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வேடன் வெளியிட்டுள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது:

“பொதுவாக தனிப்பட்ட முறையில் பரவும் இதுபோன்ற தகவல்களுக்கு நான் பதிலளிப்பதில்லை. ஆனால், தற்போது சமூக ஊடகங்களில் என்னைப் பற்றிய தவறான தகவல் திட்டமிட்டு பரப்பப்பட்டு வருவதால், இதற்கு விளக்கம் அளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவில் பன்றி இறைச்சி உணவுகள் பரிமாறும் ஒரு ரெஸ்டாரெண்ட் செயினை தொடங்கப் போவதாகவும், அது தொடர்பாக நான் அறிக்கை வெளியிட்டதாகவும் சில சமூக ஊடகப் பதிவுகள் மற்றும் தகவல்கள் பரவி வருகின்றன.

இந்தத் தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. இதுபோன்ற எந்த அறிக்கையையும் நான் வெளியிட்டதில்லை.

வளைகுடா நாடுகளில் தொழில் தொடங்கும் திட்டம் இல்லை

சவூதி அரேபியாவிலோ அல்லது வேறு எந்த வளைகுடா நாட்டிலோ ஹோட்டல், ரெஸ்டாரெண்ட் அல்லது உணவு சார்ந்த தொழில் தொடங்கும் எந்தத் திட்டமும் தனக்கு இல்லை என வேடன் தெரிவித்துள்ளார்.

மேலும், இதுதொடர்பாக எந்த நிறுவனத்துடனும் கூட்டாண்மை, விண்ணப்பம் அல்லது தொழில் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

சவூதி அரேபியாவிற்கு தான் செல்வது நிகழ்ச்சிக் கலைஞராக, அங்குள்ள நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் அழைப்பின் பேரிலேயே எனவும் வேடன் குறிப்பிட்டுள்ளார்.

“ஒவ்வொரு நாட்டின் சட்டங்களையும் கலாச்சாரத்தையும் மதிக்கிறேன்”

தன்னை அழைக்கும் ஒவ்வொரு நாட்டின் சட்டங்கள், நம்பிக்கைகள், கலாச்சாரம் மற்றும் பழக்கவழக்கங்களை தான் எப்போதும் மதித்து வருவதாக கூறியுள்ள வேடன், அதற்கு எதிரான தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் எந்தவொரு கருத்தையோ செயலையோ தான் மேற்கொண்டதில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும், இதுபோன்ற தவறான தகவல்கள் பரப்பப்படுவது இது முதல் முறை அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தனது நிகழ்ச்சிகளின் எண்ணிக்கையும் வரவேற்பும் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வரும் நிலையில், அதே காலகட்டங்களில் இதுபோன்ற தவறான தகவல்கள் பரப்பப்படுவது தற்செயலான ஒன்று என்று தான் கருதவில்லை எனவும் வேடன் கூறியுள்ளார்.

“எனது கலைப் பயணத்தை யாராலும் தடுக்க முடியாது”

தனது கலைப் பயணத்தையும், தன்னை நம்பும் பார்வையாளர்களுடனான உறவையும், சர்வதேச நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடனான தொழில்முறை உறவுகளையும் பாதிக்கும் நோக்கத்துடன் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் முயற்சியாகவே இதை பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

“எந்தவிதமான பின்னணியும் இல்லாமல், வாய்ப்புகள் கிடைக்காத சூழலிலிருந்து, என்னை நம்பிய மனிதர்களின் ஆதரவால் மட்டுமே இன்று நான் இருக்கும் இடத்தை அடைந்துள்ளேன். அந்த நம்பிக்கை எனக்கு மிகப்பெரிய பொறுப்பும், அதே நேரத்தில் எனது மிகப்பெரிய பலமும் ஆகும்.

ஒரு கலைஞன் தனது சொந்த முயற்சியால் கீழ்மட்டத்திலிருந்து உயர்ந்து வருவது சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், இதுபோன்ற திட்டமிட்ட பிரச்சாரங்களால் எனது கலைப் பயணத்தை யாராலும் தடுக்க முடியாது.”

சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் – வேடன்

தவறான தகவல்களை பரப்பிய சமூக ஊடகக் கணக்குகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய விவரங்களை தங்களது குழு சேகரித்து பதிவு செய்துள்ளதாக வேடன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சமூக ஊடகங்களில் இதுபோன்ற தகவல்களை பகிர்ந்து வருபவர்கள், எந்த தகவலையும் மற்றவர்களிடம் பகிர்வதற்கு முன்பு அதன் உண்மைத் தன்மையை சரிபார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் வேடன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக தன்னை நேரடியாக தொடர்புகொண்டு விசாரித்தவர்களுக்கும், உண்மையை புரிந்துகொண்டு தனக்கு ஆதரவாக நின்றவர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

“இதுபோன்ற தவறான பிரச்சாரங்கள் எனது இசையையோ, எனது கலைப் பயணத்தையோ ஒருபோதும் தடுக்காது. எனது நிகழ்ச்சிகளில் சந்திப்போம். ஜெய் பீம்.”

– வேடன்

Facebook Comments

Related Articles

Back to top button